திங்கள், 14 ஆகஸ்ட், 2017

நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு: நிர்மலா சீதாராமன்

nirmala
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த விலக்கு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் மூலம் மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயனடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்தை வரவேற்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்குக் கோர வகை செய்வதற்கான அவசரச் சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்களிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக முதல்வர் பழனிசாமி, மக்களவைத் துணைத்தலைவர் தம்பிதுரை, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பலமுறை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு தரமுடியாவிட்டாலும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையே நீட் தேர்வு கட்டாயம் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், இந்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் எனக் காத்திருக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது.
இந்நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஓராண்டு மட்டும் விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்ற மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்டு பலமுறை பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சந்தித்தனர். அதுபோல, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவையும், என்னையும் தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் தமிழகத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கு மட்டும் இன்னும் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் அரசு கல்லூரி இடங்கள், தனியார் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களும் என ஏறக்குறைய 4,000 இடங்களில் சேருவதற்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அரசுக் கல்லூரி தொடர்பாக மட்டும் அவசரச் சட்டம் மூலமாக ஓராண்டுக்கு விலக்கு கொடுங்கள் என்று தமிழக அரசு கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால், மாநில அரசுக்கு, மத்திய அரசு ஒத்துழைக்கத் தயாராக உள்ளது.
ஆனால், நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க முடியாது. தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி, கூடுதல் தகுதி வாய்ந்த பயிற்சி கொடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற வழி செய்தால் தமிழக மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் உள்ள இடங்களிலும் சேரமுடியும்.
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், நானும் பிரதமரை சந்தித்து விளக்கினோம்.
மேலும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். எனவே தற்போதுள்ள நிலைமையை விளக்கி தமிழக அவசரச்சட்டம் இயற்றினால், விலக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக