செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

சிலிண்டர் மானியம் ரத்து ஏன்?

அருண் நெடுஞ்செழியன்: சமையல் எரிவாவு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வருகிற மானியத்தை அடுத்த ஆண்டு முதலாக ரத்து செய்யப்போவதாகவும், மேலும் ஆண்டுதோறும் சிலிண்டர் விலையை உயர்த்திக் கொள்வதற்கு அனுமதி வழங்குவதகாவும் மத்திய அரசின் எண்ணெய் எரிசக்தி துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? எதன் அடிப்படையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என விளங்கிக்கொள்வது அவசியம்.
ஏகாதிபத்திய கட்டத்தில், அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் பெரும் நிதி மூலதனக்காரர்கள், இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளுக்கு பெரும் நிதி மூலதனங்களை கடனாக வழங்குகிறார்கள். உலக வங்கி, பன்னாட்டு நிதியகம் போன்ற பெரும் நிதி கட்டமைப்பு மூலமாக இந்த கடன் உதவிகள் வழங்குவதும் பெறுவதும் முறைப்படுத்தப்படுகிறது.

எந்த ஒரு நாடு, தனது சொந்த வருமானத்தைக் கொண்டு நாட்டின் உட்கட்டுமானத்திற்கும், இதர திட்டங்களுக்கும் முதலீடு செய்கிறதோ, அந்நாடு விரைவாகவும் வேகமாகவும் “சுயமாக” வளர்ச்சி பெரும். மாறாக இந்த ஒரு நாடு, தனது நாட்டின் உட்கட்டுமானம் மற்றும் இதர திட்டங்களுக்கு அந்நிய மூலதனத்தை கடனாக பெற்று உள்நாட்டில் முதலீடு செய்கிறதோ, அந்நாட்டின் வளர்ச்சி மெதுவாகவும் ஆபத்து மிக்கவையாகவும் “வெளிநாட்டை சார்ந்துள்ள” வளர்ச்சியாக இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நேருவின் காலம் தொட்டே, சொல்லளவில் சோசலிசம், நடைமுறையின் அந்நிய மூலதனத்தை, அன்னிய தொழில்நுட்ப முதலீட்டை சார்ந்தே உள்நாட்டு வளர்ச்சியை முடுக்கிவிடப்பட்டு வந்தது.
இதன் காரணமாக நாட்டின் அந்நிய கடன் சுமை நாளுக்கு நாள் பெருகியது. கடனுக்கு வட்டி கட்டுவது, அரசின் மற்ற செலவீனத்தை கட்டுப்படுத்தியது. 80 களின் இறுதியின், நாட்டின் வரவு செலவில் பெரும் இடைவெளி ஏற்பட, வேறு வழியில்லாமல் பன்னாட்டு நிதி மூலதனக் காரர்களிடம் முழுவதுமாக இந்திய அரசு சரணடைந்தது. இதற்கு கைமாறாக நாட்டின் முக்கிய துறைகள், அந்நிய முதலீட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
இது ஒருபுறம், மறுபுறம் இந்திய ஆட்சியாளர்கள் பெரும் நிதி மூலதனக்காரர்களிடமிருந்து கடன் வாங்குவதை நிறுத்தவே இல்லை. நாட்டின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றது.
சாலை போடுகிற திட்டமென்றாலும், குளம் தூர்வாருகிற திட்டம் என்றாலும், மின்சார கம்பம் நடுவதென்றாலும் அந்நிய கடனை சார்ந்த உலக வங்கி திட்டமாகவே இருந்தது..
ஒரு கட்டத்தில், இந்த கடன் சுமையும் வட்டி சுமையும் நாட்டின் நிதி நிலையை நெருக்கடிக்கு கொண்டு வருகிறது.
நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதில் சென்றுவிடுகிறது. ஆக, வரவிற்கும் செலவிற்குமான நிதிப் பற்றாக் குறையை சமாளிப்பதற்கு அரசானது “அனாவசிய” செலவீனங்களை நிறுத்திக்கொள்கிறது..
அதாவது, நாட்டின் வருமானத்தை, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்டு வந்த நிதிகள் அனாவசிய செலவாக கருதப்பட்டு, இந்த செலவுகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதி, சுகாதாரம் மற்றும் கல்விக்கு ஒதுக்கப்படுகிற நிதி அனாவசிய செலவாக வெட்டப்படுகின்றன.
தற்போது மோடியின் ஆட்சியில் இந்திய அரசின் அந்நியக் கடன் சுமையானது. அதன் வரலாற்றில் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் வங்கி தகவலின்படி இந்தியாவின் அன்னிய கடன் சுமார் 485.6 பில்லியன் டாலர் ஆகும்.
தற்போது இந்தியாவிற்கு கடன் வழங்கி வருகிற நாடுகள், கடன் தருவதை நிறுத்திவிட்டால் நிலைமை மோசம்தான். வேறு வழியில்லாமல், மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கிரீசில், ஸ்பெயினில் இதுதான் நடந்தது. ஒரு கட்டத்தில் வங்கியில் பணம் எடுக்கக்கூட இயலாமல் மக்கள் ரோட்டிற்கு வந்தனர். இந்தியா இந்நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. அதன் ஒரு அறிகுறிதான் சமூக நலத்திட்டங்கங்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை வெட்டுகிற நடவடிக்கையாகும்.
நியாய விலைக்கடை விநியோகம் ஆகட்டும், சிலிண்டர் மானியமாகட்டும், அல்லது சிறு குறு கடன்கள் ஆகட்டும், அல்லது சுகாதாரம் கல்வி ஆகட்டும் இதுதான் நடைபெறப் போகிறது. நடைபெறவும் தொடங்கிவிட்டது.
இன்று நம்முன் இரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஒன்று இந்த அராஜக முதலாளித்துவ ஆட்சியை ஏற்றுக் கொள்வது, அல்லது நமக்கான பொன்னுலகை நாமே படைத்துகொள்வது.. முதலாளித்துவ காட்டுமிராண்டித் தனமா? அல்லது சோசலிசமா?  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக