வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய தடை!

உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய தடை!
மின்னம்பலம் : பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை தமிழக அரசு பணியிடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் ஆதிக்கம் நிறைந்த ஒரு சூழலில், கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். பள்ளிக்கல்வித் துறை செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து, அவர் அந்த துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய முடிவுகளை எடுத்து செயல்படுத்திவருகிறார்.
கடந்த ஆண்டு வரை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக்கி விரட்டிக்கொண்டிருந்தனர். இதை பயன்படுத்திக்கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை ஒரு வெற்றிகரமான வணிகமாகவே நிறுவிட்டனர்.

இந்த சூழலில்தான், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் என்ற முறையை மாற்றி தரம் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்கச் செய்தார்.
தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள சிரமமாக இருக்கிறது. இதற்கு காரணம் சி.பி.எஸ்.இ. பாடநூல்களின் தரத்துக்கு மாநில பாடநூல்களில் பாடத்திட்டங்கள் தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசின் பள்ளி பாடநூல்கள், பாடத்திட்டங்கள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தரமான புதிய பாடத்திட்டங்களை உருவாக்க குழுவை உருவாக்கினார்.
உதயச்சந்திரனின் இந்த நடவடிக்கைகள் எல்லாமே, அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கானது. அரசு பள்ளிகளில் படிக்கும் சாதாரன ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கானது. அதுமட்டுமில்லாமல், அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படும்போது, மற்றவர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள். இதனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் என்று பயந்த சில தனியார் பள்ளி முதலாளிகள் உதயச்சந்திரனை வேறு துறைக்கு மாற்ற அழுத்தம் கொடுத்துவந்தனர். இதனால், உதயச்சந்திரன் பள்ளிக்கல்வித் துறை செயலர் பதவியிலிருந்து வேறு துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியது. உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் என பலதரப்பிலும் குரல்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயச்சந்திரன் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமலிங்கம் என்பவர் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது மகன் 10ம் வகுப்பு படிக்கிறார். அடுத்த ஆண்டு 11ம் வகுப்பு செல்லவிருக்கிறார். அவர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியாக வலுவான பாடத்திட்டத்தை உருவாக்கும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவை நீதிமன்ற கண்காணிப்பில் இயக்க வேண்டும். அதில், இடம் பெற்றுள்ள யாரையும் பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் குழு அளிக்கும் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொறுப்பில் பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் உள்ளார். தற்போது, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முடிவடையும் வரை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரையும் பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கும் குழுவினர் அளிக்கும் பரிந்துரைகளை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள உதயச்சந்திரனுக்கு தமிழக அரசு குழுக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வாய்ப்பை செயலருக்கு வழங்கும் வகையில் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி முடியும்வரை அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில், தமிழக அரசு விளக்கம் அளிக்கும் வகையில் விசாரணையை வருகிற ஆகஸ்ட் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக