செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

கோபாலபுரத்தில் கலைஞர் வைகோ சந்திப்பு ... உடல் நலம் குறித்து விசாரித்தார்!

கலைஞரை சந்தித்து உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். அப்போது முரசொலி பவள விழாவுக்கும்  வைகோ வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோபாலபுரத்துக்கு செவ்வாய்கிழமை இரவு சுமார் 8.15 மணியளவில் சென்ற வைகோவை திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
தமிழகத்தில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் சூழல்களுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னம்பலம் :திமுக தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 15ஆம் தேதி உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் நான்கு மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.உடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சைபெற்றுவரும் கருணாநிதியை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துவருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அவரது உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று(ஆகஸ்ட் 22) மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். அவருடன் திருப்பூர் துரைசாமி மற்றும் மதிமுக முன்னணி நிர்வாகிகளும் செல்கிறார்கள். 2015-ஆம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ சந்தித்தார். மேடையில் பேசுவதற்கு பாரதிய ஜனதா தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு முன்பாகவே அழைக்கப்பட்டார். அதுவரை திமுக கூட்டணிதான் என்று சொல்லிவந்த வைகோ, ”இது பெரிய அவமானத்தைத் தனக்கு ஏற்படுத்திவிட்டது” என்று குமுறியபடி மக்கள் நலக் கூட்டணி ஆரம்பித்து தோற்றதெல்லாம் பழைய கதை.
கடந்த டிசம்பர் மாதம் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவரை, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக்கண்ணு, அதிமுக எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் வந்து ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் விசாரித்து விரைவில் வீடு திரும்ப வாழ்த்து கூறினர்.
ஆனால்,கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு சென்ற வைகோவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவி-னர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்; செருப்பையும் வீசினர். இதனால் கருணாநிதியை சந்திக்காமல் திரும்பி விட்டார்.
இந்த சம்பவத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், காவிரி மருத்துவமனையில் வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்களுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். தொண்டர்கள் இத்தகைய சம்பவத்தில் ஈடுபடுவதில் எனக்கோ கருணாதிக்கோ சற்றும் உடன்பாடு கிடையாது என்று அவர் தெரிவித்திருந்தார்.
சமீபகாலமாக, திமுக-வுக்கு ஆதரவாக வைகோவும்,அவருக்கு ஏதேனும் பிரச்னை என்றால் வைகோவுக்கு தி.மு.க-வும் குரல் கொடுத்துவந்தது. ”வைகோ மீண்டும் திமுக கூட்டணியில் இணையப் போகிறார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்ற வைகோ, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் "அன்பு அண்ணன் திரு.வைகோ" அவர்களை மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பதற்கு, தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட... அதை திமுகவினரே ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
இந்நிலையில், 2½ ஆண்டுகளுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்தில் வைகோ இன்று மீண்டும் கருணாநிதியை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக