சனி, 12 ஆகஸ்ட், 2017

நேர்மையின் விலை.குட்கா வியாபாரியை டிஜிபியாக நியமித்த புளிமூட்டையிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?

udhayachandran
ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு, பன்னீர் செல்வமும், அதன் பின் புளிமூட்டையும் பதவியேற்ற பிறகு, ஒரு கோமாளி அரசாங்கம்தான் தமிழகத்தில் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது என்பதை தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கோமாளிகள் போட்டி போட்டுக் கொண்டு விடுக்கும் அறிக்கைகளும், நடத்தும் நாடகங்களும் நமக்கு சிரிப்போடு சேர்த்து வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஆனால் இத்தனை வேதனைக்கு இடையிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையானோர் மற்றும் எதிர்க்கட்சிகள் பாராட்டிய ஒரே விவகாரம் என்னவென்றால், தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள்.    2011 ஜெயலலிதா ஆட்சி காலம் முழுக்க பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்தவர் சபீதா ஐஏஎஸ். ஜெயலலிதா உத்தரவின்படி, பாடப்புத்தகங்களில் இருந்து கருணாநிதி படத்தை அகற்றுவது, சமச்சீர் கல்வித் திட்டம் மோசமானது என்று நீதிமன்றத்தில் அறிக்கை அளிப்பது உள்ளிட்ட புரட்சிகராமான திட்டங்களையே அவர் 2011 முதல் செய்து வந்தார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக அடிமைகளுக்கு முளைத்த புதிய துணிச்சலால், ஐஏஎஸ் அதிகாரிகளை அவர்களாக மாற்றத் தொடங்கினார்கள். 


 அப்படி சபீதாவை மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் செயலாளராக கொண்டு வந்த அதிகாரிதான் உதயச்சந்திரன் ஐஏஎஸ்.  அவரைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் இல்லையென்றாலும், தமிழார்வலர், இலக்கிய விழாக்களில் கலந்து கொள்பவர் என்ற வகையில் அவர் மீது அபிமானம் உண்டு.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளரக பொறுப்பேற்ற முதல் வார ஞாயிற்றுக் கிழமை ஒன்றில், நீண்ட வருடங்களாக பராமரிப்பின்றி கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் என்று அறிந்தபோது அவர் மீதான மரியாதை உயர்ந்தது.  அவர் செயலராக பதவியேற்றவுடன் பல்வேறு மாற்றங்களை எடுத்து வந்தார்.   தமிழகத்தில் உள்ள மாவட்ட நூலகங்களில், யாருமே படிக்காத தீவிர இலக்கிய நூல்கள் பலவற்றை காண முடியும்.  இவற்றை நூலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் காணவே முடியாது.  ஆனால் இவையெல்லாம் இருக்கும் இடத்தில் ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு தயார் செய்வதற்காக வரும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப, முக்கிய ஆங்கில வார மற்றும் மாத இதழ்கள் ஒன்று கூட இருக்காது.  இது போன்ற இதழ்கள் அனைத்து நூலகங்களிலும் கிடைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.  சென்னை கன்னிமரா நூலகத்தின் நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை என்று இருந்ததை மாற்றி, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என்று மாற்றினார்.
தமிழகத்தின் கல்வி வரலாற்றையை மாற்றியமைக்கும் ஒரு அதிரடி சீர்திருத்தத்தை செய்தார்.  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகளின் பெயர்களை வெளியிடும் முறையை ரத்து செய்தார்.   இந்த முதல் மூன்று இடங்களை வெளியிட்டு, விளம்பரம் தேடும் பள்ளிகளைத் தவிர பிற அத்தனை தரப்பினரும் இதற்கு பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
மருத்துவம், பொறியியல் போன்ற முக்கிய படிப்புகளுக்கு விரைவில் பொது நுழைவுத் தேர்வு வரும், அதை தவிர்க்க இயலாது என்பதையும் உதயச்சந்திரன் உணர்ந்தார்.  இதன் காரணமாக, வெறும் ப்ளஸ் டூவில் மட்டும் மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பது மட்டுமே அவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து விடாது என்பது நமது மாணவர்கள் அகில இந்தியத் தேர்வுகளில் பெறும் வெற்றியின் அளவை வைத்து மதிப்பிட முடிகிறது.  ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ ஆகிய இரண்டும் பொதுத் தேர்வுகளாக இருப்பதால் அந்த மாணவர்களுக்கு, மற்றவர்களை விட போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது எளிதாக இருக்கிறது.
ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ பாடத்துக்கான மதிப்பெண் பாடவாரியாக 100ஆக குறைக்கப்ப்டடு, ஒவ்வொரு ஆண்டும் மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ முடிந்ததும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.  பள்ளிக் கல்வித் துறைக்கான ஆண்டு நிதி நிலை அறிக்கை, இரண்டு திருக்குறள்களும், ஒரு சில அறிவிப்புகளும் என்று சம்பிரதாயமாகவே இது வரை இருந்து வரும்.  ஆனால் இந்த முறை, செயல்படுத்தத்தக்க வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது.   அவற்றில் சில…
புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம்  ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.
31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.
திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும்  மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்
கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.
பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில்  கல்விக்கடன்  முகாம்கள் நடத்தப்படும்
ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும் 
மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்
காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்
மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்
123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்
இது போன்ற சீர்திருத்தங்கள் அனைத்தும் தமிழக மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தப்படுபவை.    வரவேற்கத் தகுந்தவை.  இந்த அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை உதயச்சந்திரனுக்கும், அத்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையனுக்கும் மிகுந்த நற்பெயரை ஏற்படுத்தித் தந்தன.  பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை முடிந்ததும், திமுகவின் மூத்த உறுப்பினர்கள், செங்கோட்டையனுக்கு பாராட்டு தெரிவித்ததே இதற்கு சான்று.
உதயச்சந்திரன் இத்தோடு நின்றிருக்கலாம்.   புதிய மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் தடையில்லா சான்று போன்றவை வழங்குவதை ஆன்லைன் மூலம் செய்வதற்கான திட்டத்தை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
தமிழகத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என்பன எப்படிப்பட்ட பணத் தொழிற்சாலைகள் என்பதை நாம் நன்கு அறிவோம்.   ஒவ்வொரு பள்ளி தொடங்குககையிலும், அடுத்த ஆண்டுக்கான தடையில்லா சான்றுகளை பெறுகையிலும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முதல், அமைச்சர் வரை, பணம் எப்படி புழங்கும் என்பது கல்வித் துறை குறித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.  அப்படி இருக்கையில், இது போன்ற பணம் கொழிக்கும் ஒரு பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தால் செங்கோட்டையன் சும்மா இருப்பாரா என்ன ?
செங்கோட்டையன் கோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்.  1991 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வனத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.   இப்போது போல மொட்டைக் காடுகளாக அல்லாமல் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழக காடுகள், தேக்கு, சந்தனம் போன்ற மரங்களால் நிறைந்திருந்தன.  அந்த காலத்தில், வனத் துறை தவிர்த்து, மரக் கடத்தலை தடுக்கவென்று, காவல்துறையில் தமிழகம் முழுக்க ஒரு தனிப் பிரிவு இருந்ததென்றால், மரக் கடத்தலின் தீவிரத்தை புரிந்து கொள்ளுங்கள். அந்த காலகட்டத்தில் வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் எப்படி சம்பாதித்திருப்பார் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.    போக்குவரத்துத் துறையிலும், பேருந்துகளுக்கு நட்டு போல்டு வாங்குவது முதல் அனைத்திலும் கொள்ளையடித்தார் செங்கோட்டையன்.
1996ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போடப்பட்டது.   அந்த வழக்கு நீண்ட நாள் நிலுவையில் இருந்து 2001ல் மீண்டும் ஜெயலலிதா பதவியேற்கும் வரையிலும் தொடர்ந்தது.   ஆனால் ஜெயலலிதா செங்கோட்டையன் மீதான வழக்கை கைவிடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.    அப்போது செங்கோட்டையன், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய அவருக்கு தெரிந்த ஒரு அதிகாரியை தொலைபேசியில் அழைத்தார்.   “சார் என் வழக்கை எப்படியாவது முடித்துக் கொடுங்கள்”   என்றார்.  அந்த அதிகாரியோ, கூலாக, சார், எங்க போனையெல்லாம் டேப் பண்றாங்க என்றதும், அதன் பிறகு செங்கோட்டையன் அந்த அதிகாரியிடம் இது நாள் வரை பேசுவதில்லை.
இப்படியெல்லாம் செங்கோட்டையன் ஒரு ஊழல் அரசியல்வாதி என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.  ஊழல் செய்யாதவனுக்கும், சுயமரியாதை உள்ளவனுக்கும் அதிமுகவில் என்ன வேலை ?  அதுவும் அவன் எப்படி மந்திரியாக முடியும் ?
அய்யோ இவன் கிட்டயா சிக்குனோம்..
அய்யோ இவன் கிட்டயா சிக்குனோம்..
ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும், ஆசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் நடைபெறும்.   1996 திமுக ஆட்சி காலம் வரை, இது போல கல்வியாண்டு மாற்றம் கிடையாது.  எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் தூக்கி அடிப்பார்கள்.   1996 திமுக ஆட்சியில்தான், ஆசிரியர்கள், கல்வியாண்டு தொடக்கத்தில் மட்டுமே மாற்றப்பட வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தார்கள்.  அதன் பிறகு, கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே, அரசியல்வாதிகளை அணுகி ஆசிரியர்கள் முன் பணம் தரத் தொடங்குவார்கள்.   அந்த முன் பணமெல்லாம் வசூலிக்கப்பட்டு, கல்வியாண்டின் தொடக்கத்தில், பெயருக்கு ஒரு கலந்தாய்வு என்று வைக்கப்பட்டு, அமைச்சர் பரிந்துரையில் அனைத்து மாறுதல்களும் நடக்கும்.  இதுதான் இந்த ஆண்டு வரை நடைமுறை.   இந்த முறை, அனைத்து கலந்தாய்வுகளையும், பொறியியல் நுழைவு கலந்தாய்வு போல, ஆன்லைன் முறையை கொண்டு வந்தார் உதயச்சந்திரன்.   தமிழகம் முழுக்க உள்ள அனைத்து ஆசிரியர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் செங்கோட்டையனிடமிருந்து, மற்ற அதிமுக அல்லு சில்லுகளின் பரிந்துரைகளையும் சேர்த்து மொத்தம் 1300 கோரிக்கைகள் வந்துள்ளன. ஆன்லைன் முறை மாறுதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இதில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார் உதயச்சந்திரன்.   ஒவ்வொரு ஆசிரியர் பணியிட மாறுதலுக்கும் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை புழங்கும்.  சராசரியாக 3 லட்சம் என்று வைத்துக் கொள்வோமே.   1300 பரிந்துரைகள் என்றால், செங்கோட்டையன் அடைந்த நஷ்டத்தை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
மெட்ரிகுலேசன் முறையிலிருந்து சிபிஎஸ்ஈ முறைக்கு ஒரு பள்ளி மாறினால், அதை வைத்து பெற்றோர்களிடம் பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்க முடியும்.  சிபிஎஸ்ஈ முறைக்கு ஒப்புதல் பெற, மாநில அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும்.  இப்படி தடையில்லா சான்று வழங்குவதற்கு, ஒரு பள்ளிக்கு அமைச்சர் வசூல் செய்து வந்த ரேட் 40 லட்சம்.     மார்ச் மாதம் முதல், இது வரை, 44 பள்ளிகளுக்கு எந்த கையூட்டும் கொடுக்காமல் தடையில்லா சான்று பெற வழி வகை செய்துள்ளார் உதயச்சந்திரன்.    இதிலும் செங்கோட்டையனுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
உதயச்சந்திரன் இது வரை முன்முயற்சி எடுத்து செய்த சீர்திருத்தங்களை எந்த ஐஏஎஸ் அதிகாரியும் செய்திருக்க முடியும்.  எந்த அமைச்சரும் செய்திருக்க முடியும்.  ஆனால் தமிழகம் நீட் தேர்வில் மிகவும் பின் தங்கும் அளவுக்கு நாம் கல்வித்துறையில் பின்னேற்றம் அடைந்துள்ளோமே தவிர இதுநாள் வரை நாம் கண்ட முன்னேற்றம் என்ன ?     இது வரை இருந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் இதை செய்திருக்கலாம்தானே ?  ஜெயலலிதாவோடு நெருக்கமாக, யாராலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்த சபீதா ஐஏஎஸ் இதை செய்திருக்கலாம்தானே ?  திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை சீரழிக்கும் பணியைத்தானே சபீதா செய்தார் ?
இப்போது உதயச்சந்திரன் முன் முயற்சியில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள், நிச்சயம், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுவன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.    இது போன்ற அதிகாரிகளால், அமைச்சர் செங்கோட்டையனுக்குத்தான் பெருமை. நியமிக்கப்பட்ட நான்கே மாதங்களில் உதயச்சந்திரன் மாற்றப்பட்டால், அவர் முன்னெடுத்த சீர்திருத்தங்களின் நிலை என்ன என்பதுதான் மக்கள் முன்பாக இருக்கும் கேள்வி.
தேக்கு மரத்தையும் சந்தன மரத்தையும் வெட்டி விற்று, 1996லேயே போதுமான அளவுக்கு சம்பாதித்திருந்தாலும், செங்கோட்டையனுக்கு ஆசை போய் விடுமா என்ன ?   இப்போது சம்பாதிக்க இருக்கும் கோடிகளை விட்டு விட மனது வருமா என்ன ?
புளி மூட்டை அரசு ஒரு விஷயத்துக்காக பாராட்டப்படுகிறது என்றால் அது கல்வித் துறை சீர்திருத்தங்கள் மட்டுமே.   அந்த நற்பெயரும், செங்கோட்டையனுக்கும், உதயச்சந்திரனுக்கும் செல்கிறது என்றால், அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க புளி மூட்டை முட்டாளா என்ன ?   உதயச்சந்திரனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று புளி மூட்டை செங்கோட்டையனிடம் வலியுறுத்தியிருக்கிறார்.   அவருக்கு பதிலாக யாரைப் போட வேண்டும் என்பதையும் புளி மூட்டையே பரிந்துரைத்திருக்கிறார்.  அது முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதவ். ஐஏஎஸ்.  2006 திமுக ஆட்சியில் சென்னை புறநகர் கமிஷனராக இருந்த ஜாங்கிட் மற்றும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதர் ஆகிய இருவரும் சேர்ந்து, வடநெமிலி கிராமத்தில் உள்ள ஏழை மக்களின் நிலங்களை ஏமாற்றி வாங்கினார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இணைப்பு.
அப்படிப்பட்ட ஒரு ஊழல் அதிகாரியான பிரதீப் யாதவைத்தான், பள்ளிக் கல்வித் துறை செயலராக நியமித்து, புளிமூட்டை உத்தரவிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குட்கா வியாபாரியை டிஜிபியாக நியமித்த புளிமூட்டையிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக