வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தோழர் கோவை ஈஸ்வரன் ... தமிழக மனித உரிமை வரலாற்றில் மிக முக்கிய தடம் பதித்த....


தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியத்தில் தொடங்கியவராயினும் வாழ்வின் பெரும் பகுதியை அரசுகளால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி இயக்கங்களோடு குடும்ப சகிதம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்.
யாரைப் பற்றிச் சொல்லும் போதும் அவர்களின் சாதியைச் சொல்ல வேண்டியது இல்லை என்பது உண்மை தான் . ஆயினும் ஈஸ்வரன் அவர்களைப் பற்றிச் சொல்லும் போது. அதைச் சொல்வது அவசியம் என நினைக்கிறேன் . கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் முறைப்படி மந்திரம் ஓதிப் பூணூல் அணிந்து கொள்ளும் அசாரமான குடும்பத்தில் பிறந்தவர் .எனினும் முற்றிலுமாகத் தன்னைச் சாதி விலக்கம் செய்து கொண்டு வாழ்ந்தவர் . மிகச் சிறிய வயதில் பூணூல் அணிவிக்க வீட்டுக்கு வந்த புரோகிதர் , இவர் மந்திரம் சொல்ல இயலாததைக் கண்டு , " நீ பிராமணன் இல்லை . சூத்திரனுக்குத் தான் பிறந்திருக்கணும்" எனச் சபித்ததைச் சொல்லிச் சிரிப்பார் ஈஸ்வரன்.

தமிழக மனித உரிமை வரலாற்றில் மிக முக்கியமாகத் தடம் பதித்த மேயர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து .
மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்த தோழர்கள் புலவர் கலியபெருமாள் , தியாகு ,
பஞ்சலிங்கம் ,
கிருஷ்ணசாமி ,
ஆகியோரின் தண்டனை ரத்தானதில் இவர்களின் பங்கு முக்கியமானது , அன்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த விடுதலைக்குப் பெரிதும் உதவினார் . எனினும் , அவர் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி எனவும் அவரைப் பாராட்டக் கூடாது எனவும் கட்சிக்குள் ஈஸ்வரனுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது . ஆனாலும் , நான்கு வரிகளில் மிகச் சுருக்கமாகக் கலைஞரை , ஈஸ்வரன் பாராட்டிய போது அவருக்கு ஒரு பொட்டலம் நிறைய மயிரை பார்சல் செய்து சிலர் அனுப்பினர் . "இது தலைமுடி அல்ல , அடி முடி " எனக் குறிப்பு வேறு , இப்படிப் பல அனுபவங்கள் .
தோழர் சாரு மஜூம்தார் சென்னைக்கு வந்த போது மாநிலக் குழு கூட்டத்தில் 'அழித்தொழிப்புப் பார்வை தவறு ' என ஈஸ்வரன் விமர்சனம் வைத்தார் . அதையொட்டி ஈஸ்வரன் மாநிலப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் .
தமிழகத்தில் ஏ ,எம் , கே- முதலானோரும் இணைந்து . மக்கள் யுத்தக் குழு (PW G ) உருவாக்கப்பட்ட போது . புரட்சிப் பண்பாட்டு இயக்கம் அதன் மாத இதழான செந்தாரகை , ஆகியவற்றில் ஈஸ்வரன்
கோ , கேசவன் ,
பழமலய் ,
அ , மார்க்ஸ் ஆகியோருடன் சேர்ந்து செயல்பட்டது ஒரு பொற்காலம் " என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் .
செந்தாரகை , இதழிலும் என்னைச் சேர்த்திந்தனர் . நான் கலந்து கொண்ட முதல் கூட்டம் விழுப்புரத்தில் யாரோ ஓர் ஆதரவாளரின் வீட்டு மாடியில் நடந்தது அங்கு தான் ஈஸ்வரன் அவர்களை நான் முதன் முதலில் பார்த்தது , அந்த கூட்டத்தில் கோ , கேசவன் அறிக்கையை வாசித்தார் , அதில் ஓரிடத்தில் "அந்நிய மாதல் போன்ற மார்க்ஸிய விரோதக் கோட்பாடுகளை இங்கு சிலர் முன் வைத்துத் திரிகின்றனர் " என எஸ் , வி , ராஜதுரை , ஞானி, எஸ், என் , நாகராசன் போன்றோரைக் கேசவன் தாக்கியிருந்தார் நான் அதை மறுத்தேன் . "அந்நியமாதல் என்பது காரல் மார்க்ஸ் முன் வைத்த ஒரு கோட்பாடு . அதை எப்படி மார்க்ஸிய விரோதம் எனச் சொல்கிறீர்கள்" எனக் கேட்டேன் . என் கருத்தை அங்கிருந்தவர்களில் ஈஸ்வரன்தான் முதலில் ஆதரித்தார் .இறுதியில் அந்த வாசகம் அறிக்கையிலிந்து நீக்கப்பட்டது , வறட்டுத் தனமான அரசியலுக்கு ஈஸ்வரன் எப்போதுமே எதிராக இருந்தார் , அவர் மறைந்த அன்று நேரில் அஞ்சலி செலுத்த இயலாமல் நான் வெளிநாடொன்றில் இருக்க நேர்ந்ததை நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன. அ.மார்க்ஸ்
தடம் - ஆகஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக