சனி, 5 ஆகஸ்ட், 2017

இந்த அரசின் பிக்பாஸ் யார் ? தோழர் மாறன் உரை.. தஞ்சையில் “விவசாயியை வாழவிடு” மாநாடு


ஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் “விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை” என்ற தலைப்பில் தோழர் மாறன், மக்கள் அதிகாரம், தேவாரம், அவர்கள்  ஆற்றிய  உரையின் சுருக்கம்.
இந்திய விவசாயத்திற்கு ஏராளமான பாரம்பரியம் உண்டு என்று இந்திய அரசே சொல்கிறது. உலகில் காய்கறி ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது பெரிய நாடு. கோதுமை ஏற்றுமதியில் ஐந்து நாடுகளில் ஒன்று. காபி, தேயிலை , பால் ஏற்றுமதியில் முக்கியமான இடத்தில் உள்ளது இந்தியா. இவை எல்லாம் விவசாயிகளின் சொந்தமான சொத்து.
1886-இல் அகஸ்தர் ஒல்கர், இந்தியாவிற்கு விவசாய ஆய்விற்காக வருகிறார். அனைத்து மாநில விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்து எழுதுகிறார். நேரடி ஆய்வில் இந்திய விவசாயிகள் படிக்காதவர்கள் தான். அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. பருவமழை நீரை கொண்டு சிறப்பாக அறுவடை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று எழுதினர்.

கடந்த பத்து ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தில் மட்டும் 300 விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள். இது அரசின் புள்ளி விவரம் தான். இன்னும் வெளிவராத மரணங்கள் ஏராளமாக உள்ளது.
இந்த விவசாயிகள் செய்த தவறு என்ன?
ஆற்று மணலைக் கொள்ளையடித்தார்களா? தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தார்களா? அவர்கள் 100 சதவீதம் தங்கள் உழைப்பை கொடுத்து விவசாயம் செய்தது தான் தவறா? அவர்கள் சிறுபான்மையினரை வெட்டிக்கொல்லவில்லை, தலித் பெண்களை வன்முறை செய்யவில்லை.
டிராக்டர் கூலி, இடுபொருள் எல்லாம் ஏறிவிட்டது.  ஆனால் அதற்கான விலை கிடைக்கவில்லை. மறுபுறம் அன்றாட வாழ்க்கைச் செலவு கூடிக்கொண்டே செல்கிறது.  கடன் சுமை, அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  கிணற்றுக்குள் விழுந்தவன் எப்படி உயிரை காப்பாற்றிக்கொள்ள தவிப்பானோ அது போல தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள இந்த அரசிடம் கடனை தள்ளுபடி செய், மானியம் கொடு என்று போராடுகிறார்கள். விவசாயி கரையேறி விடக்கொடாது என்று அரசு நினைக்கிறது.
கதிராமங்கலத்தை காஷ்மீர் போல சுற்றி வளைத்து போலீசு தாக்குகிறது. காரணம் விவசாயி செத்து தொலையட்டும் என்று தனது கொள்கையாகவே வைத்துள்ளது அரசாங்கம்.
இந்த அரசு யாருக்கானது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் பிக்பாஸ் பார்க்க வேண்டும்.  வேலை இல்லாத வெட்டிபயல்கள் இருக்கும் இடம் தான் அது. அவர்கள் உள்ளே தூங்குவது, கிசு கிசு பேசுவது. இவர்களை எல்லாம் முப்பது கேமராக்கள் கொண்டு  கண்காணிப்பவர் தான் பிக்பாஸ்.. அதனை நமது நாடாளுமன்றத்திற்கு  பொருத்தி கொள்ளுங்கள். மோடி, சோனியா, மன்மோகன் போன்றவர்கள் உள்ளே இருக்கிறார்கள். இவர்களின் பிக்பாஸ் உலக வங்கி. கார்பரேட்டுகள். தான் சொல்வதை யார் செய்கிறார்களோ அவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தான் இப்பொழுது மோடி. மாட்டுக்கறி, GST உள்ளிட்ட அனைத்தும் கார்பரேட்டுகள் நலனுக்கானவை தான். அவர்கள் உத்தரவை செய்யவில்லை என்றால் பிக்பாஸ் உத்தரவுப்படி அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
2015 வேளாண் பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில்  இந்தியா சார்பாக கலந்து கொண்டது. அங்கே நீர் பாசனத்திற்கான நித்தியை ஒழித்து கட்டு, அதில் லாபம் இல்லை, கிணற்று பாசனத்தில் தான் லாபம் உள்ளது. அதற்கு மானியம் கொடு என்றார்கள். இதன் நோக்கம், பாசன முதலீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தான்.
அதனால் தான் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை, காவிரி நீர் திறக்கப்படவில்லை. இது தான் கார்பரேட் உத்தரவு. விவசாய கடனை ரத்து செய் என்று போராடினால் பொருளாதாரம் குறைந்து விடும் என்கிறார்கள். காரணம் கடனை ரத்து செய்தால் மீண்டும் விவசாயம் செய்வார்கள். திரும்ப கடன் வரும். ஆகவே கடனை ரத்து செய்ய முடியாது. விவசாயிகள் எப்படியாவது பிழைத்து கொள்ளட்டும். இல்லை எனில் சாகட்டும் என்று விடுகிறார்கள். விவசாயம் நிலம் சும்மா இருக்கிறது என்று நினைக்காதே, நிலத்தின் கீழே கனிம வளங்கள் உள்ளது. அதனை கொள்ளையடிக்கலாம் என்கிறது கார்பரேட். அதற்கு வேலை செய்கிறார் மோடி.
விவசாயத்தின் பேரழிவு, சமூகத்தின் பேரழிவு. எனவே இந்த மாநாடு ஒரு தொடக்கமாக இருக்க நாம் ஒன்றிணைந்து போராடுவது தான் தீர்வு.
  • வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக