வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

ஸ்டாலின் திட்டவட்டம் .. கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை

அதிமுகவில் நடக்கும் அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:< முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு, நீட் தேர்வு பிரச்சினையில் நல்லது நடக்கும் என்றார்கள். ஆனால், அவர்களுக்கு நல்லதை நடத்திக் கொள்வதற்காகவே டெல்லி சென்று வந்தனர் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. அவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நல்லதும் எப்படி மாறப்போகிறது என்பதை விரைவில் அனைவரும் பார்க்கப் போகிறார்கள்.
இப்படிச் சொல்வதால் ஏதோ நாங்கள் ஆட்சிக்கு வரத் துடிப்பதாக கருத வேண்டாம். ஆட்சி என்பது மக்களுக்கு பணியாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு. அதை கொல்லைப்புற வழியாக கைப்பற்ற நாங்கள் என்றும் விரும்ப மாட்டோம். இதுதான் கருணாநிதியின் கொள்கை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அதிமுகவின் இரு அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் பழனிசாமி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநருக்கு கடந்த 22-ம் தேதி ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், மும்பை சென்றுவிட்ட ஆளுநர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மாட்டோம் என அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுப்படுத்துவது போல, கொல்லைப்புற வழியாக ஆட்சியமைக்க விரும்பவில்லை என ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலை சந்திக்கவே திமுக விரும்புவதாகவும், அதனால் மெகா கூட்டணி அமைக்க ஸ்டாலின் வியூகம் வகுத்து வருவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமஈல்தேஹின்ன்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக