சனி, 5 ஆகஸ்ட், 2017

ராகுலை தாக்கிய பாஜக தொண்டர் கைது!

குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ.க தொண்டர் ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி ஆகஸ்ட் 04 ஆம் தேதி நேற்று பார்வையிட்டார். ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டியும், பிரதமர் மோடிக்கு ஆதரவான வாசகங்களையும் வைத்துக்கொண்டு பா.ஜ.க தொண்டர்கள் கோஷமிட்டனர். தானேரா பகுதியில் ராகுலின் பாதுகாப்பு வாகனத்தின்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளே இருப்பதாக ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து வந்த குஜராத் போலீஸார், தானேரா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஜெயேஷ் டார்ஜி என்பவரைக் கைதுசெய்துள்ளனர்.
ராகுல் காந்தி கார்மீது நடந்த கல்வீச்சு சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர்கோட்டத்தில், இன்று (5.8.2017) காலை 10.30 மணிக்கு தமிழகக் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் கட்சியினர் சாலை மறியல்செய்தனர்.

இவர்களைத் தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு.ஜெயகுமார், மாநில தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக