வியாழன், 31 ஆகஸ்ட், 2017

புளூவேல்: தமிழக மாணவர் மரணம்!

புளூவேல் விளையாட்டு காரணமாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளூவேல்: தமிழக மாணவர் மரணம்!புளூவேல் என்பது ரஷ்யாவில் தோன்றிய ஆன்லைன் விளையாட்டாகும். சர்வதேச அளவில் பல உயிர்களைப் பலிவாங்கியுள்ள இந்த விளையாட்டு தற்போது இந்தியாவிலும் தனது கொடூர வேட்டையைத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரே இந்த விளையாட்டு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இந்தியாவில் இந்த விளையாட்டின் தாக்கத்தால் நிகழ்ந்த முதல் மரணம் இது என்று கூறப்படுகிறது.
பின்னர், கேரளா உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த விளையாட்டு வேகமாகப் பரவியது. தற்போது தமிழகத்தின் மதுரையில் இந்த விளையாட்டு காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ் (19). இவர் பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2ஆம் ஆண்டு படித்துவந்தார். நேற்று (ஆகஸ்ட் 30) காலை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தன் இடது கையில் திமிங்கலத்தின் படத்தை வரைந்திருக்கிறார். புளூவேல் விளையாட்டு தொடர்பாக, நீலத் திமிங்கலம்… இது விளையாட்டு அல்ல விபரீதம்! ஒரு முறை உள்ளே போனால் வெளியில் வர முடியாது! என்ற குறிப்பையும் எழுதி வைத்துள்ளார்.

எனவே அவர் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தமிழகத்தில் புளூவேல் விளையாட்டு காரணமாக நிகழ்ந்த முதல் மரணம் இதுவாகும். எனவே, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை இந்த விளையாட்டு காரணமாகச் சர்வதேச அளவில் 3௦௦க்கும் அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புளூவேல் விளையாட்டு குறித்து புகார் அளிக்க பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7708806111 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குழந்தைகளைத் தனிமைப்படுத்தாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.   மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக