செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

ஆம் ஆத்மி வெற்றி! டெல்லியில் பாஜகவுக்கு மக்கள் கொடுத்த நெத்தியடி


ஆம் ஆத்மி வெற்றி!டெல்லி மாநில பாவனா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பாஜகவை இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது. தலைநகரில் நடைபெற்ற இந்தத் தேர்தல் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
டெல்லி மாநிலத்தில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. பிரகாஷ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து பாவனா தொகுதி எம்.எல்.ஏ. பதவி காலியானது.
இதையடுத்து, பாவனா தொகுதிக்குக் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நேற்று (ஆகஸ்ட் 28) அறிவிக்கப்பட்டது. இதில் ஆம் ஆத்மி பெரிய அளவில் வெற்றி பெற்று பாஜகவை வீழ்த்தி தனது தொகுதியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்தர் 59,886 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து பாஜக வேட்பாளர் வேத் பிரகாஷ் 35,834 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுரேந்திர குமார் 31,919 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர குமார் இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு வரை மூன்று முறை பாவனா தொகுதி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர். ஆனால், இந்த இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
டெல்லி மாநிலத்தின் பாவனா தொகுதி சுமார் 2.94 லட்சம் வாக்காளர்களைக்கொண்டு டெல்லியின் மிகப்பெரிய தொகுதியாக இருக்கிறது. டெல்லியில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாவனா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி 50,557 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 59,886 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது என்பது மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
பாவனா தொகுதி தேர்தல் முடிவு குறித்து டெல்லி ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகையில், “இதற்கு முன்பான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று அதைத் தூக்கி எறிந்துவிட்டு, பாஜகவில் இணைந்த வேத் பிரகாஷுக்கு டெல்லி பாவனா தொகுதி மக்கள் பாடம் கற்பிக்கும் வகையில் வாக்களித்துள்ளனர்”என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு டெல்லி மாநிலத்தில் உள்ள ரஜவ்ரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று டெல்லி சட்டப்பேரவையில் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்காக அதிகரித்துகொண்டது. அதேபோல, வேத் பிரகாஷ் பாஜகவுக்குச் சென்றதால் தனது உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்றை இழந்திருந்த ஆம் ஆத்மி இந்த பாவனா வெற்றி மூலம் மீண்டும் 66 உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மத்தியில் ஆளும் பாஜகவையும் எதிர்க்கட்சியான காங்கிரஸையும் தோற்கடித்திருப்பது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக