வியாழன், 31 ஆகஸ்ட், 2017

ஒரிஜினல் லைசென்ஸ் ஒரு ஒரிஜினல் மாமூல் திட்டம் ... அமைச்சர்கள் வரை பங்கு பிரிக்க வசதி ..

மேலும், ஒரு முறை உரிமம் தொலைந்து போனாலோ அல்லது போலிசோ, வட்டார போக்குவரத்து அலுவலரோ (RTO) சோதனையின் போது பறிமுதல் செய்தால் திரும்ப பெறுவது மிகவும் கடினம். RTO -விடம் இருந்து பெறுவதக்கு ஒரு வாரம் ஆகிவிடும். போலீசிடம் இருந்து பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆகிவிடும்.
மிழகத்தில் வரும் 2017, செப்டம்பர் 1 -ம் தேதி முதல் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்களும் தங்களது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை வாகன சோதனையின்போது காண்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டவர், போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர்! தமிழக அரசுப் பேருந்து டிப்போக்களையே வங்கியில் அடமானம் வைத்து ஆட்டம் போடும் அதிமுக அமைச்சர் இவர்.
தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்கள் 13 லட்சம், போக்குவரத்து அல்லாத பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் 2 கோடியே 20 லட்சம் என மொத்தம் 2.33 கோடி வாகனங்கள் உள்ளன. அதேபோல தமிழகத்தில் உள்ள 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 480 பேருக்கு பழகுநர் ஓட்டுநர் உரிமங்களும், 9 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேருக்கு நிரந்தர ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும்பொழுது போக்குவரத்து காவல் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டால் ஓட்டுனர்கள் தங்களின் ஓட்டுனர் உரிம நகலை காண்பிப்பது என்பது தான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நகல் நடைமுறையில் பல மோசடிகள் நடப்பதாக வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வருவதாக கூறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து துறை சார்ந்தவர்கள் கூறுவது என்ன?
சென்னை குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பழகுனர் ஓட்டுனர் உரிமம், மற்றும் புதுப்பித்து வழங்கக்கூடிய வேலையை கடந்த பதினைந்து ஆண்டாக செய்து வரும் ரிஸ்வான்,
“தமிழக அரசின் இந்த திட்டம் ஓட்டுனர்களை கடுமையாக பாதிக்க கூடியது தான். உதாரணமாக சென்னையில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் பெரும்பாலானவை வாடகைக்கு எடுத்து ஓட்டக் கூடியவை. இவர்கள் தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை ஆட்டோ உரிமையாளரிடம் கொடுத்து விட்டு தான் ஓட்டுவார்கள். ஆனால் இந்த முறை அமுல்படுத்தபட்டால் அவர்கள் எந்த நம்பிக்கையில் ஆட்டோக்களை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும், ஒரு முறை உரிமம் தொலைந்து போனாலோ அல்லது போலிசோ, வட்டார போக்குவரத்து அலுவலரோ (RTO) சோதனையின் போது பறிமுதல் செய்தால் திரும்ப பெறுவது மிகவும் கடினம். RTO -விடம் இருந்து பெறுவதற்க்கு ஒரு வாரம் ஆகிவிடும். போலீசிடம் இருந்து பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆகிவிடும்.
அதுபோக தொலைந்து விட்ட உரிமத்தைத் திரும்ப பெறுவதற்கு போலீசில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து அதனை RTO -விடம் ஒப்படைக்க வேண்டும். அந்த RTO, குறிப்பிட்ட இந்த நபருடைய ஒரு லைசென்ஸ் தங்கள் அலுவலகத்தில் உள்ளதா என்று கேட்டு கடிதம் எழுதுவார். அவர்கள் கொடுக்கும் பதிலில் இருந்து தான், புது லைசென்ஸ் கிடைக்கும். இதற்கு அவர் புது உரிமத்தையே எடுத்து விடலாம்.
அதுமட்டுமில்லாமல் 2016 டிசம்பர் 25 -ம் தேதிக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணங்கள் எல்லாம் அதிகரித்து விட்டன. குறிப்பாக ஆன்லைன் முறை வந்த பிறகு அதிகரித்து விட்டது. அதே போல ஆட்டோக்களுக்கு பெர்மிட் வாங்குவதற்கு ராணுவக்கொடி என்ற பெயரில் 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. ஆனால் வாங்கினால் தான் பெர்மிட் கொடுப்போம் என்ற நிலை வந்து விட்டது. லைசென்ஸ் வாங்குபவர்களிடமும் வசூலிக்கிறார்கள்.
ஆன்லைன் முறை என்பதே இந்த துறையை தனியார்மயமாக்குவதற்கு தான். இன்னும் ஒரு வருடத்தில் இந்த துறை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, போக்குவரத்து அலுவலர், இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற அதிகாரிகளும், புகைப்பட பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களை தவிர மற்ற அனைவரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்”, என்கிறார்.
சோமு, வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் தொலைபேசியில் கேட்டபோது :
இந்த திட்டம் என்பது அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் ஒரு திட்டம் தான். எங்களை போன்ற பயிற்சி பள்ளிகளுக்கு வருமானம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதன் மூலம் பாதிக்கப்பட போவது மக்கள் தான். இந்த திட்டம் அனைத்தும் தனியார்மயமாக்குவதற்கான வேலையை தான் மோடி செய்து வருகிறார், என்கிறார்.

வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் கதிரவன்
வாகனங்களுக்கு வேகக்கட்டுபாடு கருவி பொருத்தும் கதிரவன்,
ஏற்கனவே இந்த துறையை தனியார்மயமாக்க போவதா அறிவிச்சாங்க. அதுக்கான வேலை தான் இதெல்லாம். தனியார்மயமானவுடனே எந்த நிறுவனத்தோட வாகனமோ, அவனே எல்லாத்தையும் முடிச்சி கொடுத்துடுவான். அதுக்கப்புறம் எங்களுக்கெல்லாம் வேலையே இல்ல. மக்கள் அனைவரும் ஒண்ணா சேர்ந்து இந்த திட்டத்தையே எதிர்க்கணும் என்கிறார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் மதன்,
இந்த திட்டம் சிறப்பானது தான். வாகனம் ஓட்டுபவர்கள் லைசென்ஸ் வைத்திருப்பதே இல்லை. இந்த அறிவிப்பின் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும். மேலும் வாகனம் ஓட்டுவார்கள் பாதிபேர் இன்சூரன்ஸ் போடுவதில்லை. இந்த அறிவிப்பு இன்சூரன்ஸ் எடுக்க வழிவகுக்கும். அவர்களுக்கு இதன் மூலம் நன்மை தான் என்கிறார்.
இன்சுரன்ஸ் போட்டவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்குவதில்லையே என்று கேட்டால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் பதினைந்து நாட்களுக்குள் எங்களுக்கு தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம். இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். காப்பீடு பாலிசிக்காக வலையுடன் அலையும் இந்நிறுவனங்கள், விபத்து இழப்பீடு என்றதும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை கூறி அலைக்கழிக்கிறார்கள். ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் அதே கதைதான்.
ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் கூறுவது என்ன?
குன்றத்தூர் அலுவலகத்திற்கு வந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம்

ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம், அவருடைய மனைவி பேச்சியம்மாள்
நான் மூணு வருசமா வாடகைக்கு ஆட்டோ ஓட்டுறேன். என்னோட லைசென்ஸ் ஓனர்கிட்ட இருக்கு. இப்ப இந்த மாதிரி சொன்னா நாங்க எப்படி பொழைக்கிறது? இப்ப புது ஆட்டோ வாங்கலாம்னு நெனச்சேன். அதுக்கு “பெர்மிட்” வாங்க பேட்ச் இருக்கணும்னு சொல்றாங்க. பேட்ச் வாங்க படிச்சிருக்கணும். நான் படிக்கல. சரி என்னோட மனைவி பேர்ல வாங்கலாம்னு நெனச்சேன். யார் பேர்ல எடுக்கிறோமோ அவங்களும் பேட்ச் போட்டிருக்கணும்னு சொல்றாங்க. இதெல்லாம் என்ன சார் சட்டம். கடைசி வரைக்கும் நாங்க வாடகைக்கு தான் வண்டி ஒட்டணுமா? இந்த மோடி அரசாங்கம் பன்றதெல்லாம் பார்த்தா “தூக்கு போட்டு தற்கொலை” பண்ணிகிற நிலைமை தான் இருக்கு என்கிறார்.
டாடா ஏசி ஓட்டுனர் சுரேஷ்குமார், கேரளா
தமிழ்நாடு ஒரு கேனப்பயன் ஊர் சார். இங்க கேக்க ஆளு இல்ல. இதே கேரளாவுல இந்த மாதிரி அறிவிச்சா உடனே போராட்டம் தான் நடக்கும். சென்ட்ரல் கவர்மெண்டு இன்னா சொல்லுதோ அதை தான் இங்க இருக்கவங்க கேக்குறாங்க. இந்த திட்டம் போலீசு கொள்ளையடிக்க தான் வழிவகுக்குமே… ஜெராக்ஸ் வச்சிருந்தாலே காச புடுங்கிப்பானுங்க. இப்ப ஒரிஜினல் வேற சொல்ல வேணுமா. அவன் என்ன கேக்குரானோ அத கொடுக்கணும். போலிசை எதிர்த்து பேச முடியாது. எல்லாத்தையும் புடுங்கி கொளுத்திட்டு நம்ம கிட்ட எதுவுமே இல்லன்னு கேசு போடுவன். என்ன செய்வது? என்கிறார்.

லாரி ஓட்டுனர் சுரேஷ்குமார்
சுரேஷ்குமார், லாரி ஓட்டுனர்
எங்க வேலையில இதெல்லாம் சாத்தியமே இல்ல. எங்களோட லைசென்ஸ் ஓனர்கிட்ட தான் இருக்கும். ஏன்னா, ஏதாவது ஆக்சிடென்ட் பண்ணிட்டா விட்டுட்டு ஓடிவான்னு வாங்கி வச்சிப்பாங்க. போலிசு கேட்டா நாங்க எதை கொடுக்கிறது? நாங்க எப்பவுமே லுங்கி தான் கட்டிக்கிட்டு இருப்போம். போற இடத்துல படுப்போம். இதை எல்லாம் பத்திர படுத்தி வக்க முடியுமா? காணாம போயிட்டா, திரும்ப வாங்குற வரைக்கும் பொழப்பு இருக்காது. அவ்ளோ சீக்கிரம் வாங்கவும் முடியாது என்கிறார்.

பஞ்சர் கடை ராஜ்குமார்.
ராஜ்குமார், பஞ்சர் கடை
இந்த சட்டத்தால சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. தொலைந்து விட்டால் திரும்ப வாங்குறது தான் கஷ்டம் என்கிறார்.
ராமசாமி, இரும்பு பட்டறை தொழில் செய்பவர்.
இது ஜனநாயக நாடே கிடையாது. ஒரு சர்வாதிகார நாட்டுல தான் இந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் போட்டு மக்களை துன்புறுத்துவாங்க. இப்ப அதுதான் நடக்குது. இந்த சட்டத்தால மோசடிய தடுக்க முடியும்னு சொல்றாங்க. இதுல என்ன பெரிய மோசடிய தடுத்துட போறாங்க. பைக்கை திருடி போலியான ஆர்.சி. புக்கையே ரெடி பண்றாங்க. ஜிஎஸ்டி-ய கொண்டு வந்தது கூட தான் மோசடி. பெட்ரோல் விலை பதினைந்து நாளைக்கு ஒரு முறை ஏற்றப்படும்னு சொன்னாங்க. அப்புறம் தினமும் ஏறும்னு சொன்னாங்க. இன்னைக்கு ரூ.6 ஏறியிருக்கு. இது மோசடி இல்லையா? பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி வரி போடாம விட்டது மோசடி இல்லையா? இந்த அரசாங்கமே மோசடி பண்ற அரசாங்கமா தான் இருக்கு. இந்த சட்டத்தை யாரும் அவங்க பின்பற்றுவது கிடையாது. மக்களத்தான் கொல்றாங்களே.
ஹெல்மட் சட்டத்தை போட்ட நீதிபதிய ஹெல்மட் போட்டு ஓட்ட சொல்லுங்க. அதெல்லாம் ஓட்ட மாட்டாரு. ஹெல்மெட் போட்ட பிறகு எவ்ளோ ஆக்சிடென்ட் நடந்திருக்கு. பைக் ரேஸ்ல எவ்ளோ பேர் செத்து போயிருக்கான். இதையெல்லாம் இவங்க சட்டத்தால கட்டுபடுத்த முடியல. இப்ப ஒரிஜினல் லைசென்ஸ் தான் கட்டுப்படுத்த போகுதா? அரசாங்கத்துக்கு வருமானம் வேணும். அதுக்கு எந்த வழியிலாவது மக்கள் கிட்ட இருந்து புடுங்கனும். அதுக்கு தான் சார் இந்த சட்டமெல்லாம் உதவும் என்கிறார்.

***

ண்மை தான். தமிழத்தில் கடந்தாண்டில் மட்டும் 14 லட்சத்து 62 ஆயிரத்து 873 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு லைசென்ஸ் இல்லாதது, வரி செலுத்தாதது, அதிக பாரம் ஏற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக 2,37,649 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். லைசென்ஸ் இல்லாத காரணத்துக்காக மட்டும் 44,446 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அபராத கட்டணமாக போக்குவரத்து துறை 74 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கிறது.
மேற்கண்ட இந்த வருமானத்தில் மோசடி நடந்துள்ளது என்பதே உண்மை. கடந்த 2013 -ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 33 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரத்து 749 ரூபாய் அரசிற்கு வருமானம் ஈட்டித்ததுள்ளதாக RTO பாஸ்கரன் தெரிவித்தார். இந்த புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை மூலம் வரும் வருமானம் பல மடங்கு அதிரித்திருக்க வேண்டும்.
சென்னையில் திரும்பிய திசை எங்கும் போலீசின் வாகன தணிக்கை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் அதிக பணம் வசூலிப்பதாக மக்கள் புலம்பல் என்ற செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே? பல கோடிகள் கணக்கில் காட்டப்படாமல் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசும் ஏப்பம் விட்டுள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தற்பொழுது மோடி அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தம் -2017, வாகன பதிவு, எப்.சி., லைசென்ஸ் வழங்குவது, என அனைத்தும் தனியாரிடம் வழங்க வழிவகை செய்துள்ளது. அனைத்து விதமான வண்டிகளையும் குறிப்பிட்ட காலம் மட்டும் தான் இயக்க முடியும். ‘பெர்மிட்’ வழங்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறித்துவிட்டு கார்ப்பரேட் முதலாளிக்கு லட்சக்கணக்கான பெர்மிட் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இதன் மூலம் டிரைவர்கள், கனரக, இலகுரக வாகன உரிமையாளர்கள், இருசக்கரம் மற்றும் இரு சக்கர மெக்கானிக், பெயிண்டர், டிங்கர், எலக்ட்ரீசியன், வெல்டர், டயர் பஞ்சர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் கூலி அடிமைகளாக தள்ளப்படுவார்கள் என்ற மாபெரும் அபாயமும் உள்ளது.
எனவே போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கப்படுவதற்க்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளிகளும் ஒரே அணியில் திரண்டு எதிர்ப்பதன் மூலம் மட்டுமே எதிர்வரும் அபாயத்தை முறியடிக்க முடியும்.
நேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்
செய்தி ஆதாரம் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக