செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

மீண்டும் மெரினாவில் தியானம்... எடப்பாடி அரசைக் கவிழ்க்கும் தினகரன் எம்.எல்.ஏ-க்கள்!

மீண்டும் மெரினாவில் தியானம்... எடப்பாடி அரசைக் கவிழ்க்கும் தினகரன் எம்.எல்.ஏ-க்கள்!1. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி 2. கதிர்காமு, பெரியகுளம் 
3. ஜக்கையன், கம்பம் 
4. தங்கதுரை, நிலக்கோட்டை. 
5. முத்தையா, பரமக்குடி 
6. சுப்ரமணியன், சாத்தூர் 
7. ஜெயந்தி, குடியாத்தம் 
8. மாரியப்பன் கென்னடி, மானாமதுரை 
9. பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி 
10. செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி 
11. வெற்றிவேல், ஓமலூர் 
12. பார்த்திபன், சோளிங்கர். 
13. கோதண்டபாணி, திருப்போரூர் 
14. ஏழுமலை, பூந்தமல்லி 
15. ரெங்கசாமி, தஞ்சை 
16. பாலசுப்பிரமணியன், ஆம்பூர் 
17. முருகன், அரூர் 
18. சுந்தராஜ், ஓட்டப்பிடாரம்

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மெரினாவில் ஜெ நினைவிடத்தில் ஓ.பன்னீர் செய்த தியானத்தால் கட்சி இரண்டுபட்டது; குழப்பம் கும்மியடித்தது.
நேற்று ஆகஸ்ட் 21ஆம் தேதி ஓ.பன்னீரும் எடப்பாடி அணியினரும் இணைந்துவிட்ட நிலையில் நேற்று இரவு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டதால் அடுத்து என்னாகுமோ என்ற பதற்றம் அதிமுக-வில் ஏற்பட்டுள்ளது.

இதுவரை எக்காரணம்கொண்டும் அம்மாவின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்த மாட்டோம் என்று கூறிவந்த தினகரன், ‘துரோகத்தை வேரறுப்போம், கழகத்தைக் காப்போம்’ என்ற வார்த்தைகளை நேற்று ஆகஸ்ட் 21 இரவு 11 மணிக்கு மேல் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் இணைந்து ராஜ்பவனில் துணை முதல்வர் பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு, பின் தலைமைச் செயலகத்துக்கு வந்தநிலையில், டி.டி.வி.தினகரன் தனது அடையாறு இல்லத்தில் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, தன்னைக் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்ட கலைஞர் டி.வி. நிருபரிடம், “போய் உங்க தலைவர்கிட்ட சொல்லுங்களேன். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரச் சொல்லுங்களேன்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார். ஆக, திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தினகரன் விரும்புகிறார் என்பது புகழேந்தி கருத்தின்மூலம் அப்போதைக்கு யூகிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென 8 மணிக்கு தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 18 எம்.எல்.ஏ-க்கள் மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அரைமணி நேரம் தியானத்தில் ஈடுபட்டனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், “அன்று ஓ.பன்னீர் கட்சியைப் பிளவுபடுத்தியதால், எடப்பாடி பழனிசாமியைச் சின்னம்மா முதல்வர் ஆக தேர்வு செய்தார். சிறைக்குப்போகும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தார். அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால், துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அரும்பாடுபட்டு எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாத்து எடப்பாடி அரசை வெற்றிபெறச் செய்தார்.
ஓ,பன்னீரிடம் 10 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்கள் முக்கியமாக போய்விட்டனர் எடப்பாடிக்கு. நாங்கள் 25 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறோம். நாங்கள் முக்கியமில்லை அவருக்கு. அன்று இந்த ஆட்சியை எதிர்த்து செயல்பட்ட ஓ.பன்னீருக்காக இந்த ஆட்சியை ஆதரித்த எங்களைப் புறக்கணிக்கிறார் எடப்பாடி. அம்மாவிடம் முறையிட்டு தியானம் செய்திருக்கிறோம். நல்ல செய்தியை தருவோம்” என்றார்.
பின்பு பேசிய எம்.எல்.ஏ. வெற்றிவேல் பேசுகையில், “செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு ஆளுநர் எங்களைச் சந்திக்க நேரம் கொடுத்திருக்கிறார். அப்போது எங்கள் நிலையை அவரிடம் தெரியப்படுத்துவோம்” என்றார்.
நேற்று இரவு மெரினாவில் தியானத்தில் ஈடுபட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்
1. தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி
2. கதிர்காமு, பெரியகுளம்
3. ஜக்கையன், கம்பம்
4. தங்கதுரை, நிலக்கோட்டை.
5. முத்தையா, பரமக்குடி
6. சுப்ரமணியன், சாத்தூர்
7. ஜெயந்தி, குடியாத்தம்
8. மாரியப்பன் கென்னடி, மானாமதுரை
9. பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி
10. செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி
11. வெற்றிவேல், ஓமலூர்
12. பார்த்திபன், சோளிங்கர்.
13. கோதண்டபாணி, திருப்போரூர்
14. ஏழுமலை, பூந்தமல்லி
15. ரெங்கசாமி, தஞ்சை
16. பாலசுப்பிரமணியன், ஆம்பூர்
17. முருகன், அரூர்
18. சுந்தராஜ், ஓட்டப்பிடாரம்
இவர்களைத் தவிர இன்னும் சிலரும் இன்று காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து எடப்பாடி அரசுக்குத் தங்களின் ஆதரவை விலக்கிக்கொள்ளும் கடிதத்தைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக ட்விட்டரில் சொல்லியிருந்த தினகரன் நேற்று சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசித்தார். பிறகு இரவு 11 மணிக்குமேல் ட்விட்டரில் தனது சூடான கருத்துகளைக் கொட்டினார்.
“இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. 1989இல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.
அம்மா அவர்களின் மறைவுக்குப்பின் திரு.பன்னீர்செல்வத்தையும் பின் திரு.பழனிசாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களைக் கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள். நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படிதான் இவர்களால் இன்றைக்கு கைக்கோக்க முடிகிறதோ?
இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்? இன்றோ, இவர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம்.
இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடானுகோடி கழகத் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோக்கும் அளவுக்குச் சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். துரோகங்கள் ஒருபோதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் தினகரன்.
நேற்று இரவு மெரினாவில் இருந்து புறப்பட்ட 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் அங்கிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லவில்லை. எங்கேயோ பத்திரமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டென்ஷனாகியுள்ளனர்.
நேற்று மெரினாவுக்கு சென்ற 18 எம்.எல்.ஏ-க்களும் அரசுக்குத் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்குவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தால், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தது உறுதியாகும்.
அன்று கூவத்தூர் ஃபார்முலா மூலம் காப்பாற்றப்பட்ட எடப்பாடி அரசு... மீண்டும் அதேபோன்ற இன்னொரு ஃபார்முலா மூலம் வீழ்த்தப்படலாம் என்பதே இன்றைய நிலவரம்!

1 கருத்து: