திங்கள், 7 ஆகஸ்ட், 2017

விஜயதரணி + தினகரன் சந்திப்பு ... தமிழக காங்கிரசில் பூகம்பமாம்?

ஒன்னா இருக்க... இல்லன்னா ஓடிப்போங்க! அவர்களுக்கு அருகதையில்லை! விஜயதாரணி தாக்கு!
நக்கீரன் :ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவி அணி, தினகரன் அணி என மூன்றாக செயல்படுகிறது. இந்த அணிகளை பாஜகதான் இயக்குகிறது என்று மக்கள் மத்தியில் பேச்சு இருந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி, தினகரனை சந்தித்து அவரது மாமியார் இறந்த துக்கம் விசாரித்துவிட்டு அதிமுகவின் மூன்று அணிகளும் இணைய வேண்டும் என பேட்டி அளித்தார்.
இது மக்கள் மத்தியிலும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், 'காமராஜர் ஆட்சி என்ற கோசத்தோடு காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்று வரும் நிலையில், அதிமுகவை இணைக்க முயற்சிப்பது காங்கிரஸ் கட்சியின் வேலை இல்லை. காங்கிரஸ் தலைமை விரைவில அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், 'காங்கிரஸ் எம்எல்ஏ என்பதை மறந்து பேசுகிறார். இவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். மேலும் ராகுல்காந்தி வரை புகார் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்கள் குற்றச்சாட்டு குறித்து விஜயதாரணியிடம் கேட்டபோது

ராகுல்காந்தியே ஜெயலலிதா மரணத்திற்கு வந்ததோடு இல்லாமல் அடக்கம் செய்யப்படும்வரை இருந்தார். மோடி கூட வந்தவுடனேயே திரும்பிவிட்டார். ராகுல்காந்தி கடைசி வரைக்கும் இருந்தார். இதுமட்டும் சரியா?
அரசியல் நாகரிகம் கருதி ஒரு துக்கத்தையொட்டி விசாரிக்க சென்றோம். என் கணவர் இறந்தபோது தினகரன் மாமியார் ஆறுதல் கூறினார். ஜெ.வும் அப்போது தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 1999ல் காங்கிரசுடன் கூட்டணி இருந்தபோது தஞ்சாவூரில்
;டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து செயல்படவில்லை என்றால் அதிமுக அழிந்துவிடும். அங்க பாஜக வந்துவிடும். அதிமுகவை அழித்தால், திமுகவையும் அழிப்பார்கள். அடுத்து காங்கிரசும் இல்லாமல் போகும். இன்றைக்கு காங்கிரஸ், அதிமுக, திமுக சட்டமன்றத்தின் உள்ளே இருக்கிறது. ஒரு பாஜக எம்எல்ஏ கூட இல்லை. ஆனால் பாஜக செயல்படுகிறதே எப்படி? ஒரு எம்எல்ஏ கூட இல்லாத இடத்தில் பாஜக செயல்படுகிறது மத்திய அரசின் காரணமாக. அப்படியென்றால் எந்த அளவுக்கு பாஜகவின் தாக்கம் இருக்கிறது. அதைத்தான் நான் எதிர்க்கிறேன். ஆகையால் இருக்கக் கூடிய ஆளும் கட்சி பிரச்சனையில்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கட்சியை ஒருத்தர் நடத்துகிறார். ஆட்சியை ஒருத்தர் நடத்துகிறார். எல்லோரும் இணைந்து செயல்படும்போது அதிமுக என்ற கட்சி காப்பாற்றப்படும். அதனால் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உட்காராது.

;டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நீண்ட நாட்களாக கட்சியில் இருப்பவர்கள். இவர்கள் பாஜக சாயம் இல்லாமல் ஒற்றுமையாக இருந்து, தமிழ்நாட்டு மக்கள் எதை நம்பி இவர்களுக்கு ஓட்டு போட்டார்களோ அதை நிறைவேற்ற வேண்டும். கட்சி காப்பற்றப்பட வேண்டும். ஆட்சியும் இனி பாஜக ஆட்சியாக இல்லாமல் அதிமுக ஆட்சியாக தொடரட்டும். அதில் ஆட்சேபனையில்லை.

டிடிவி தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வரும்போது

காங்கிரசின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட மற்ற எம்எல்ஏக்கள் அமைதியாக இருக்கும்போது, இவர்கள் இருவரும் தினகரனுடைய சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து விஜயதாரணி முறையான விளக்கம் அளித்துவிட்டார் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறிவிட்டார். இவர்கள் இருவரும் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பிரின்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். பின்னர் த.மா.காவுக்கு போனவர். பின்னர் காங்கிரசுக்கு வந்தவர். அப்படி இருந்தும் எம்எல்ஏ சீட் கொடுத்திருக்கிறார்கள்.

ராஜேஸ்குமார் பெங்களுருவில் அதிமுக உறுப்பினராக இருந்தவர். அந்த உறுப்பினர் அட்டையும் என்னிடம் இருக்கிறது. அதிமுக கொடியை பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்தியவர். இங்க வந்து காங்கிரசில் இருப்பதாக கூறி சீட் வாங்கி எம்எல்ஏவாக ஆகிவிட்டார்.

வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே இவ்வளவு இருந்தால், சுதந்திர போராட்ட தியாகி  கவிமணி தேசியவிநாயம் பிள்ளை எங்க தாத்தா. குமரி மாவட்ட எல்லையில் தமிழ் மொழிக்காகவும் போராடினார். அதேபோல எங்க மாமா மகாதேவன்பிள்ளையும் குமரி எம்எல்ஏவாக இருந்தவர். காங்கிரஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தவர். எனது தாயார் மகளிர் காங்கிரசில் இருந்தவர். எனது தந்தை காமராஜர் காலத்தில் இருந்து காங்கிரசாருடன் பழகியவர். அனைத்து தலைவர்களுடன் பழகியவர். பாரம்பரியமாக எங்கள் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறது. இவர்களைப்போல வேறு கட்சியில் இருந்தும் வரவில்லை. வேறு கட்சிக்கு போய்விட்டும் வரவில்லை. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தது நான்தான். என்னுடைய கருத்து சுதந்திரத்திலேயோ, என் தனிநபர் வாழ்க்கை சுதந்திரத்திலேயோ தலையிட இந்த இரண்டு எம்எல்ஏக்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

இவர்கள் இருவரும் மற்ற கட்சியில் இருந்து வந்து எம்எல்ஏவாகி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மந்திரி வீட்டு வாசலில் நின்று சொற்ப பணத்திற்காக வேலை முடிக்கிற ஆட்கள் இவர்கள். நான் தைரியமாக கருத்து சுதந்திரம் உள்ள ஆள். நான் யாருக்கும் அடிபணிந்து போக வேண்டியதில்லை. இவர்கள் 'தினகரனை ஏன் தலைவராக சொன்னீர்கள். எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக ஏன் சொல்லவில்லை' என்று கேட்கிறார்கள். இவர்களுக்கு அந்த மந்திரிகளை வைத்து காரியம் ஆகணும். அதற்காக இவர்கள் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் காங்கிரஸ் நலனுக்காக சொல்லவில்லை. மந்திரிகளிடம் காரியம் ஆக சென்றிருப்பார்கள். அப்போது உங்க காங்கிரஸ் எம்எல்ஏ தினகரனை தலைவராக சொல்கிறாரே என்று கேட்டிருப்பார்கள். அதற்காக இவர்கள் இருவரும் என்னை பற்றி பேசியிருக்கிறார்கள்.

கேள்வி : நீங்கள் பாஜகவை விடக்கூடாது. அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஜனாதிபதி தேர்தலில் 3 அணியினரும் போட்டிப்போட்டு ஆதரித்துள்ளார்களே

ஜனாதிபதி தேர்தலின்போது 3 அணியைச் சேர்ந்த சிலர் கடும் வெறுப்பில் இருந்தனர். வேறு வழியில்லாமல் அடிபணிந்து ஒட்டுபோட்டார்கள். 30, 40 பேர் பாஜகவுக்கு ஒட்டு போட விருப்பமில்லாமல் இருந்தனர். எல்லா எம்எல்ஏக்கள் வீட்டிலும் ரெய்டு வந்துவிடும் என்று நெருக்கடி கொடுத்ததால் பயந்துவிட்டார்கள். பாஜகவினர் எங்க என்ன பண்ணுமோ, அதை பண்ணுகிறார்கள். கையும், காலையும், உடம்பையும் இறுக்கிவிடுறார்கள். இந்த தைரியம் எங்க தலைவர்களுக்கு இல்லை. அமித்ஷாவுக்கு உள்ள தைரியும் எங்க தலைவர்களுக்கு இல்லை. எங்கள் தலைவர்கள் ஜனநாயகத்தை பார்க்கக் கூடியவர்கள். அப்படியெல்லாம் தொந்தரவு செய்யக் கூடாது என நினைப்பவர்கள்.

கர்நாடகாவில் சிவக்குமாரை கொடுமைப்படுத்துகிறார்கள். ஒரு பைசா கூட அவர் வீட்டில் இருந்து பறிமுதல் பண்ணவில்லை. யார் யாரோ சம்பந்தமில்லாத கார்ப்பரேட் கம்பெனியில் பிடிச்சதையெல்லாம் இவர் கணக்கில் சேர்த்துவிட்டார்கள். எந்த அளவுக்கு காங்கிரசில் இருப்பவர்களை டார்ச்சர் செய்யணும்முன்னு வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கொண்டுவருகிறார்கள். அருணாச்சலப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட்டில் எம்எல்ஏக்களை டார்ச்சர் செய்து எவ்வளவு பிரிவிணையை செய்கிறார்கள். இதேபோல் அதிமுகவில் செய்கிறார்களா இல்லையா. நான் ஒரு எம்எல்ஏவாக இருந்து இதைக்கூட தடுக்கவில்லை என்றால் எப்படி.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் மூன்று அணியினரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதையே தொடர்ந்து செய்தார்கள் என்றால் நீட், ஜிஎஸ்டி போன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விசயங்களில் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மக்கள் நலனை புறக்கணிப்பதுபோல் ஆகிவிடும். ஆகையால் கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் வெளியே இருக்கிற ஓ.பி.எஸ். எல்லாம் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் ஒரு கண்டிசன் போட்டுருக்கலாம். நீட்டில் விலக்கு அளித்தால்தான், விவசாயிகளின் பொதுத்துறை வங்கிகளின் கடன்களை ரத்து செய்தால்தான் ஆதரவு அளிப்போம் என்று கண்டிசன் வைத்திருக்கலாமே. கட்சி ரீதியாக ஒன்று சேர்ந்திருந்தால் இதனை வலியுறுத்தியிருப்பார்கள். பிரிந்து தனித்தனியே நிர்பதால்தான் பாஜகவிடம் சரணாகதியாகிறார்கள். 

தனித்தனியா நிற்பதால் தங்களுக்கு பலம் இல்லை. மத்திய அரசால்தான் நாம் நிற்க முடியும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒன்றாக இருந்தால் பயம் இருக்காது. இதற்காகத்தான் ஒற்றுமையாக இருக்க சொல்வது. இப்படியே மீதி வருடமும் இந்த ஆட்சி ஓடுச்சுன்னா என்ன ஆகும் தமிழக மக்களின் நிலைமை. கட்சியாவோ, ஆட்சியாவோ ஒன்னா இருந்து பண்ண முடியலயா ஆட்சியை விட்டுபோங்க. இருந்தால் ஒன்னா இருக்க. இல்லன்னா ஓடிப்போங்க.

இப்படியே 4 வருசமும் ஓடப்போவதுன்னா, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியலன்னுதானே அர்த்தம். வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை  சோதனை என இங்கிருப்பவர்கள் மீது  அவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, இங்கிருப்பவர்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதில்லை.

கேள்வி :  நீட் தேர்வு போன்ற மாநில பிரச்சனைகளில் அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை. மத்திய பாஜக அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்கிறீர்களே. ஒரு மக்கள் பிரதிநிதி இப்படி சொல்கிறாரே என மக்கள் நினைக்க மாட்டார்களா?

எதிர்க்கட்சி நல்ல அட்வைஸ்சும் கொடுக்கலாம். எதிரி கட்சியாக இருக்கக்கூடாது. ஆளும் கட்சிக்கு அறிவுறுத்தும் இடத்திலேயும் இருக்க வேண்டும். என்ன செய்வது இந்த ஆட்சியை அகற்றவும் முடியவில்லை. 122 நம்பர் என உட்கார்ந்திருக்காங்க. என்னதான் அணிகளாக செயல்பட்டாலும் இவர்கள் உள்ள 122 என்பதுபோல காண்பித்துக்கொள்கிறார்கள்.

கேள்வி : இது ஊழல் ஆட்சி என்று குற்றம் சாட்டியுள்ள ஓ.பி.எஸ். தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறாரே?

இந்த ஆட்சியின் முதல் பகுதியை நடத்தியவர் அவர்தானே. அப்ப நடந்த ஊழல் என்ன கணக்கு. ஊழல் அரசு என்று அவர் சொன்னால் அவர் தன் மீதே சேற்றை வாரி இறைத்துக்கொள்கிறார் என்றுதான் சொல்வேன். இவர்கள் எல்லாருமே மக்களுக்காக போராடக்கூடிய இடத்தில் இல்லையென்றால் மக்கள்  இவர்களை  புறக்கணிப்பார்கள். பாஜகவுக்கு இடம் தர மறுப்பார்கள். ஆனால் 4 வருசம் தமிழக மக்களுக்கு  எந்த நன்மையும் இல்லாத சூழல்தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. அனைவரும் சேர்ந்து மத்திய பாஜக அரசுக்கு நீட், ஜிஎஸ்டி, விவசாயிகள் கடன் தள்ளுபடி போன்றவற்றிக்கு அழுத்தம் கொடுங்கள். முடியவில்லையா... ஆட்சியைவிட்டுவிட்டு போங்கள். முடிந்தால் இன்னொரு தேர்தலை சந்தியுங்கள். மக்கள்தானே உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்களுக்காக குரல் கொடுக்காமல் எதையும் சாதிக்க முடியாத இடத்தில் இருக்காதீர்கள்.

-வே.ராஜவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக