செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

BBC : ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு


வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ''முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து'' என்று வர்ணித்துள்ளார்.
அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும். கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று, தனது கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து மூன்று குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஜப்பானுக்கு அப்பால் இந்த அண்மைய ஏவுகணை பறந்ததால் அப்பகுதி முழுவதும் எச்சரிக்கைகளை உண்டாக்கிய போதிலும், ஜப்பானின் பிரதான ஒலிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே, இந்த ஏவுகணை முயற்சியால் எந்த சேதமும் இருந்ததற்கான அறிகுறியும் இல்லையென தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை ''மூர்க்கத்தனமான செயல்'' என்றும், தங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவும் ஒரு தீவிரமான மற்றும் மோசமான ஆபத்து என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேலும் கூறியுள்ளார்.
தனது அரசு மக்களின் உயிர்களை பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக