புதன், 9 ஆகஸ்ட், 2017

BBC : தன்யா ராஜேந்திரன் மீது விஜய் ரசிகர்கள் சமுகவலையில் கடும் விமர்சனம்!

நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த தி நியூஸ் மினிட் பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
;கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, ஷாருக்கான் நடித்த ’When Harry met Sejal’ படம் குறித்து தனது கருத்தை தன்யா டிவிட்டரில் தெரிவித்தபோது, "விஜய்யின் சுறா படத்தை இடைவேளை வரை பார்த்தேன்; அதற்குப் பிறகுதான் எழுந்து வெளியில் வந்தேன். ஆனால், #Whenharrymetsejal அந்த சாதனையை முறியடித்துவிட்டது. இடைவேளைவரைகூட பார்க்க முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த டிவீட், ஷாருக்கானின் படம் குறித்ததாக இருந்தாலும் விஜய்யின் படமும் அதில் கேலி செய்யப்பட்டிருப்பதால் ஆத்திரமடைந்த விஜய்யின் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் திட்டத் துவங்கினார்கள்.

குறிப்பாக, தன்யா தொடர்ந்து விஜய்யின் திரைப்படங்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துவருவதாகக் கூறியவர்கள், இதற்கு முன்பாக விஜய்யின் வேலாயுதம், வேட்டைக்காரன் படங்கள் குறித்துத் தெரிவித்திருந்த டிவீட்களின் 'ஸ்க்ரீன் ஷாட்'களையும் எடுத்து வெளியிட்டு அவரை ஆபாசமாக பேசத் துவங்கினர்.
ஆகஸ்ட் ஐந்தாம் தேதி காலையிலிருந்து தன்யாவைக் குறிப்பிட்டு மிக ஆபாசமான வாசகங்களையும் கருத்துக்களையும் டிவிட்டரில் தெரிவிக்க ஆரம்பித்தனர். "ஆனால், அன்று மாலையே குறைய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு எச்சரிக்கைவிடுத்து, மீண்டும் வசைமாறி பொழிய ஆரம்பித்தனர்" என பிபிசியிடம் தெரிவித்தார் தன்யா. #publicitybeebdhanya என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி மீண்டும் வசைமாறி பொழியத் துவங்கினர். அந்த ஹாஷ்டாக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகத் துவங்கியது.கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவீட்டுகள் தன்யாவுக்கு எதிராக வந்தன.
"ஹாஷ்டாக் இல்லாமல் ஒரு 30 ஆயிரம் பேர் இதுபோல பேசியிருந்தனர். இரு நாட்களில் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரத்தைத் தாண்டியது" என்கிறார் தன்யா.
இந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்ததையடுத்து, சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாக ஆரம்பித்தன.
இந்த நிலையில், தன்யா கடந்த காலங்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் டிவீட்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்ட சிலர், இன்னும் கடுமையாக அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
முதலில் தன்யாவை ஆதரித்த சிலர், தி.மு.க. தலைவர் குறித்த டிவீட் வெளியானதற்குப் பிறகு அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

பாலா என்ற முகநூல் பதிவர் முதலில் தன்யாவுக்கு ஆதரவாக, "நடிகர் விஜய் நடித்த "தலைவா" படத்தின் போஸ்டரும் டீசரும் வெளிவந்த போது அடுத்ததாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பில்டப்கள் கொடுக்கப்பட்டு மிகவும் கெத்தாக பேசப்பட்டது."
"அதையெல்லாம் கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, படம் வெளி வந்தால்தான கெத்து, பில்டப் எல்லாம், மொதல்ல படம் வெளிவரக்கூடாது என்று சொல்லிவிட்டார்."
"அப்போதெல்லாம் அவரது ரசிகர்கள் விஜய்க்காக ஜெயலலிதாவை எதிர்த்து எதுவுமே செய்யவில்லை (அப்போதும் டிவிட்டர் இருந்தது) செய்யமுடியாது...., வாயே திறக்கமுடியாத நிலையில் இருந்தனர். அப்படி இருந்த நிலையில் பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன் சுறா படத்தை பற்றி சாதாரணமாக டிவீட் செய்துவிட்டார் என்றவுடன் அவரை எதிர்த்து கேவலமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பிறகு, கருணாநிதி குறித்த டிவீட்டுகள் வெளியானதும், "விஜய் ரசிகர்கள் செயல் எப்படி கேவலமோ, அதற்கு சற்றும் குறைவில்லாத செயலைத் தான் செய்திருக்கிறார் பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன். தலைவர் கலைஞரை பற்றி அவதூறாக அத்துமீறிய வகையில் பதிவிட்ட தன்யா மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார் பாலா.

கருணாநிதி தொடர்பாக எழுதியது குறித்து தன்யாவிடம் கேட்டபோது, "கருணாநிதி குறித்து நான் எழுதிய டிவீட்டுகள், வேறு வகையில் தொடர்புபடுத்தி இப்போது வெளியிடப்படுகின்றன. அவரைப் பற்றி எழுதியபோதும் நான் ஆபாசமாக எந்தச் சொல்லையும் பயன்படுத்தவில்லை" என்கிறார்.
கருணாநிதி உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவருக்கு ’Attention seeking syndrome’ இருப்பதாக தான் ஒருபோதும் எழுதவில்லையென்று குறிப்பிடுகிறார் தன்யா. மேலும் ரஜினியின் கபாலி திரைப்படம் தோல்வியடைந்துவிட்டது. அவர் இனி தொலைக்காட்சித் தொடர்களில்தான் நடிக்க வேண்டும் எனதான் டிவிட்டரில் எழுதியதைப் போல படங்களை உருவாக்கி ரஜினி ரசிகர்களையும் தனக்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார் தன்யா.
வேறு சிலர், தன்யா தரப்பு நியாங்களை முன்வைத்து எழுதியுள்ளனர்.

ராஜகோபால் சுப்ரமணியம் என்பவர் தன்யாவுக்கு ஆதரவாக எழுதும்போது, "இன்னும் சிலர் அவர் கலைஞரை பற்றி முன்னர் எழுதிய டிவீட்களை எடுத்து போட்டு இவளை கிண்டல் செய்தால் என்ன தவறு என்று கேட்கிறார்! ஒருவரின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்வது, கிண்டல் செய்வதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் பார்க்க தேவையில்லை. நிர்மலா சீதாராமனையோ அல்லது தமிழிசையையோ பெண் என்பதால் அவர்களின் வலதுசாரி அரசியலை எதிர்க்காமல் இருக்க முடியாது.
ஜெயலலிதாவை பெண் என்பதற்காக பாசிச நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க முடியுமா என்ன? ஆனால், இங்கு தன்யா மீது செய்யப்படுவது விமர்சனங்களும் அல்ல, அரசியல் ரீதியிலானதும் அல்ல. முழுவதும் ஆபாச வசைகள், பாலியல் ரீதியிலான தாக்குதல்கள்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து தன்யா புகார் அளித்திருக்கிறார். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

நடிகர் விஜய் தரப்பு இது தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. விஜய் ரசிகர் மன்றத் தலைவர்களில் ஒருவரான ஆனந்திடம் இது குறித்துக்கேட்டபோது, சிறிது நேரத்தில் தொடர்புகொள்வதாகக் கூறியவர் பிறகு, பதிலளிக்க முன்வரவில்லை.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை" என்று தெரிவித்தார்.
"பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளத் தாக்குதல், மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இதுபோன்ற அச்சுறுதல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என மேலும் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக