செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

மோடியின் 3 ஆட்சி – எல்லா பம்மாத்துகளும் கலைந்து போன நிலையில்..மாயையும் உண்மையும்

எல்லா பம்மாத்துகளும் கலைந்து போன நிலையில், இந்துத்துவ கும்பலின் கையில் மீதமிருப்பது மதரீதியான கலவரங்களும், அதை அடிப்படையாக வைத்து இந்து வாக்குவங்கியை வளைப்பதும் மாத்திரமே
டந்த மூன்றாண்டுகளாக வெளி உலகத்தை நேரில் காணாத ஒருவர் ஊடகங்களின் மூலமும், சமூக வலைத்தளங்களின் மூலமும் இந்தியாவை புரிந்து கொள்ள முயன்றால், அவருக்கு நமது நாட்டைக் குறித்து என்ன மாதிரியான சித்திரம் கிடைக்கும்? காங்கிரசின் இலவசங்களால் “பிச்சைக்காரர்கள்” ஆக்கப்பட்ட மக்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களுக்கு கவுரவமான வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கும். நாடெங்கும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டிருக்கும். பதுக்கல்காரர்கள் ஒடுக்கப்பட்டிருப்பார்கள். லஞ்ச ஊழல் அறவே ஒழிந்திருக்கும்.
ஆனால் எதார்த்தம் இப்படியில்லை என்பது நமக்குத் தெரியும் – என்றாலும், எதார்த்தத்தை மறுக்கும் கருத்துக்களை உருவாக்கி அவற்றை மக்களின் பொது புத்தியில் திணிப்பதில் பாரதிய ஜனதாவின் ஊடக மேலாண்மை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பங்காற்றியிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதா வாக்களித்தவைகளில் முதன்மையானது குஜராத் மாடல் “வளர்ச்சி”. இதன் மூலம் இலவசங்கள் ஒழிக்கப்படும் என்றும், உருவாகப் போகும் புதிய வேலைவாய்ப்புகளின் மூலம் மக்களின் பொருளாதாய வாழ்க்கையில் பெரும் முன்னேற்றங்கள் இருக்குமென்றும், தங்களது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை மக்களே காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுமென்றும் சொன்னார்கள்.
எனினும் “குஜராத் மாடல்” வளர்ச்சி பாணியானது எண்ணை துரப்பணம் உள்ளிட்ட மூலதனக் குவிப்பு மாதிரியான தொழில்களை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், இதனால் அதிகளவு வேலை வாய்ப்புகள் உருவாகாது என்பதையும், வட இந்திய மாநிலங்களில் அதிகரித்து வந்த வேலையற்ற இளைஞர் பட்டாளம் உணரவில்லை. மேலும், குஜராத்தில் பெரியளவில் நடந்த தொழில் நடவடிக்கை என்பது பெரும் முதலாளிகளுக்கு நிலம், நீர், மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை சல்லிசான விலைக்கு அள்ளிக் கொடுப்பதையே அடிப்படையாக கொண்டிருந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பீற்றிக்கொள்ளப்பட்ட குஜராத் மாடல் வளர்ச்சி
முதலாளிகளின் மூலதனம் வீங்கியதையே மொத்த மாநிலத்துக்குமான வளர்ச்சியாக பாரதிய ஜனதா எடுத்த வாந்தியைத் தின்ற ஊடகங்கள் அந்தப் பிரச்சாரத்தையே மறுவாந்தி எடுத்து மக்களிடம் “பாரதிய ஜனதா என்றால் வளர்ச்சி” என்கிற பிம்பத்தை ஏற்படுத்தின. தற்போது ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளில், சொல்லிக் கொள்ளப்பட்ட மோடி பாணி “வளர்ச்சியின்” மூலம் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகவில்லை என்பதை அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன.
தேசிய மாதிரி சர்வேயின் அடிப்படையில் வெளியான இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2016 -ன் படி, சுமார் ஐந்து கோடி “தேவையற்ற” தொழிலாளிகள் இருப்பதாகத் தெரிகின்றது – அதாவது, தொழிலாளிகளின் எண்ணிக்கைக்கும் வேலைகளின் எண்ணிக்கைக்குமான இடைவெளி இது. மேலும், இருக்கும் வேலைகளும் பறிக்கப்பட்டு வருவதாக அரசின் தொழிலாளர் ஆணயம் (Labour Bureau) வெளியிட்ட அறிக்கையே குறிப்பிடுகின்றது. 2015 -ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை வெறும் 1.55 லட்சங்கள் தான்; 2016 -ல் 2.31 லட்சம் வேலைகள்.
தனது பாரம்பரிய வாக்கு வங்கியான நடுத்தர வர்க்க மற்றும் சுயதொழில் செய்யும் பிரிவினரிடம் வாக்களித்த “வளர்ச்சியும்” இல்லை – புதிய வாக்குவங்கியை ஈர்த்த முழக்கமான “புதிய வேலை வாய்ப்புகளும்” கானல் நீராகி விட்ட நிலையில் மோடியிடம் மிச்சமிருந்தது “ஊழல் – கருப்புப்பண ஒழிப்பு” அஸ்திரம் மாத்திரம் தான்.
கருப்புப்பண ஒழிப்புக்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களையே இன்னும் ரிசர்வ் வங்கி “எண்ணித்” தீரவில்லை. எச்சில் தொட்டு எண்ணியிருந்தாலும் எப்போதோ முடிந்திருக்க வேண்டிய இந்தப் பணி, ஆறு மாதங்களாகியும் முடியவில்லை. விசேட இயந்திரங்களையும், சி.ஆர்.பி.எப் வீரர்களையும் கொண்டு ரூபாய்த்தாள்களை முடிவில்லாமல் எண்ணிக் கொண்டேயிருக்கிறது ரிசர்வ் வங்கி.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழித்ததா இல்லையா என்பதை அரசு அறிவிப்பதற்கு இன்னும் நான்கைந்து நூற்றாண்டுகளாவது ஆகக் கூடும். மேற்படி கோமாளித்தனமான நடவடிக்கையின் நோக்கமாகச் சொல்லப்பட்ட மற்றொரு காரணம் – கள்ளப்பண ஒழிப்பு. ஆனால், பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது சுழற்சியில் இருந்த மொத்த 15 லட்சம் கோடியில் (1000 & 500 தாள்களின்) கள்ளப் பணத்தின் மதிப்பு வெறும் 0.0040 சதவீதம் தான். ஒரே ஒரு கட்டெறும்பைக் கொல்ல அரண்மனையையே கொளுத்திப் போடும் ஆர்.எஸ்.எஸ் பிராண்டு அறிவாளித்தனம்!
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையோ ஒருபக்கம் மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையைப் பறித்துள்ளதோடு, உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு கிடைத்து வந்த வருவாயைக் குறைத்துள்ளது. தமிழகம் போன்ற மாநிலங்களில் ஓரளவுக்காவது நடந்து வந்த மக்கள் நலப்பணிகளுக்கான நிதி இதன் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம், சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டு வந்த வணிகர்களை மீளாத துயரத்துக்கு ஆட்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் புதிய வேலைகள் உருவாகாத நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற முறைசார் தொழில்களில் வேலை நீக்கங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பெருவாரியான மக்களுக்கு சோறு போடும் முறைசாராத் தொழில்களை பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் மரணப்படுக்கையில் வீழ்த்தியுள்ளார் மோடி.
எல்லா பம்மாத்துகளும் கலைந்து போன நிலையில், இந்துத்துவ கும்பலின் கையில் மீதமிருப்பது மதரீதியான கலவரங்களும், அதை அடிப்படையாக வைத்து இந்து வாக்குவங்கியை வளைப்பதும் மாத்திரமே. இந்துத்துவ பாசிஸ்டுகளின் கையிலிருக்கும் அதிகாரம் என்கிற சவுக்கின் கண்களுக்கு குல்லாவுக்கும், நெற்றிப் பட்டைக்கும் வித்தியாசம் தெரியாது என்கிற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்வதோடு இந்துத்துவ அரசியலின் தோல்வியில் தான் நமது நல்வாழ்வின் துவக்கம் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையைத் தழுவி எழுதியது.
மூலக் கட்டுரை : The illusion, the reality check

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக