சனி, 19 ஆகஸ்ட், 2017

மே. வங்க உள்ளாட்சி: 148 வார்டுகளில் 140 வார்டுகளில் மம்தா பானர்ஜி பிரமாண்ட வெற்றி!

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி!மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக-வைப் பின்னுக்குத்தள்ளி பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவில் வெற்றியை அடைந்துள்ளது. இதில் பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் 7 நகராட்சிகளில் உள்ள 148 வார்டுகளில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 140 இடங்களை வென்றுள்ளது. மீதியுள்ள 8 இடங்களில் 6இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் இடது சாரியும், கடைசி ஒன்றில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் பிர்பும், தெற்கு தினாஜ்பூர், ஜல்பாய்குரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7 நகராட்சிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதாவது துர்காபூர் நகராட்சி, துப்குரி, புனியாட்பூர், கூப்பர் கேம்ப், நல்ஹாத்தி, பன்ஸ்குரா மற்றும் ஹால்தியா ஆகிய 7 நகராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 148 வார்டுகளில், திரிணாமூல் காங்கிரஸ் 140 இடங்களை வென்றுள்ளது.
இந்த 7 நகராட்சிகளில் 3 நகராட்சிகளில், எதிர்க்கட்சிகள் ஒரு வார்டில்கூட வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக ஹால்தியா நகராட்சியில் உள்ள 29 வார்டுகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. துர்காபூர் மற்றும் கூப்பர் கேம்ப் நகராட்சிகளிலும் அனைத்து இடங்களையும் திரிணாமூல் கைப்பற்றியுள்ளது.
மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பது குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், “மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களாலேயே வெற்றி கிட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து பாஜகவினர் கூறுகையில், முக்கிய எதிர்க்கட்சியாக மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, இந்த உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தொடர்ந்து ஆட்சியிலிருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து இடதுசாரிகள் கூறுகையில், “தேர்தல் நேர்மையாகவும், ஒழுங்காகவும் நடைபெறவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக