வியாழன், 6 ஜூலை, 2017

சென்னையில் ஹரூண் கைது ! ஜூனைத் கானைக் கொன்றவர்கள் கைதில்லை !

ஓடும் ரயிலில் கொல்லப்பட்ட சிறுவன் ஜூனைத் ரியானாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஜுனைத் கான், கடந்த ஜூன் 22 அன்று  இந்துமதவெறியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டது யாருக்கும் மறந்திருக்காது. இரம்ஜான் பண்டிகைக்கு பொருட்களை வாங்கிக் கொண்டு தனது தம்பிகளோடு இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஜூனைத் கான். அப்போது அங்கு வந்த இந்துமதவெறிக் கிரிமினல் கும்பல், அவரையும் அவரது சகோதரர்களையும் மாட்டுக்கறி திண்ணும் தேசதுரோகிகள் எனக் கூறிக் கடுமையாகத் தாக்கியது. இறங்க வேண்டிய இடத்தில் அவர்களை இறங்க விடாமல் தடுத்து, மீறி இறங்க முயன்ற ஜுனைத் கானைக் கத்தியால் குத்தி கொலை செய்தது அக்கும்பல்.
பிரதமர் மோடியோ, ஹரியானா முதல்வர் கட்டாரோ, வேறு எந்த பாஜக தலைவரோ இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு இது குறித்து வாய் திறக்கவேயில்லை. நாடு முழுவதும் இது குறித்துப் பல்வேறு கண்டனக் குரல்கள் குவியத் துவங்கியவுடன், ஒரு வாரம் கழித்து பிரதமர் மோடி மொன்னையான ஒரு கண்டன உரையை நிகழ்த்தினார். அவர் எச்சில் ஈரம் காய்வதற்குள் ஜார்கண்டில் பசுவின் பெயரால் மற்றொரு கொலை நடந்து முடிந்திருந்தது.

ஜுனைத் கான் மரணத்தைத் தொடர்ந்து ஹரியானா இரயில்வே போலீசு சந்தேகத்திற்கிடமான 4 பேரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்தது. சரியான துப்பு கிடைக்காமல், கொலைகாரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் 1 இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்து அவர்கள் குறித்த இரகசியம் காக்கப்படும் என்றும் அறிவித்தது ஹரியானா இரயில்வே போலீசு. ஆயினும், ஒருவாரம் தாண்டியும் அச்சம்பவம் குறித்து தகவலோ சாட்சியமோ அளிக்க யாரும் முன் வரவில்லை. இந்நிலையில் பரிசுத் தொகையை 2 இலட்ச ரூபாயாக சமீபத்தில் உயர்த்தியிருக்கிறது ஹரியானா போலீசு.
அச்சம்பவம் நடைபெறும் போது அருகில் பயணித்துக் கொண்டிருந்த 40க்கும் மேற்பட்டவர்களில் ஒருவர் கூட அடையாளம் கூறவோ, மேலதிகத் தகவல்கள் கொடுக்கவோ முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சக மனிதன், அதுவும் ஒரு சிறுவன் கொல்லப்பட்டது குறித்து சிறிதும், அவன் முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காக, வருத்தமோ குற்ற உணர்வோ இன்றி அமைதிகாத்த அந்த ‘இந்து’க்களின் கள்ள மவுனத்திற்கு காரணம் என்ன?
வட இந்தியாவில் அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் கோலேச்சும் பார்ப்பனியம் உருவாக்கிய மௌனமா அது? கொல்லப்படும் சிறுவனை வேடிக்கை பார்த்தவர்கள் எப்படி சாட்சியம் மட்டும் கூற வருவார்கள்? இல்லை அப்போது இருந்த சில ரவுடி இந்துத்துவர்களுக்கு பயந்த மௌனமா அது? சாட்சி சொன்னால் தலையை எடுத்து விடுவார்கள் என்ற பயமா? எனில் உயிருக்குப் பயந்தவன் ஒரு கோடி கொடுத்தால் கூட சாட்சி சொல்ல வருவானா? மோடியே ஆட்சி செய்யும் காலத்தில் குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடிய தீஸ்தா சேஸ்தல்வாத் படாதா கஷ்டமா?
இதுதான் நிலைமை என்றால் இங்கே முஸ்லீம் பயங்கரவாதம் எனும் எதிர்வினையை எப்படி தடுக்க முடியும்?
இனி நாளையே நடக்கும் தொலைக்காட்சி விவாதங்களில் பாண்டே, ஆர்னாப் போன்ற பாஜக கூவர்கள், ஜூனைத்கான் கொலைக்கு சட்டபூர்வ சாட்சிகள் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று வக்கணையாக பேசுவார்கள்!
ஆனால் ‘முசுலீம் பயங்கரவாதம்’ என்றால் இதே பாஜக ஆளும் மாநிலங்களின் சிறப்பு போலீசு சடுதியில் நடவடிக்கை எடுக்கும் காரணம் என்ன?
சென்னை பர்மா பஜார் பகுதியில் கடந்த 04/07/2017 அன்று இராஜஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்புப்பிரிவு போலீசு, ஹரூன் என்ற முசுலீம் இளைஞரைக் கைது செய்திருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு பணம் ஈட்டித் தந்ததாக சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்திருக்கிறது இராஜஸ்தான் போலீசு.
இராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசின் கொட்டடியில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முகம்மது இக்பால், ஜமீல் அஹமது ஆகியோர் கொடுத்த தகவலின் பெயரிலேயே ஹரூனைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசு. மேலும் அவர்கள் கொடுத்துள்ள அறிக்கை, தமிழகம் மற்றும் தெலுங்கானாவிலிருந்து மட்டும் கடந்த 2016ம் ஆண்டில் சுமார் 9 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கின்றது.
இங்கே ‘குற்றம்’ என்று ஒன்று நடக்கவில்லை, ஆனால் ‘குற்றவாளிகள்’ பிடிபட்டு விட்டார்கள். அதுவும் ராஜஸ்தானில் இருந்து சென்னை பர்மா பஜாருக்கு வந்து கச்சிதமாக பிடிக்கிறார்கள். அவ்வளவு ஒற்றுத் தகவல்கள், உளவு அமைப்பு, தொழில் நுட்பம், வேகம்……இருக்கட்டும். இதற்கு மேல் கைது செய்யப்படும் முசுலீம் மக்களில் மிகப் பெரும்பாலனோர் அப்பாவிகள் என்பதும், இந்த அப்பாவிகள் பலர் பல வருடம் செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்திருக்கறார்கள் என்பதும் உண்மை.
ஆனால் ஹரியாணாவில் குற்றம் பகிரங்கமாக நடந்திருக்கிறது. ஒரு சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறான். ஊரே அதை வேடிக்கை பார்த்திருக்கிறது. அங்கே குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை என்று போலீசு கைவிரிக்கிறது. ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று தகவல் தருபவர்களுக்கு ஏலம் விடுகிறார்கள். ஏன்?
செய்தி ஆதாரம்:  வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக