புதன், 19 ஜூலை, 2017

தெலங்கானா மாணவர் வீட்டுப்பாடங்களுக்கு தடை .. புத்தக சுமையை குறைக்கும் முயற்சி!

மின்னம்பலம் : தெலங்கானாவில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளின் புத்தகப் பை தொடர்பான சட்டம் 2006ன்படி புத்தகப் பையின் சுமை மாணவர்களின் எடையை விட 10 சதவீதம் அளவுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதாகும். ஆனால் இதை எந்த பள்ளிகளும் பின்பற்றுவதில்லை. அதன்படி தற்போதெல்லாம் ஆரம்ப பள்ளி மாணவர்கள் 6 கிலோவிலிருந்து 12 கிலோ எடையுள்ள பைகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 கிலோ வரை பள்ளி பைகளையும் சுமப்பதாக தெரியவந்துள்ளது. புத்தக சுமை மட்டுமின்றி பையில் விளையாட்டு பொருட்கள் கொண்டு வருவது, தண்ணீர் பாட்டில் சுமப்பது என கூடுதல் சுமை அதிகரிக்கிறது. குறிப்பிட்ட எடைக்கு அதிகமாகவே மாணவர்கள் தங்கள் புத்தக பையை சுமப்பதால் கூன் விழுவதோடு அவர்களது முதுகெலும்பும் பாதிப்படைகிறது.

இந்நிலையில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் தெலங்கானா மாநிலத்தில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிக்க தடை விதித்து அரசாணையை இன்று ஜூலை-19 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
அதில் ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்கு குழந்தைகள் பாடநூல்கள், கைடு, வீட்டுப் பாட குறிப்பேடுகள், என அனைத்தையும் கொண்டுவருவதால், புத்தக பையின் சுமை அதிகரிக்கிறது. எனவே நாள்தோறும் தேவைப்படும் புத்தகங்களை மட்டுமே கொண்டு வர வேண்டும் என மாணவர்களுக்கு பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும் முதல், இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1.5 கிலோ எடைக்கு மேல் தூக்கக் கூடாது, அதுபோன்று மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 அல்லது 3 கிலோ, ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் 4 கிலோ, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 4.5 கிலோ, பத்தாம் வகுப்பு மாணவர்கள் 5 கிலோ எடைக்கு மேல் தூக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தவிர ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுக்கக்கூடாது. பாடங்களில் அளிக்கப்படும் பயிற்சியானது, அந்த வகுப்பு முடிந்தவுடன் அந்தந்த ஆசிரியர் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும். 6 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டு பாடங்களை குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பாடங்களில் மட்டும் அளிக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். இது அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைப்பது, வீட்டுப்பாடம் அளிப்பதை தடுப்பது குறித்து அம்மாநில பள்ளி கல்வித்துறைக்கு, கல்வி இயக்குநரும், ஆணையரும் பரிந்துரை செய்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக