செவ்வாய், 18 ஜூலை, 2017

பணமதிப்பழிப்பால் பறிபோன வேலைவாய்ப்புகள்!

பணமதிப்பழிப்பால் பறிபோன வேலைவாய்ப்புகள்!
minnambalam ": மத்திய அரசின் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பால் நாட்டில் சுமார் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரக் கணிப்பு மையமானது ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் இந்தியாவின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மொத்தம் 405 மில்லியன் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் முந்தைய செப்டம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 406.5 மில்லியனாக இருந்தது. இதுவே நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பாகும். இதில் முறைசாரா, முறைசார், வேளாண்மை உள்ளிட்ட துறைகள் அடக்கம்.

வேலைவாய்ப்புகள் சரிந்ததற்கு முக்கியக் காரணம் பணமதிப்பழிப்பு அறிவிப்பாகும். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை அழிக்கும் நோக்கத்தில், மொத்த நோட்டுகளில் சுமார் 86 சதவிகிதம் அளவிலான ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு அளவு 44.8 சதவிகிதம் குறைந்தது. அதற்குக் காரணம் பணமதிப்பழிப்பு நடவடிக்கையாகும். இந்த ஆய்வானது 5,19,285 வயதுவந்த நபர்களைக் கொண்ட சுமார் 1,61,167 குடும்பங்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், ஜனவரி மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பில் 60 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இத்துறையில் 55 சதவிகித வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக