புதன், 5 ஜூலை, 2017

ஓ.என்.ஜி.சி மீத்தேனும் சேல் எண்ணெயும் எடுக்கவில்லையா?.

thetimestamil :அருண் நெடுஞ்செழியன்: தமிழ்நாட்டில் சேல் மீத்தேனும், நிலக்கரிபடுகை மீத்தேனும் எடுக்கவே இல்லை என ஓ.என்.ஜி.சி-யும் அரசும் கூறி வருகிற நிலையில், இதன் உண்மைத்தன்மை மற்றும் உள்ளர்த்தம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது… இதை சற்றுன் நெருங்கிப் பார்ப்போம் ….
தமிழ்நாட்டில் மீத்தேன், சேல் எரிவாவை இப்போது எடுக்கவில்லை எனக் கூறியுள்ளதே தவிர எடுக்கின்றத் திட்டம் இல்லை என ஓ.என்.ஜி.சி-கூறவில்லை.மேலும்,ஓ.என்.ஜி.சி யோ அல்லது அரசையோ பொருத்தவரை எங்கு என்ன வகை திட்டத்தை மேற்கொள்கிறோம்,என்ன திட்டத்திற்கு ஆய்வு செய்கிறோம் என வெளிப்படையாக சொல்வதில்லை.மாறாக வார்த்தை விளையாட்டுகளில் கெட்டிக்காரத்தனத்தை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில், தென்னக பசுமைத் தீர்ப்பயதிற்கு அளித்த பதிலில் நிலக்கரி படிம மீத்தேனும்,சேல் மீத்தேனையும் தமிழகத்தில் எடுக்கின்ற திட்டமில்லை என ஓ.என்.ஜி.சி கூறியது. ஆனால் எடுக்கின்ற முயற்சியில் உள்ளோம் என்றது. இதன் அர்த்தம் என்ன? தற்போது எடுக்கவில்லை ஆனால் வரும்காலத்தில் எடுப்பதற்கான ஆய்வுகளை மட்டும் மேற்கொள்கிறோம் என்றது. மேலும், சேல் மீத்தேன் எடுக்கின்ற கொள்கை முடிவுகள் ஏதும் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கவில்லை என்றது.
இதை சொல்லிக்கொண்டே, 25-06-2017 அன்று குத்தாலம் பிளாக்கில் சேல் மீதேன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பமும் வழங்கியது ஓ.என்.ஜி.சி .சேல் மீத்தேன் எடுப்பதற்கான முன் சாத்தியப்பாட்டு அறிக்கையிலோ, கடந்த 2013 ஆம் ஆண்டில் சேல் மீத்தேன் எடுப்பதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும், குறைந்தபட்சமாக ஐம்பது சேல் மீத்தேன் பிளாக்குகளை கண்டறியவேண்டும் எனவும் இலக்கு நிர்ணயக்கப்படுள்ளதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை முன்னுக்குப் பின் முரணாக இல்லையா? மக்கள் குழம்பாமல் என்ன செய்வார்கள்.
ஆக, குத்தாலம் பிளாக்கில்(திருவேள்விக்குடியில்) சேல் மீத்தேன் எடுபதற்கான ஆய்வுப் பணியை ஓ.என்.ஜி.சி. மேற்கொள்வதும், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதும் தெளிவாகிறது.அதேபோல காவிரிப்படுகையில், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் கைவிட்டு ஓடியது நிலக்கரிபடிம மீத்தேன் திட்டமும் வரும்காலத்தில் எடுக்கப்படலாம்.விஷயம் இல்லாமால 9.8 TCF(Trillion cubic feet) நிலக்கரிபடிம மீத்தேனும் 96 TCF ஷெல் வாயும் எங்களிடம் கையிருப்பு உள்ளது என மேக் இன் இந்தியா திட்ட இணையதளத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது?
ஒ என் ஜி நிறுவனத்தை பொறுத்தவரை, இயற்கை எரிவாவு எடுப்பதோடு எங்கெங்கு நிலக்கரி படிம மீத்தேன் உள்ளது, சேல் பாறை மீத்தேன் உள்ளது என ஆய்வு செய்து தகவல்களை திரட்டி வைத்துக்கொள்வது முதன்மையான பணியாகும். இவ்வாறு எங்கெங்கு உள்ளது என கண்டுபிடித்த இடங்களை, அந்நிய நிறுவனங்களுக்கு உள்ளூர் சூறையாடுகிற முதலாளிகளுக்கோ நூறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு கொடுப்பது மட்டுமே அரசின் பணி. மக்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன, நிலம் அழிந்தால் என்ன இருந்தால் என்ன என்பது குறித்து அரசுக்கு கவலையில்லை!
ஆக,பல்வேறு வழிகளில் காவிரிப்படுகையில் எண்ணெய் எரிவாயு எடுக்கின்ற முயற்சியில் ஓ.என்.ஜி.சியும். ரிலைன்ஸ் போன்ற தனியார் கொள்ளை நிறுவனங்களும் ஈடுபட்டுவருவது என்பதே உண்மை. மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, மீத்தேன் எடுக்கிற திட்டத்தை கைவிடுவதாக கூறிய தமிழக அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஹைட்ரோகார்பன், சேல் மீத்தேன் என வெவ்வேறு பெயர்களில், காவிரிப்படுகையில் எண்ணெய் எரிவாயு எடுக்கிற திட்டப்பணிகளை பல முனைகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக மேற்கொண்டு வருகின்றன.
ஆதாரம் : Not exploring CBM or Shale Gas exploration in Tamil Nadu: ONGC,Business Standard,03.11.2015
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக