சனி, 29 ஜூலை, 2017

ஆட்சி மாற்றம் எப்படி வரும்?

thetimestamil :சரவணன் சந்திரன்: விகடனில் கமல் பேட்டி படித்தேன். அவர் இதுவரை ஆற்றிய செய்யுளுக்கு வெள்ளைவாரணர் மாதிரி உரை இயற்றியிருக்கிறார். வேறொன்றுமில்லை. பொதுவாகவே படித்தவர்கள் நாலும் தெரிந்தவர்கள் யூகங்களை நம்ப மாட்டார்கள். ஜோதிடங்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
ஆனால் இந்த ஆட்சி அதுவா கலைஞ்சிரும் என்கிற ஜோதிடத்தை எப்படி நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதெப்படி கலையும் சொல்லுங்கள். நீங்கள் ஆயிரம் சொல்லலாம். அந்த நூத்தி இருபத்துச் சொச்சம் பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பூனை போல் எழுந்து நின்றார்களே? ஒட்டு மொத்த பொது மனசாட்சியே அவர்களை உலுக்காத போது வேறெது உலுக்கி விடும்.
அவர்களுக்குத் தெரியும். அடுத்த எலெக்‌ஷனில் பலர் நிற்கவே மாட்டார்கள். தோற்றாலும் பரவாயில்லை. மூன்று தலைமுறைக்கும் சேர்த்து சம்பாதித்து விடுவோம் என்பதைச் சொல்லி விட்டார்கள். இந்த விஷயத்தில் நீர் அடித்து நீர் விலகாது என கட்டிப்பிடித்துக் கொள்வார்கள்.

ஆட்சி கலைந்தால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்பது தெரியாத மடையர்களா என்ன? சவுண்ட் அவ்வப்போது விடுவதெல்லாம் சம்பாதிக்கத்தான். சும்மா சொல்லக்கூடாது. எடப்பாடி வஞ்சகம் இல்லாமல் எதிர்கட்சிகளுக்குக்கூட முறைவாசல் செய்து விடுகிறது. ச ம உக்கள் கெளிக்கிறார்கள். உண்மையைச் சொல்லட்டுமா? இந்த ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதென பண்ணாரி அம்மன் கோவிலில் எதிர் முகாம் ஆட்கள் தீ மிதிக்கிறார்களாம். தீயாய் எல்லா பக்கமும் பாய்கிறது பணம்.
நானே நாலுபேரை அழைத்து சவுண்ட் விட்டால், லம்ப்பாக செட்டில் பண்ணுவார்கள். குறிப்பாக ஆட்சி மாற்றம் சம்பந்தமான டாக்குகள் முன்னமே அரசு நிழல் காரியங்களைச் செய்கிற மட்டத்தில் உலவும். திமுக அரசு வந்தால் செட்டிலாகி விடலாம் என்று குத்த வைத்து காத்திருந்த டிக்கெட்டுகள் தாய்லாந்திற்கு டிக்கெட் போட்டுக் கிளம்பி விட்டன. ரெண்டு வருஷம் கழிச்சு வர்றோம் என அட்டியை வேறு இடத்திற்கு நகர்த்தி விட்டனர்.
அரசியல் ரீதியிலாகப் பார்த்தாலும் இந்த ஆட்சி இப்போது கலைந்தால் யார் ஸ்கோர் செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் போது பிஜேபிக்குத் தெரியாதா? எவரோ ஒருத்தர் கட்டிலில் அமர அந்தக் கட்சி கலைத்து எதற்கு உழைக்க வேண்டும். ஆக இந்த சடுகுடு ஆட்டம் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களுக்காவது ஓடும்.
நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு ஆட்டத்தில் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் ரம்மி சேர்கிறது. எல்லோரும் டிக் அடிக்கிறார்கள். தங்களது காலத்தை சம்பாதிப்பதற்கான காலமாக வரிந்து கட்டிக் கொண்டார்கள். தமிழகத்தின் இருண்ட காலம் என ஒருநாள் இது அறியப்படும் என்கிற கவலை அவர்களுக்குப் பொருட்டா என்ன? பணம் அதன் இன்னொரு குணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அது எதனைக் காட்டிலும் வலியது.
சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக