சனி, 15 ஜூலை, 2017

இந்திரா காந்தியின் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் நோய்மனநிலை!

thetimestamil : சுகந்தி நாச்சியாள்: ஒரு பெண் ஆணுடன் அந்தரங்கமாக இருந்ததை ஒரு புத்தகமாக, கட்டுரையாக எழுதுவது குரூர சிந்தனையின் வெளிப்பாடே. நான் எத்தனை பெரிய அழகியை காதலித்தேன் தெரியுமா? நான் எத்தனை பெரிய அழகியுடன் செக்ஸ் வைத்திருந்தேன் தெரியுமா? என சுயதம்பட்டம் அடித்து, அதன் மூலம் தான் ஒரு காதல் மன்னன் என்பதை நிரூபிக்கவே இந்த மாதிரியான மன குரூரங்களை எழுத்தில் வடிப்பார்கள்.
அதில் அந்த பெண் கற்பற்றவர் என்பதை உலகத்துக்கு சொல்லி அதை ஊரறியச் செய்துவிட்டோம் என்கிற பச்சை துரோகம் தான் அதில் இருக்கும். பனிரெண்டு வருடங்களாக ஒரு பெண்ணுடன் காதல் கொண்டேன்; படுக்கையைப் பகிர்ந்தேன்; காமத்தின் எல்லையைக் கண்டேன் என பிதற்றுபவர்கள், அந்த பெண் பதவியில் இருந்த காலத்தில் அதை பகிரங்கமாக எழுத முற்பட மாட்டார்கள். சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அதில் அவர்கள் இருவரும் சம்பந்தபப்டட் கதை என்பதால் அவர்கள் இருவருக்கு மட்டுமெ அதில் எததனை சதவீதம் உண்மை இருந்தது, எத்தனை சதவீதம் பொய் இருந்தது என்பது தெரியும்.

ஓ.மாத்தாய் நேருவின் செகரட்டரியாக இருந்தவர், நான் இந்திராகாந்தியுடன் 12 வருடங்கள் காதலில் இருந்தேன், அந்தரங்க உறவுகொண்டிருந்தோம் என எழுதியிருப்பது, அவர் இந்திராவின் மேல் காதல் கொள்ளவில்லை; காழ்ப்புணர்ச்சியுடன் தான் இருந்தார் என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. ஒரு பெண்ணுடன் ஆத்மார்த்தமாக உறவில் இருந்தவன் அதை தன் மனதுக்குள் மட்டும் பூட்டி வைத்து அந்தரங்கத்தை நினைத்து நினைத்து இன்பம் காணும் மனிதனாக, காதலனாக இருப்பான்.
‘டேய் மச்சி, நான் அவ கூட செக்ஸ் வச்சுகிட்டேண்டா’ என்று ஊர்பூராவும் தம்பட்டம் அடிக்கிறவனின் நோக்கம், ‘நான் மிகவும் ஆண்மையுள்ளவன், பாராக்கிரமசாலி, ஒரே நேரத்தில் பத்து பெண்களுடன் படுக்கையை ஆள்வேன்’ என்று நிரூபிக்க வேண்டி, புளுகுகிறவனாக இருப்பான். அவனால் தான் இம்மாதிரியான அடுக்கடுக்கான கதைகளை கட்டவிழ்த்துக்கொண்டே இருக்க முடியும். ஓ.மாத்தாய் என்பவரும் அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க முடியும்.

Mrs. Indira Gandhi posing during her trip to the US. (Photo by Carl Mydans/The LIFE Picture Collection/Getty Images)
ஒரு நாட்டின் பிரதமராக இருந்த பெண்மணியுடன், அவள் இளமை காலத்தில் அவளுடைய இச்சைகளை சுரண்டிக் கொழுத்தவன் அவள் பத்தினியல்ல என்பது போல எழுதுவது ஏன்? அதை இந்த காலக்கட்டத்தில் இணையப் பத்திரிகையில் சுழல விட வேண்டிய நோக்கம் என்ன? அதுவும் நாட்டை மிக மோசமான ஒரு வலதுசாரி கட்சி, கொடூரமாக ஆண்டுகொண்டிருக்கும் போது, இந்திரா காந்தியின் கற்பு, அந்தரங்கம் குறித்தெல்லாம் பேச வேண்டிய காரணம் என்ன என்பதை இந்த நேரத்தில் இதை இணைய பத்திரிகைக்குக் கொடுத்த அந்த வக்கிர மனம் படைத்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
இந்திரா காந்தி என்கிற பெண்ணின் ஆளுமை குறித்து விவாதிப்பது தான் நேர்மையின் குணம். அதை விடுத்து அவர் படுக்கை அறையை எட்டிப் பார்த்து அவருடைய ஆளுமையை விவாதிப்பது நோய் மனநிலையின் கூறு.
நாட்டின் தலைவர்களின் ஆளுமையை விவாதிக்கிறேன் என்ற பேரில் ‘போர்னோ’ கட்டுரைகளை வெளியிடுவது, சீழ் பிடித்திருக்கும் பத்திரிகை தர்மத்தையே காட்டுகிறது.
இதையெல்லாம் விட, பெண்ணை ஒழுக்கம் கெட்டவள் என்று நாக்கூசாமல் கூறும்போது, அந்த பெண்ணுடன் படுத்து எழுந்திருந்த நீங்களும் தான் உலகின் மிக மோசமான அயோக்கியனாக மாறுகிறீர்கள் என்பதை உணருங்கள். வீட்டின்/தெருவின்/ ஊரின்/நாட்டின் ஒழுக்கம் பெண்ணுறுப்பில் மட்டுமில்ல…உங்கள் குறிகளிலும் தான் இருக்கிறது. அதைவிட உங்கள் மனங்களில் தான் அது இருக்கிறது. கற்பும் ஒழுக்கமும் பெண்ணுக்கு மட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் உங்கள் புத்தியின் மீது நீங்களே காரி உமிழ்ந்துகொள்ளுங்கள்.
நாச்சியாள் சுகந்தி, கவிஞர்; பத்திரிகையாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக