புதன், 12 ஜூலை, 2017

நடிகர்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து!

மின்னம்பலம் : நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, நமீதா உள்ளிட்டோர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர்கள் விவேக், சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், அருண்விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத மேற்குறிப்பிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை கடந்த மே மாதம் 23ம் தேதி நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை எதிர்த்து நடிகர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்த போது கண்டன கூட்டத்தில் பேசியது தங்களது கருத்து சுதந்திரம் என்று கூறி ஏற்கனவே இது போன்று 5 நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட வழக்கு ரத்து பெறப்பட்டுள்ளதாகவும் நடிகர்கள் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சூர்யா உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக