வெள்ளி, 7 ஜூலை, 2017

மோடி - சீன அதிபர் சந்திப்பு .. ஜெர்மனியில் ..

மின்னம்பலம் : ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்றும் (7.7.2017), நாளையும் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். மேலும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்திக்கிறார். எனவே சீன அதிபரையும் மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைத் திட்டவட்டமாக மறுத்தது சீனா. காரணம், சிக்கிம் எல்லையில், பூட்டானுக்கு சொந்தமான பகுதியில் சீனா சாலை அமைக்க முயன்றது. இதனை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனியில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அதிபர் ஜிங்பிங் - பிரதமர் மோடி சந்திப்பு நடக்கும் சூழல் இல்லை என சீனா அறிவித்திருந்தது.

அதே போல், ஜி20 மாநாட்டுக்கு இடையே மோடி- கிசி ஜின்பிங் சந்தித்துப் பேசும் திட்டம் இல்லை என நமது மத்திய அரசும் விளக்கம் அளித்தது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோபால் பார்க்லே கூறுகையில், ‘ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஹம்பர்க் நகரில் தங்கியிருப்பார். இந்த மாநாட்டின் இடையே அர்ஜென்டினா, கனடா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரியா, இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாட்டுத் தலைவர்களை மோடி சந்தித்து பேச திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் சீன அதிபர் ஜின்பிங்குடன் இரு தரப்பு சந்திப்பு குறித்த எந்தத் திட்டமும் இல்லை’ என்று தெளிவுபட கூறினார். இந்நிலையில், இன்று(7.7.2017) ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில்நடக்கும் ஜி20 மாநாட்டில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அதிகாரப்பூர்வமற்ற பிரிக்ஸ் நாடுகளுடனான சந்திப்பு நடந்தது. அப்போது மோடி, சீன அதிபர் ஜிங்பிங்கை எதிர்பாராத விதமாகச் சந்தித்து பேசினார்.இரு தலைவர்களும் பல விவகாரங்கள் குறித்து பேசியதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. அது குறித்து விரைவில் செய்திகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக