வெள்ளி, 28 ஜூலை, 2017

ரயில்வே நிலையங்களை திருமண மண்டபங்களாக பயன்படுத்த ஆலோசனை!

ரயில் நிலையங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வேத்துறை ஆலோசித்து வருகிறது.
ரயில்வேத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கேட்டரிங் மற்றும் சேவைகளுக்கு புதுக் கொள்கையை வகுப்பது, ரயில் நிலையங்களைத் தனியாருக்கு ஏலம் விடுவது போன்ற முயற்சிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. வருமானத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
தற்போது பயணிகள் மற்ற வகை போக்குவரத்தை நாடிச் செல்வது அதிகரித்துள்ளதால் ரயில்வேயின் வருவாய் குறையத் தொடங்கியுள்ளது. எனவே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் அல்லாமல் வேறு வகையாகவும் ரயில்வேயின் வருவாயை உயர்த்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள ரயில்வே நடைபாதைகளைத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டணம் அல்லாத வருவாய் கொள்கையின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த புதனன்று மக்களவையில் ரயில்வே நிர்வாகம் அளித்த பதிலில், அதிக நெரிசலில்லாத, குறைந்த அளவே பயன்படுத்தப்படும் ரயில்வே பகுதிகளை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜப்பான் போன்ற நாடுகள் இந்த முறையில் 30 சதவிகிதம் வரை வருவாயை ஈட்டுகின்றன என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை பீச்- தாம்பரம் தடம் என்பது மிகவும் நெரிசலானதாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பிச்- வேளச்சேரி இடையேயான தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஏராளமான பகுதிகள் காலியாக உள்ளதாகவும், இத்திட்டம் மூலம் அந்த நிலையங்களின் வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக