வியாழன், 27 ஜூலை, 2017

பன்னீர்செல்வத்தின் கிணறு வாங்கியவர் பொதுமக்களுக்கு இலவசமாக தருகிறார்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் கிராமம், இங்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் 200 அடி கிணறு உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள், கிணற்றை கிராமத்திற்கு எழுதி தர வேண்டும் என வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி லட்சுமிபுரம் கிராம முக்கிய பிரமுகர்களுடன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரச்சனைக்குரிய நிலத்தை கிராம மக்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக் கொண்டார். இதனால் நிலத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முதல் நாளே புஷ்பராஜ் என்பவருக்கு அந்த நிலத்தை ஓபிஎஸ் விற்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று ஓபிஎஸ் நிலத்தில் இருந்த ராட்சத கிணறு, போர்வெல் கிராமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராட்சத கிணறு, ஆழ்துளை கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக தருவதாக இடத்தை வாங்கிய புஷ்பராஜ் உறுதியளித்தார். மேலும் ஒப்படைக்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என இருதரப்பு இடையே ஒப்பந்தம் போடப்பட்டு கிணறு பிரச்சனை முடிவுக்கு வந்தது. நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக