புதன், 19 ஜூலை, 2017

மலேசியாவில் ஓங்கி ஒலிக்கும் பெரியாரின் குரல்! பட்டிதொட்டி எல்லாம் பரப்புரைகள் ..

அதி அசுரன்.
Kaattaaru: மலேசியாவில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு இடங்களில் திராவிடர் இயக்கப் பரப்புரைகள் நடைபெற்றன. திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அறிவுக்கரசு, மஞ்சை வசந்தன், இராம அன்பழகன், தோழர் மதிமாறன், பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் மலேசியாவில் நடந்த தமிழ் உணர்வாளர்கள் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்.
மாநாட்டுக் குழுவினர் மாநாடு முடிந்ததும் அந்நாட்டில் மேலும் சில இடங்களில் திராவிடர் இயக்கப் பரப்புரைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தோழர் பெரியார் காலத்திற்குப் பிறகு மீண்டும் மலேசிய மண்ணில் திராவிடர் கருத்தியல் பரவுவது பார்ப்பனர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பெரியாரியல் பரப்புரைகளைத் தடுக்க, வழக்கம் போலத் தமது ஏவல்படையான தமிழ்த்தேசியக் கும்பல் ஒன்றைக் களமிறக்கி விட்டுள்ளது. தமிழர் களம் என்ற அந்த அமைப்பும், அதன் ஆதரவாளர் களும் நமது தோழர்கள் பேசும் இடங்களில் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
கிள்ளான் தெங்கு கிளானா மின் புத்தகசாலை மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வு தமிழ்த்தேசியம் பேசும் ஒரு கும்பலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 28.06.17 ல் காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திலும் சலசலப்பை உண்டாக்கியுள்ளனர்.
முக்கியமாக, தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்களின் உரை, அங்குள்ள தமிழ்க் கம்பெனிகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை உண்டாக்கியது. தமிழன் என்ற தமிழ்ப்பண்பாடு என்ற பெயரில் முழுக்க முழுக்கப் பார்ப்பனப் பண்பாட்டைத்தான் நீங்கள் பின்பற்றுகிறீர்கள். பார்ப்பன ஆதிக்கத்திற்குத்தான் முட்டுக்கொடுக்கிறீர்கள் என்று ஆதாரங்களுடன் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றினார்.
அவரது உரைக்கு அங்குள்ள பார்ப்பன அடிவருடிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து அவரைப் பேச விடக்கூடாது என்ற எண்ணத்தில், அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில் சலசலப்புகளை உண்டாக்கி, கூட்டங்களை பாதியிலேயே நிறுத்த வைக்கும் முயற்சியில் பார்ப்பன அடிமைகள் இறங்கியுள்ளனர்.
மலேசியத் தமிழ்நெறி வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர் பெருமாள், எழிலன்,, சிலாங்கூர் தமிழ்ச் சங்கத் தலைவர் எல்.சேகரன் உள்ளிட்டோர் தமிழர் களம் கும்பலுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். நமது கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீது மலேசியக் காவல்துறையிலும் புகார் செய்துள்ளனர்.
மலேசியாவில் மிக நீண்ட காலமாக, திராவிடர் இயக்கப் பரப்புரைகள் நடைபெற வில்லை. அதேசமயம், மாரியம்மன் பண்டிகை, முருகன் தேர்த்திருவிழா, தைப்பூசம் போன்றவைகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. அவை அங்குள்ள தமிழர்களின் அடையாளமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ், ஷீரடி சாய்பாபா, அமிர்தானந்தமயி போன்றவர்களின் ஆதரவாளர்கள், பக்தர்கள் இலட்சக்கணக்கில் உருவாகியுள்ளனர். இந்தியர்களின் அடையாளமாகவே இந்தச் சாமியார்கள் உள்ளனர். இந்திய அடையாளம் என்பதை முன்னிறுத்தி சாமியார்களின் மடங்கள் பெருகியுள்ளன. அந்தச் சாமியார்களின் மடங்களை ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் தம்வசப்படுத்தி வைத்துள்ளது.
சபரிமலை அய்யப்பனைத் தரிசிக்க, விமானத்தில் திருச்சிக்கு வந்து, திருச்சி யிலிருந்து பாதயாத்திரை செல்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம், பழனி கோவில்களுக்கு வந்து செல்வதைக் கடமையாகக் கொண்டுள்ளனர்.
இது மட்டுமில்லாமல், மலேசியத் தமிழர்களின் அன்றாட வாழ்வில், மலையாள மாந்திரீகர்கள், பேய், பிசாச, பில்லி சூனியக் காரர்கள், ஜோசியர்கள், இராசிக்கல் காரர்கள், வாஸ்து நிபுணர்கள் போன்றவர்களின் ஆதிக்கமும் மிக அதிகமாக உள்ளது. ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களையும் முழு மனநோயாளிகளாகவே மாற்றும் ஆரியப்பார்ப்பன முயற்சி பெருமளவு வெற்றி பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக, பிற்படுத்தப்பட்ட ஜாதிச்சங்கத் தலைவர்கள் அவர்களின் பங்குக்கு ஜாதி வெறியையும் உருவாக்கி வருகின்றனர். தமிழர்களின் வாழ்வில் இடம்பெறும் திருமணம் போன்ற இல்லச் சடங்குகள் மிகப்பெரும் பொருட்செலவில் நடைபெறுகின்றன. அது தான் கவுரவம் என்ற எண்ண தலைதூக்கி உள்ளது
மலேசியத் தமிழர்களின் அமைப்புகளும் இந்த ஜாதி. மத. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக எதையும் செய்வதில்லை. ஈழவிடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள் பல நடந்துள்ளன. ஆனால், தமிழர்கள் விடுதலைக்கு வேண்டிய பரப்புரைகள் நடை பெறுவதில்லை. மிக மிக அரிதாக, இப்போது தான் தமிழ் உணர்வாளர் மாநாடு என்ற பெயரில் ஒரு முயற்சி நடந்துள்ளது. அதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று பார்ப்பன – தமிழ்த்தேசியக்கும்பல் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
இரப்பர் தோட்டங்களிலும், தேயிலைக்காடுகளில் கொத்தடிமைகளாகப் பணியாற்றத் தொடங்கிய காலத்திலேயே இந்த அடிமைத்தனங்களும், மூடச்சடங்குகளும் திணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரப்பர் தோட்டமும், செம்பனைத் தோப்புகளும் தனித்தனிச் சிறைகளாகவே இயங்கியுள்ளன. ஒவ்வொரு எஸ்டேட்டிலும், ஒரு மளிகைக்கடை, ஒரு கள்ளுக்கடை, சாராயக்கடை, ஒரு முருகன் கோவில் அல்லது மாரியம்மன் கோவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தாண்டிப் பல தலைமுறைகளாகத் தமிழன் சிந்திக்கவே இல்லை. தோழர் பெரியாரின் பரப்புரைகளுக்குப் பிறகு எண்ணற்ற மாற்றங்கள் உண்டாயின. ஆனால் தொடர் பரப்புரைகள், தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர்களின் தொடர்புகள் குறைந்து போனதால் இச்சிக்கல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் வடமாநிலங்களுக்குச் சென்றுவந்தால், அவர்களது பிற்போக்கான வாழ்க்கைநிலை, சமுதாய நிலையை அறியலாம். அதுபோல மலேசியாவுக்குச் சென்று மக்களோடு மக்களாகப் பழகி வந்தால், எண்ணற்ற மலேசியத் தமிழர்கள் மிகவும் பிற்போக்காக வாழ்வதும், அந்தப் பிற்போக்கு – அடிமைத்தனங்களையே தங்களது பண்பாட்டு அடையாளங்களாகக் கருதி வாழ்வதையும் அறியலாம். தமிழ்நாடு ஜாதி, மத, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மக்களைக்கொண்ட நாடு என்று கூறவரவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட மிக மோசமான மனநிலையில் மலேசியத்தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதையே வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள பெரியார் இயக்கங்கள் மலேசியத் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்க்கை, சமுதாய விடுதலை தொடர்பாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டிய முக்கியமான தருணம் இது. திராவிடர் கழகத்திற்கு அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. திராவிடர் கழகம் அங்கு அரசு பதிவு பெற்ற அமைப்பாகவே இயங்குகிறது. கடந்த 2015 ல் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மலேசியா சென்ற போது, அவரைச் சிறப்பித்து, திராவிடர் கழக அலுவலகத்திலேயே ஒரு நிகழ்வையும் நடத்தியது. இப்போதும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் அங்கு சென்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இது மேலும் தொடர வேண்டும். அதிகமாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக