சனி, 8 ஜூலை, 2017

கதிராமங்கலம் போராட்டம்: கலங்கி நிற்கும் கைதானவர்களின் குடும்பம்!

கதிராமங்கலம் போராட்டம்: கலங்கி நிற்கும் கைதானவர்களின் குடும்பம்!
மின்னம்பலம் : கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று போராடியவர்களில் 10 பேர் கைதாகி சிறையிலுள்ளனர். இதனால், அவர்களுடைய குடும்பத்தினர் ஆதரவின்றி சோகத்தில் கலங்கி நிற்கின்றனர்.
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் கச்சா எண்ணெய் துரப்பணக் கிணறு அமைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் துரப்பணக் கிணறு அமைந்துள்ளது. அங்கே எடுக்கும் கச்சா எண்ணெய் பூமியில் குழாய்கள் புதைத்து அதன் மூலம் குத்தாலத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கதிராமங்கலத்தில் பூமியில் புதைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாய்கள் புதைத்து பல ஆண்டுகள் ஆனதால், சில மாதங்களாக அந்த குழாயிலிருந்து எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுவந்தது. இந்த எண்ணெய் கசிவால் கதிராமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீரும் விளைநிலங்களும் பாழாகிறது என்று அந்த கிராமத்து மக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதி கதிராமங்கலத்தில் உள்ள வனதுர்கை அம்மன் கோயில் பகுதியில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், விபத்து ஏற்படுமோ என அச்சப்பட்ட கதிராமங்கலம் கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்களுடைய கிராமத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சில பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், தருமராஜ், ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் ஜூலை 7ம் தேதிக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஜூலை 8ம் தேதியுடன் தொடர்ந்து 7 நாட்களாக அந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த ஏழு நாள் போராட்டத்தில் கதிராமங்கலத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோ, வேன் வாகனங்களில் கருப்புக்கொடி கட்டபட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர். கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். நேற்று கதிராமங்கலத்தில் குடிநீர் குழாய்களில் கச்சா எண்ணெய் கலந்துவந்ததால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், கதிராமங்கலத்தில் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதால் அவர்களைப் பிரிந்து உள்ள குடும்பத்தின சோகத்தில் கலங்கி நிற்கின்றனர்.
இந்த போராட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள தருமராஜ் என்பவரின் மனைவி தமிழரசி இன்று ஜூலை 8ம் தேதி ஊடகங்களிடம் கூறுகையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராடியதால், அவரை போலீஸார் கைது பண்ணி சிறையில் அடைத்துவிட்டார்கள். நீதிமன்றம் ஜாமீனும் தர மறுத்துவிட்டது. நான் அவர் இல்லாமல் தனியாக இந்த கைக்குழந்தையை வைத்துக்கொண்டு வேதனைப் படுகிறேன். நானும் எனது குழந்தையும் அவரை எப்போது பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.
அதே போல, இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ரமேஷ் என்பவரும் சிறையில் உள்ளார். அவருடைய மனைவி லதா வாய்ப் பேச முடியாதவர். தற்போது நிறைமாத கர்ப்பினியாக உள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லக்கூட அவருடைய கணவர் அருகிலில்லை என்பது அப்பகுதியில் பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
இப்படி கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறையிலுள்ளவர்களின் குடும்பம் சோகத்தில் கலங்கி நிற்கிறது. இதனால், கோபமடைந்துள்ள கதிராமங்கலம் கிராம மக்கள், போராட்டத்தில் கைதானவர்களை மாவட்ட நிர்வாகம் விடுதலை செய்யும்வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், பெண்கள் காவல்துறைக்கு எதிராகவும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராகவும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெண்கள் பெரிய அளவில் கலந்துகொண்டு போராடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், கதிரமங்கலத்தில் குடிநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வருவதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கதிராமங்கலம் கிராமத்தில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று ஜூலை 7ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போதெல்லாம் போராட்டத்தில் பெண்களும் சிறுவர்களும் கலந்துகொள்வது பேஷனாகிவிட்டது என்று மறைமுகமாக கதிராமங்கலத்தில் பெண்கள் போராடுவதை கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார்.
இதற்கு தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஊடகங்களிடம் கூறுகையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கதிராமங்கலத்தில் போராடும் ஆண்களையோ அல்லது போராடும் பெண்களையோ கொச்சைப்படுத்தும் விதமாக அவர்களைக் கிண்டல் செய்து பேசுவதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக