புதன், 26 ஜூலை, 2017

நம்ம மெட்ரோவில் இந்தியை விரட்டிய கன்னடர்கள்!

கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, பெங்களூருவில் செயல்படும் நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்தி மொழியை நீக்கம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கிவிட்டது. 1937ம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி தலைமையிலான அரசு இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கி உத்தரவிட்டது. அப்போது, இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கம் முதலில் தீர்மாணம் இயற்றியது. இந்த முதல் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சுத்தானந்த பாரதியார், சோமசுந்தர பாரதியார், ஈ.வெ.ரா. பெரியார், மீனாம்பாள், தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்தி மொழிக்கு எதிரான போராட்டம் வலுக்கவே ராஜாஜி தனது இந்தி மொழித் திணிப்பை அப்போதைக்கு ஒத்திவைத்தது. அதன் பிறகு, தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1940களிலும், பின்னர் 1950களிலும் அவ்வப்போது எழுந்தன. இதையடுத்து, தமிழகத்தில் 1963 - 65ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களின் எழுச்சியுடன் பெரிய அளவில் நடைபெற்றது. ரயில் நிலையங்களில் பெயர்ப்பலகைகளில் எழுதப்பட்ட இந்தி எழுத்துகள் தார்ப்பூசி அழிக்கப்பட்டன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக பெரிய அளவில் முன்னெடுத்தது. இந்தியை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மாணவர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தனர். இந்தி எதிர்ப்பு போராட்டத் தீயில் எழுச்சி பெற்றிருந்த திமுக 1967ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சரானார். இதையடுத்து, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இப்படி தமிழகம் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து மீண்டும் இந்தி திணிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போதும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், முன்பு போல இந்தியாவின் தென்கோடியில் தமிழகத்தின் குரல் மட்டும் தனியாக ஒலிக்கவில்லை. தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, வட மாநிலங்களில் மேற்குவங்கம், மாகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களிலும் இப்போது இந்தி எதிர்ப்பு போராட்ட குரல்கள் ஒலிக்கின்றன.
இந்த சூழலில் கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு நம்ம மெட்ரோ என்று பெயரிடப்பட்டது, நம்ம மெட்ரோ ரயில் சேவை பெங்களூரு மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், ஒரே ஒரு சிக்கல். அது என்னவென்றால், மெட்ரோ ரயிலில் பெயர் பலகையில் முதலில் இந்தி பிறகு ஆங்கிலம் அதன் பிறகு கன்னட மொழி இடம்பெற்றுள்ளது. பெங்களூருவிலேயே கன்னட மொழி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் கன்னட அமைப்பினர் கொதித்துப் போய்விட்டனர். அதனால், கன்னட அமைப்புகள் இந்தியை எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கின. மேலும், நம்ம மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் கன்னடம் முதலிலும் அடுத்து ஆங்கிலம் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று கன்னட ரட்சன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் எழுதப்பட்ட இந்தி பெயர்ப்பலகைகளை கருப்பு மை பூசி அழித்தனர். இந்தி மொழி கன்னடத்தை ஆதிக்கம் செய்யவிட மாட்டோம் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். கர்நாடக மாநில அரசும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது.
இந்த போராட்டங்களால் பெங்களூரு நம்ம மெட்ரோவுக்கு தேவையில்லா தடங்கல்கள் வரத்தொடங்கியது. இதையடுத்து, இன்று ஜூலை 26ம் தேதி பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் சிங் கரோலா செய்தியாளர்களிடம் கூறுகையில், நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர்பலகைகளில் இந்தி மொழி விரைவில் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், அவர், கன்னட அமைப்புகளும், மாநில அரசும் வேண்டுகோள் விடுத்ததால் மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இருந்து இந்தி பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி மொழி நீக்கபடும் என்று அறிவித்திருப்பது இந்தி எதிர்ப்பில் கன்னட அமைப்புகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்தி எதிர்ப்பில், தென்னிந்திய மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றும் வரலாறு தொடங்கியிருக்கிறது minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக