ஞாயிறு, 9 ஜூலை, 2017

ஜி எஸ் டி க்கு எதிராக மக்கள் நல கூட்டணி போராட்டம் அரிவிப்பு!

மக்கள் நலக் கூட்டணியைப் புதுப்பித்த  ஜி.எஸ்.டி!
மின்னம்பலம் : ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணி போராட்டத்தை அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…
“ஜூன் 30 நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ஜி.எஸ்.டி. ஏழை எளிய மக்களுக்கு பலன் தரும் என்றார். ஆனால், ஜி.எஸ்.டி-யால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்திருக்கிறது. உணவகங்களில் உணவுப் பொருள்கள் விலையேறியுள்ளன. தண்ணீர் கேன் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. நோட்டுப்புத்தகங்கள், பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்கள் மீது 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைப்பட டிக்கெட்டுகள் மீது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கட்டணம் உயர்ந்துள்ளது. இவையெல்லாம் அனைத்துத்தரப்பு மக்களையும் மிகக்கடுமையாக பாதிக்கிறது.

இதுவரை வரிவிதிப்பு இல்லாத 500 பொருள்களின் மீது வரி ஏற்றப்பட்டுள்ளது. உயிர்காக்கும் பல மருந்துகளுக்கு வரி 9 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிரைண்டர்கள் மீதான வரி 4 சதவிகிதமாக இருந்தது 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தீப்பெட்டித் தொழில் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் தையல் மையங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன. சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் வரும் 21ஆம் தேதியிலிருந்து போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி. கவுன்சலில் மத்திய அரசுக்கு 3இல் ஒரு பங்கு வாக்கு இருக்கிறது. இது மாநிலங்களின் உரிமைகளைக் கடுமையாக பாதிக்கும். மாநிலங்கள் வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி. கவுன்சலின் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சலில் ஓங்கி இருக்கிறது. வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களிடமிருந்து இப்பொழுது ஜி.எஸ்.டி. கவுன்சலுக்குப் போய்விட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சல் எடுக்கும் முடிவுகளை நாடாளுமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்படுத்தாதது ஜனநாயக மறுப்பாகும்.
எனவே, ஜி.எஸ்.டி-யால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இவற்றையெல்லாம் நீக்க வேண்டுமென மக்கள் நலக் கூட்டமைப்பு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14.07.2017 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. ஆகிய கட்சிகளின் சார்பில் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல கூட்டியக்கமாக இருந்து, பின் மக்கள் நலக் கூட்டணியாக மாறி, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது. பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி கம்யூனிஸ்டுகள் - திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மக்கள் நலக் கூட்டணி முடங்கியது.
இப்போது ஜி.எஸ்.டி-க்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மூன்று கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டம் அறிவித்துள்ளன. மக்கள் நலக் கூட்டணியை ஜி.எஸ்.டி. இப்போது புதுப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக