வியாழன், 13 ஜூலை, 2017

சூரத்: மோடியின் மண்ணில் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து இலட்சம் பேர் பேரணி!

ஜூலை 1 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஜவுளி வியாபாரிகள்
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் எது மாறியிருக்கிறதோ இல்லையோ, மோடியின் குஜராத், இன்று மோடிக்கு எதிரான குஜராத்தாக மாறியிருக்கிறது. இந்தியாவிலேயே வைரம் மற்றும் ஜவுளித் தொழிலுக்குப் பெயர் போன சூரத் நகரம், மத்திய மோடி அரசுக்கு எதிரான போர்க்களமாக மாறியிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வைர வியாபாரிகள் மற்றும் ஜவுளி மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவணிகர்கள், மோடி அரசு அமல்படுத்தியிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிராக அன்றாடம் பல்வேறு கடையடைப்புப் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை 1 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஜவுளி வியாபாரிகள், ஜூலை 3 அன்று சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் திரண்டு ஜவுளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரியை இரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய வியாபாரிகளின் மீது குண்டாந்தடித் தாக்குதலைத் தொடுத்து கலைத்தது போலீசு.
இப்போராட்டம் குறித்து, இயந்திரத்தறி உரிமையாளரும், ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்துவதற்கு முன்னர் வரை பாஜகவின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மஹேந்திர ரவோலியா கூறும் போது “வியாபாரம் தான் எங்கள் கடவுள், வியாபாரமே இல்லாத போது பாஜகவை நாங்கள் ஏன் வழிபட வேண்டும்?“ என்று வெடிக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் நாள் நள்ளிரவில் நாட்டுமக்களின் தலையில் மோடியால் இடியாய் இறக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து குஜராத் ஜவுளி மற்றும் நெசவுத் தொழில்த் துறை மீண்டு வருவதற்குள் இந்த சரக்கு மற்றும் சேவை வரியால் மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் மோடி. குஜராத்தில் மட்டும், ஜவுளி மற்றும் நெசவுத் தொழில் சார்ந்து சுமார் பத்து இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த 5% ஜி.எஸ்.டி வரியால் மிகப்பெரிய அளவில் தொழில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஜவுளி மற்றும் நெசவுத் தொழிலில் சிறு வியாபாரிகளே மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஜவுளிகளைத் தங்கள் இருசக்கரவாகனங்களில் ஏற்றிக் கொண்டு நகர்ப்புறப் பகுதிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று விற்பனை செய்து தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர். ஜி.எஸ்.டி வரியானது, வியாபாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்றும், இறக்குமதி செய்யப்படும் ஜவுளிகளின் விலையுடன் தங்களால் போட்டியிட முடியாது என்கின்றனர், வியாபாரிகள். ஜி.எஸ்.டியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜவுளிகளின் விலை அதிகரிக்கும் என்றும், ரூ.100 க்கு விற்கப்படும் புடவை சுமார் ரூ.190 வரை விலை உயரும் வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார், ஒரு வணிகர்.
கடந்த ஜூன் மாதம் 18 அன்று வைர வியாபாரிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டிருக்கும் வியாபார இழப்பு சுமார் 700 கோடி ரூபாயாகும். அந்த அளவிற்கு நாட்டின் பொருகளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த வைரவியாபாரத் தொழில்.
மத்திய அரசு வரையறுத்துள்ள ஜி.எஸ்.டி.யின்படி பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு சுமார் 3% ஜி.எஸ்.டி வரியும், 5% கூலி வரியும், பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு 0.25% ஜிஎஸ்.டி. வரியும் விதித்துள்ளது. இதில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு விதிக்கப்படும் 3% வரியை ஏற்றுமதியின் போது திருப்பியளிப்பதாக அரசு கூறியுள்ளது. வைரத் தொழிலில் சுமார் 96% உற்பத்தி ஏற்றுமதிக்கான உற்பத்தியேயாகும். குஜராத் வைர வியாபாரிகள் தங்கள் மீது சுமத்தப்படும் இந்த வரிகள், ஆண்டுக்கு சுமார் 90,000 கோடி ரூபாய்க்கு நடைபெறும் வர்த்தகத்தை சுமார் 20% வரை சுருக்கும் என்று கூறுகின்றனர்.
சூரத்தில் செயல்படும் மிகப்பெரிய வைரம் பட்டை தீட்டும் நிறுவனத்தின் நிறுவனர் கோவிந்த்பாய் தொலாக்கியா கூறுகையில், இவ்வரி விதிப்பு நேரடியாக 4% வியாபாரத்தை மட்டுமே (உள்நாட்டுக்கான உற்பத்தி) பாதிக்கும் எனக் கூறப்பட்டாலும் மறைமுகமாக 96% வியாபாரத்தையும் (ஏற்றுமதி) பாதிக்கும் என்றார். சூரத் நகரைத் தவிர்த்து அஹமதாபாத் பாவ்நகர் மற்றும் அம்ரெலி ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் 5 இலட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வைர வியாபாரத்தைச் சார்ந்து இருக்கின்றனர்.
மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா – ஸ்டேண்ட் அப் இந்தியா என உதார் விடும் மோடியின் மக்கள் விரோத, கார்ப்பரேட் சார்பு நடவடிக்கைகளால், ஏற்கனவே இந்தியா முழுவதும் மக்கள் கொதிநிலையில் இருந்து வருகின்றனர். மோடியின் பக்தர்களான குஜராத் வணிகர்களும் தற்போது நேரில் சிக்கினால் மோடியின் கழுத்தைப் பிடிக்கும் அளவிற்கு கடுங்கோபத்துடன் இருக்கின்றனர்.
விவசாயிகள், சிறு வணிகர்கள், மற்றும் தொழிலாளர்களையும் சிறிது சிறிதாகச் சாகடிக்கும் மோடிக்கு இந்திய மக்கள் விரைவில் தக்க பதிலடி கொடுப்பார்கள். அது மோடியின் குஜராத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது என்பது தான் சிறப்பு.
செய்தி ஆதாரம்: வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக