செவ்வாய், 25 ஜூலை, 2017

பயிர் காப்பீட்டு தொகை இழப்பு வழங்க முடிவு!

விடுவிக்கப்பட்டது பயிர் காப்பீட்டு தொகை !
மின்னம்பலம் : தமிழக விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தங்கள் விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராடி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். இந்நிலையில் பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விடுவித்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ இன்று (25.7.2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. 19.07.2017 வரை ரூ.1453.58 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படக்கூடும்.

பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களால் விடுவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு ரொக்கமாக வழங்கப்படக்கூடாது என்றும், சேமிப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படையாகச் செயல்படும் வகையில் பயனாளிகளின் பட்டியல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்கப்பட வேண்டும். மேலும், துணைப் பதிவாளர் தலைமையில் பறக்கும் படை குழுக்களை அமைத்துக் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. தவறுகள் நடைபெறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக