திங்கள், 17 ஜூலை, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தால் குண்டாஸ்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காகக் கைது செய்யப்பட்ட மாணவி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் துண்டு பிரசுரங்கள் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவர் நக்சல் அமைப்புடன் தொடர்பிலிருக்கிறார், என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜூலை 17-ஆம் தேதி(இன்று) காலை வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் காவல் ஆணையர் சஞ்சைய்குமார் ஆணைப் பிறப்பித்தார். அதனால், அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில், காவல்துறையின் ஒடுக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. மே 17 இயக்கம் சார்பாக, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களைக் கைது செய்தது மட்டுமல்லாமல், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன், அருண் உள்ளிட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக