வியாழன், 6 ஜூலை, 2017

புதுவையில் பாஜகவை பின்கதவால் நுழைத்த ஆளுநர் கிரண் பேடி

Gajalakshmi சென்னை : புதுவை சட்டப்பேரவைக்கு 3 நியமன உறுப்பினர்கள்
நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். ஆனால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பதவிகளை நிரப்ப யாருடைய பெயரையும் அரசு சிபாரிசு செய்யவில்லை. இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன்படி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது. நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுச்சேரி ஆளும் கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


புதுவையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென்று நேற்று பதவியேற்றுக் கொண்டனர். துணை நிலை ஆளுனர் கிரண்பேடி முன்னிலையில் 3 பேரும் நேற்று மாலை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, புதுவையில் வருகிற 8-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுவை சட்டப்பேரவைக்கு பா.ஜனதா 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றது தொடர்பாக நியமன உறுப்பினர்கள் 3பேர், புதுவை அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியிடையே அதிகாரப் போட்டி நடந்து வரும் நிலையில் நியமன உறுப்பினர்கள் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது.

நாராயணசாமி குற்றச்சாட்டு இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறியுள்ளார். உறுப்பினர்களை நியமனம் செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக