ஞாயிறு, 30 ஜூலை, 2017

புளியரம்பாக்கம்... சகித்து கொள்ள முடியாத சாதிய சக்திகள்... நடந்தது என்ன? நடப்பது என்ன?

Juliet Jenifar: Kanthaha kaneerudan...
தங்கையின் கண் முன்பே தன்னுடைய இரண்டு அண்ணன்களையும் கடுமையாக அடித்து கொல்வதற்காக 5 0 பேர் கொண்ட கும்பல் தூக்கி செல்லும்போது அந்த தங்கையின் மனசு எப்படி துடித்து இருக்கும்.தடுக்க போன அந்த தங்கையை பார்த்து...உன்னை சீர் அழித்து கொன்று போட்டு விடுவோம் என்று சொல்லும்போது அந்த அண்ணன்களின் கண்ணீரில் வழியும் பரிதாபத்தை பிடிக்க இங்கு எந்த நீதி மன்றத்திலாவது முடியுமா?
ஊஞ்சலில் படுத்து உறங்கி கொண்டு இருந்த தன்னுடைய இரண்டு வயது குழந்தையை தூக்கி வீசினால்..அந்த தாயின் மனசு எப்படி துடித்து இருக்கும்.
என் மகன் கட்டியை வீடு சார் இது....நாங்க காசு பணம் இல்லாதவங்க சார்..என் மகன்தான் சார்..10 வருடமாக வேலைக்கு சென்று இந்த வீட்டை கட்டினான்.அவன் இல்லை என்றால் எங்கள் குடும்பத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் சார்..அவன் கட்டியை வீட்டிலையே அவனுக்கு கருமாதி வைத்து இருக்கிறோம் சார் என்று கூறிய ஒரு அம்மாவின் வலியை எதிர் கொள்ள முடியாமல் கலங்கி நின்றேன்.
வழக்கம் போல் நம் தமிழ் சமூக மவுனம் காத்து கொண்டு இருக்கிறது....
போங்கடா..நீங்களும் உங்கள் சாதி நீதியும்....
என்னதான் நடந்தது?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகில் உள்ள கிராமம் புளியரம்பாக்கம். கடந்த 23.07.2017 அன்று இரவு சுமார 7.30 மணியளவில் இக்கிராமத்தில் உள்ள தலித் குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 50க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு சென்று அங்கிருந்த தலித் மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொருட்களை அடித்து சூறையாடியுள்ளனர். வெங்கடேசன், ஆதிகேசவன் என்கிற இரண்டு இளைஞர்களை அடித்து கடத்திச் சென்று கத்தியால் குத்தி 12கி.மீ தொலைவில் உள்ள செல்லபெரும்புலிமேடு – மாங்கல் கூட்டு ரேழடு சிப்காட் அருகே வீசி எறிந்துள்ளனர். இதில் வெங்கடேசன் இறந்து போனார். ஆபத்தான நிலையில் ஆதிகேசவன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களும் 20 – 30 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் செல்லபெரும்புலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது.
புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தலித்துகள் ஓரளவு பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள். பெரியளவில் வசதியில்லை என்று சொன்னாலும் நிலமும் அரசு வேலையும் சொந்த வீடும் உள்ள மக்களாக பெரும்பாலானோர் இருந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல இந்த பகுதியில் உள்ள தலித்துகள் அரசியல் ரீதியாகவும் ஓரளவு தன்னெழுச்சி பெற்றவர்கள். சாதிய ரீதியாக புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தலித் இளைஞர்களுக்கும் செல்லபெரும்புலிமேடு பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதி இளைஞர்களுக்கும் இடையே உரசல் இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 21.07.2017 அன்று செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் புளியரம்பாக்கம் தலித் மாணவர்களை செல்லபெரும்புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கசாதி மாணவர்கள் சாதி ரீதியாக இழிவாகப்பேசி தாக்கியுள்ளனர்.
மறுநாள் தலித் மாணவர்கள் ஆதிக்கசாதி மாணவர்களை தாக்கியுள்ளனர். பள்ளிக்கூடத்தில் இதுபோன்ற தாக்குதல் நடந்தால் இரண்டு தரப்பினரும் மாணவர்களை அழைத்து அறிவுரை சொல்லி சமாதானம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஆதிக்கசாதியைச் சேர்ந்த கட்சி பின்னணியில் உள்ள சுமார் 20 இளைஞர்கள் 23.07.2017 அன்று காலை சுமார் 11.30 மணியளவில் புளியரம்பாக்கம் கிராமத்திற்கு வந்துள்ளனர். யாருடா எங்கள் பசங்களை அடித்தது? உங்களை உயிரோடு விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். தலித்துகளும் இது ஏதோ சிறுவர்கள் பிரச்சனை என்று அமைதியாக இருந்துவிட்டனர்.
இந்நிலையில் மாலை சுமார் 4.30 மணியளவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தலித் மாணவர்கள் மீது ஆதிக்கசாதி மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து செய்யாறு காவல்நிலையத்தில் தலித் தரப்பில் அன்பு என்பவர் புகார் கொடுக்க தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷ் என்கிற ஆதிக்கசாதி மாணவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் 23.07.2017 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில் கத்தி, உருட்டுகட்டை, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆதிக்கசாதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் அத்துமீறி தலித் குடியிருப்பு பகுதிக்குள் உள்ளே புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வீடுகளும் நான்கு சக்கர வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் வேலை பார்க்கும் வெங்கடேசன் என்கிற இளைஞர் விடுமுறைக்காக தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். வெங்கடேசனும் அவரது தந்தை மாதவனும் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அந்த கும்பல் வெங்கடேசனை பிடித்து அடிக்க அதை பார்த்த அவரது தம்பி ஆதிகேசவன், என் அண்ணனை விடுங்கள். எங்கள் குடியிருப்பிற்கு வந்து இப்படி தாக்குதல் நடத்துவது நியாயமா? என்று கேட்க ஆதிகேசவனையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்தில் எங்களுக்கு பயந்து எல்லோரும் அடங்கி வீட்டிற்குள் இருக்கிறார்கள். உங்களுக்கு மட்டும் எங்களை எதிர்க்கும் துணிச்சல் வந்ததா என்று கூறிக்கொண்டே தலித் இளைஞர்கள் வெங்கடேசன், ஆதிகேசவன் ஆகிய இருவரையும் அந்த வன்கொடுமை கும்பல் இழுத்துச் சென்றுள்ளது. வெங்கடேசனின் தங்கை தனலெட்சுமி அந்த கும்பலை கையெடுத்து கும்பிட, அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து உன்னை சீரழித்துவிடுவோம் மரியாதையாக உள்ளே போடி என்று இழிவாக பேசியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் இந்த வன்முறையின் போது இரண்டு வயது குழந்தையை அந்த கும்பல் தூக்கி வீட்டிற்கு வெளியே வீசியிருக்கின்றனர். தலித் பெண்களை எல்லாம் ஆபாசமாக பேசியிருக்கின்றனர். உயிருக்கு பயந்துபோன மக்கள் வீட்டிற்குள் நுழைந்து கதவினை பூட்டிக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்திருக்கின்றனர். இந்த தாக்குதல் சுமார் 30 நிமிடம் நடந்திருக்கிறது.
இழுத்துச் செல்லப்பட்ட வெங்கடேசனையும் ஆதிகேசவனையும் சாதி இந்து கும்பல் கடுமையாக சித்திரவதை செய்து அரிவாளல் வெட்டி, கத்தியால் குத்தி தங்கள் கிராமமான செல்லபெரும்புலிமேடு – மாங்கல் கூட்டு ரோடு சிப்காட் அருகே இருவரையும் வீசியுள்ளனர், சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் இறந்து போனார். ஆதிகேசவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து செய்யாறு காவல்நிலையத்தில் தலித் மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாதி இந்து தரப்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆதிக்கசாதியின் வன்முறையை எதிர்த்து கேட்டதற்காகத்தான் வெங்கடேசன் கொல்லப்பட்டுள்ளார். தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியபோதே கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுத்திருந்தால் இத்தகைய வன்கொடுமை நடந்திருக்காது. போலீசாரின் அலட்சியத்தால் தான் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
மாணவர்களுக்கு இடையே பிரச்சனை என்கிற ரீதியில் கையாள வேண்டிய இந்த பிரச்சனையை சாதிய சக்திகள் கும்பலாக சேர்ந்து கொண்டு தலித் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தி 15க்கும் மேற்பட்டோரை அடித்து காயப்படுத்தியது மட்டுமல்லாமல் ஒருவரை கொன்றும் உள்ளனர். ஆக இது ஒரு பிரச்சனையால் மட்டும் நடந்த வன்முறையாக பார்க்க முடியவில்லை. தலித் மக்கள் மீதான பொருளாதார முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, அரசியல் பலம் போன்றவற்றை சகித்து கொள்ள முடியாத சாதிய சக்திகள் இத்தகைய கோழைத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போக்கினை இந்த எமது எவிடன்ஸ் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
பரிந்துரைகள்
• வன்முறையில் ஈடுபட்ட அனைத்து ஆதிக்கசாதியினர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• குற்றத்தில் ஈடுபட்ட 19 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இதுவரை கைது செய்யயப்படவில்லை. ஆகவே குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த குற்தற்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 இலட்சம் அபராதம் வசூலித்து அவற்றினை பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• தலித் பெண்களை ஆபாசமாக பேசி பாலியல் ரீதியான வன்முறையில் ஈடுபட்ட ஆதிக்கசாதி இளைஞர்கள் மீது 354 இ.த.ச. மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 3(1)(w1) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• வெங்கடேசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
• வேண்டுமென்றே கடமையை புறக்கணித்த செய்யாறு போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
(A.கதிர்)
செயல் இயக்குனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக