திங்கள், 3 ஜூலை, 2017

கதிரமங்கலத்தில் பொதுமக்கள் மீது தடியடி

மின்னம்பலம் : கதிராமங்கலத்தில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள்மீது தடியடி தாக்குதல் நடைபெற்றது என்று இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் முதல்வர் விளக்கம் கூறினார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று ஜூலை 3ஆம் தேதி மீண்டும் கூடியது. இன்று காலை கேள்வி நேரத்தின்போது, கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாக இன்று சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. கோவி. செழியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்ப பெற வேண்டும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோவி. செழியன் கூறினார்.
அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறுகையில், கதிராமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக ஓ.என்.ஜி.சி. பணியாளர்கள் கொண்டுவந்த உபகரணங்களைப் பார்த்து எண்ணெய் எடுப்பதற்காகத்தான் அவர்கள் வந்ததாக பொதுமக்கள் நினைத்து அவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மீது வன்முறை தாக்குதலை பொதுமக்களே நடத்தினர். வைக்கோல்களைத் தீ வைத்து எரித்தும், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் கூட்டத்தை கலைப்பதற்காக மென்மையான தடியடி மட்டுமே நடத்தப்பட்டது. அதையடுத்து, கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி நிலவி வருகிறது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக