செவ்வாய், 18 ஜூலை, 2017

கருணாஸ் : நான் கூவதூருக்கு போயிருக்கா விட்டால் ஆட்சியே கவிழ்ந்திருக்கும்

நக்கீரன் : 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெ.வை சந்தித்து அதிமுக கூட்டணியில் திருவாடானை தொகுதிக்கு சீட் வாங்கி, இரட்டை இலையில் நின்று ஜெயித்தவர் நடிகர் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். சட்டமன்றத்தில் தனது கன்னி பேச்சிலேயே ஜெ.வின் புகழை சினிமா பாடலாக பாடி கவர்ந்தவர். தினமும் ஒரு எம்ஜிஆர் பட பாடலை பாடுவதை சட்டமன்றத்தில் ஜெ. வெகுவாகவே ரசித்தார். ஜெ.வின் மரணத்திற்கு பின் சசிகலா அணியின் தீவிர ஆதரவாளரானார். கூவத்தூர் முகாமால் இவரது புகழ் மேலும் கூடியது. சினிமா நடிகர் என்பதையும் தாண்டி அரசியலில் தனக்கென சில பல தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு கிடுகிடுவென வளர்ச்சி அடைந்தவர். சசிகலாவை பெங்களுரு சிறைக்கு சென்றும் சந்தித்தவர். எந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கேட்கம் கேள்விகளுக்கு சட்டென பதில் சொல்லும் சுபாவம் கொண்டவர். அந்த கருணாஸை நக்கீரன் இணையத்திற்காக தொடர்பு கொண்டபோது, ''அமைச்சர் வேலுமணி வீட்ல இருக்கண்ணே... வெளியில வந்து பேசுறேன்'' என சொன்னபடியே... வெளியே வந்ததும் அவரே நம்மை தொடர்பு கொண்டார். நாம் கேட்டதும், அவர் சொன்னதும் இதோ...
கேள்வி : அதிமுகவில் வெற்றி பெற்றிருந்தாலும், உங்களுடைய 'முக்குலத்தோர் புலிப்படை' தனிக்கட்சி. சட்டப்பேரவையில் பேசுவதற்கான வாய்ப்பு, தொகுதி நிதி ஒதுக்குவது, கோரிக்கையை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் தருகிறார்களா?

பதில் : கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கண்மாய்கள் தூர்வாரப்படுகின்றன. இரண்டு பள்ளிகளை தரம் உயர்த்த வைத்த கோரிக்கையை ஏற்றார்கள். தொண்டியில் பஸ் டிப்போ அமைக்கும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. 150 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா அமைய உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும்.

கேள்வி : நீங்கள், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேரும் சட்டமன்றத்தில் ஒன்றாக அமர்வதுபோலவே, வெளியேயும் ஒன்றாக செயல்படுவதுபோல் தெரிகிறதே...
பதில்: ஜெ. இருந்தபோது சேரன், சோழன், பாண்டியன் என்பார். கொங்கு மண்டலத்தில் தனியரசு, நாகப்பட்டிணத்தில் அன்சாரி, இராமநாதபுரம் மாவட்டத்தில் கருணாஸ் என சொல்வார். கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகியோர் தனித் தனியான அமைப்புகளாக இருந்தாலும் அனைவரும் தமிழ் சமூகம் சார்ந்த மக்கள்தான். ஆகையால் கல்வி, மொழி, பாரம்பரியம், சம்பிரதாயம், கலாச்சாரம் சார்ந்த அடிப்படையான பிரச்சனைகளுக்கு 3 பேரும் குரல் கொடுப்போம். பேரறிவாளன் பரோல் விசயத்தில் 3 பேரும் குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். வலியுறுத்தினோம். எதிர்க்கட்சித் தலைவரிடமும் குரல் கொடுக்க வேண்டும் என்று சொன்னோம். அவரும் குரல் கொடுத்தார். குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி வைத்த மையமான கோரிக்கையையே பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்பதுதான். மாட்டிறைச்சி பிரச்சனை, மாடு வாங்குவது, விற்பது போன்ற பிரச்சனையில் குரல் கொடுத்தோம். இனி வரும் காலங்களில் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒன்றாக குரல் கொடுப்போம்.

கேள்வி : பேரறிவாளன் பரோல் எந்த நிலையில் உள்ளது?
 பதில் : 3 பேரும் இதில் தலையிட்டுள்ளோம். பரோலுக்கு பரிசீலனை நடப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதில் 100 சதவீதம் ஜெயிப்போம். பேரறிவாளனை பரோலில் கொண்டு வருவோம்.

கேள்வி: 3 பேரின் ஒற்றுமை தொடர்ந்தால் அடுத்தடுத்து வரும் தேர்தலுக்கு இரு பக்கமும் கூட்டணி பேச வசதியாக இருக்கும், மதிப்பு இருக்கும் என்பதாலா?
பதில் : நிச்சயமாக. முதலில் நாங்கள் 3 பேருமே அரசியல்வாதிகள் இல்லை. எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் பெரியதாக இல்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் ஜெ. வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி செயல்பட்டால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். அப்போது நமக்கு யாரும் சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த 3 அமைப்புகளும் பெரிய சமூகமும் கூட. 3 பேருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. இந்த அடையாளத்தையும் தாண்டி மொழி, இனம் என வரும்போது தமிழன் என்ற அடையாளத்திற்கு கீழே இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்.

கேள்வி : தினகரன் அணியா? எடப்படியா அணியா?
பதில் : நான் அம்மா அணி கேள்வி : சசிகலா அணி என வெளிப்படையாக நீங்கள் அறிவித்த பின்னர் தொகுதிக்காரங்க என்ன சொல்றாங்க?. பதில் : சின்னம்மா சொல்லித்தான் அம்மா வாய்ப்பு கொடுத்தார் என்று நான் பலமுறை வெளிப்படையாக சொல்லியிருக்கிறேன். ஆகையால் நான் யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

கேள்வி : சென்னையிலேயே இருப்பதுபோல் தெரிகிறதே... தொகுதி மக்களின் குறைகளை எப்படி அறிவீர்கள்? அவர்களின் கோரிக்கையை அறிந்திருந்தால்தானே நிறைவேற்ற முடியும்?

பதில் : திருவாடனையில் எம்எல்ஏ அலுவலகம் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். இதற்காக படித்த இளைஞர் ஒருவரை உதவியாளராக வைத்துள்ளேன். சென்னையில் உள்ள அலுவலகத்தை முழு நேர அலுவலகமாக மாற்றி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளை அமர வைத்துள்ளேன். திருவாடனையில் உதவியாளரால் பெறப்படும் மனுக்கள் உடனுக்குடன் சென்னை அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இங்கு அந்த மனுக்கள் என்னுடைய லெட்டர் பேடு மூலம் மனுக்களை பரிசீலிக்குமாறு சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். கடந்த ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு பரிந்துரை செய்துள்ளேன். என்னுடய 55 ஆயிரம் சம்பளத்தில் 10 ஆயிரம் ரூபாய் திருவாடானை உதவியாளருக்கு போய்விடுகிறது. சென்னை அலுவலத்தில் உள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு 20 ஆயிரம் கொடுக்கிறேன். திருவாடானை தொகுதி பிரச்சனையை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புகிறேன். அதிகமாக கேள்வி எழுப்ப சட்டமன்றத்தில் எழுதிக்கொடுத்திருப்பவன் நான்தான். 1952ல் இருந்து 2016 வரைக்கும் திருவாடானை தொகுதி இருப்பதே இப்போதுதான் தெரிகிறது. 63 வயதுள்ள பெண்மணியை நகைக்காக கடத்தியுள்ளனர். தகவல் அறிந்து 48 மணி நேரத்தில் நகையோடு பாதுகாப்பாக அவரை மீட்டெடுத்தோம். இதற்காக தொண்டி ஜமாத்தில் இருந்து நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்கள். விளம்பரத்திற்காக இதனை சொல்லவில்லை.

கேள்வி : குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்குத்தான் ஆதரவா?
பதில் : ஆமாம். அதிமுக அரசு அதைத்தானே தீர்மானம் பண்ணினாங்க.

 கேள்வி : சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுப்பதற்காக 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறை அதிகாரி டிஐஜி ரூபா புகார் தெரிவித்திருக்கிறாரே?
பதில் : உதாரணமா கூட்டணி எம்எல்ஏக்கள் 10 கோடி ரூபாய் வாங்கினாங்கன்னு சரவணன் எம்எல்ஏ சொன்னாரு. அடுத்த நிமிடம் அவரே அது நானே இல்லை என்கிறார். அதற்குப் பிறகு வீடியோவில் இருப்பது நான்தான், குரல் என்னுடையது இல்லை என்கிறார். யாரும், யார் மேலேயும் எந்த மாதிரியான குற்றச்சாட்டுக்களையும் சொல்லலாம் என ஆயிடுச்சு. இங்க என்ன பிரச்சனைன்னா ஒரு அதிகாரி சொல்லியிருக்காங்க. ஒரு அதிகாரி சொல்லும்போது, அவுங்களுக்கு மேல உள்ள அதிகாரி, தன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்று சொல்றாங்க என்கிறார். இதேபோலத்தான் தமிழ்நாட்டில் ராஜேந்திரன் மேலே குட்கா விசயத்தில் சொன்னாங்க. இதற்கு ஒரு சரியான விசாரணையை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். அதிகாரி சொன்னது தவறாக இருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி : பேசும்போது 10 கோடி விவகாரம் பற்றி சொன்னீங்க... சரவணன் எம்எல்ஏவே மறுத்தாலும், மக்கள் மனதில் அது ஆழமாக பதிந்துவிட்டதே?
பதில் : மடியில் கணம் இருப்பவர்கள், வழியில் போக பயப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நல்ல விஷயங்கள் சமூகத்தில் போய் சேர ரொம்ப நாட்கள் ஆகிறது. கெட்ட விஷயங்கள் அடுத்த நிமிடம் போய் சேருகிறது. சோசியல் மீடியாவில் எத்தனை நல்ல விஷயங்கள் பரப்பப்பட்டிருக்கிறது என்றால் 5 சதவீதம் கூட இருக்காது. 95 சதவீதம் கெட்ட விஷயங்கள் மட்டும்தான் பரப்பப்பட்டிருக்கிறது. ஒரு டெக்னாலஜியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்க வேண்டும். மற்றவர்களை அழிக்க பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்? சினிமாத்துறைக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்னைப் பற்றி எத்தனை கிசுகிசுக்கள், குறைகள் வந்திருக்கிறது? கூவத்தூர் விவகாரத்திற்கு அப்புறம்தான். மொத்த எம்எல்ஏக்களில் மக்களுக்கு தெரிந்த ஒரே பரிச்சயமான முகம் எம்எல்ஏ நடிகர் கருணாஸ். ஆகையால் நடிகர் கருணாஸ் என்று போட்டால் தெரியும். குன்னம் ராமச்சந்திரன் என்று போட்டால் தெரியுமா? யாருக்கும் தெரியாது. மக்களுக்கு பரிச்சயமான நடிகர் கருணாஸை பற்றி போட்டால் 10 பேர் பகிர்ந்துக்கொள்வார்கள். 10 பேர் அதற்கு லைக் கொடுப்பார்கள். உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை போட்டு, அவங்களுக்கு கிடைக்கிற லைக்கில், என் வாழ்க்கைக்கு லைக்கிங் கிடைச்சிச்சின்னா எனக்கு அது சந்தோசம்தான்.

கேள்வி: கூவத்தூரில் உங்கள் ஒத்துழைப்பு அதிகமாக இருந்ததாமே?
பதில்: ஜெ. முதல் நாள் பார்த்தார். அடுத்த நாள் வாய்ப்பு கொடுத்தார். ஜெயிக்க வைத்து சட்டமன்றத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தார். கூவத்தூருக்கு கருணாஸ் ஏன் போனார், ஏன் போனார், என்கிறார்கள். நான் போகலன்னா இன்னைக்கு ஆட்சி போயிருக்குமே!. ஜெ.வின் ஆட்சி போக கருணாஸ் துணையாக இருந்தார் என்றால் அந்த அம்மாவின் ஆன்மா என்னை மன்னிக்குமா? உண்மைக்கு வலிமை அதிகம். ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் எதைப்பற்றியும் கவலையில்லை.

 கேள்வி : முரசொலி பவள விழாவிற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தாரே? கலந்து கொள்வீர்களா?
 பதில் : முதலில் அழைப்பிதழ் அனுப்பினார். அதற்கு பின்பு அவரது அறைக்கு அழைத்தார். அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். பார்மாலிட்டிக்கு அழைத்திருக்கிறேன் என்று நினைக்கக் கூடாது. நான் உங்களை நேராகவே அழைக்கிறேன். அதேநேரத்தில் உங்களுக்கு எந்தவித தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. நீங்க கலந்து கொள்வதாக இருந்தால் கலந்துகொள்ளுங்கள். முன்பே சொன்னீர்கள் என்றால் பத்திரிக்கையில் பெயர்களை போட வசதியாக இருக்கும் என்றார். என்னைப் பொறுத்தவரை எங்க முன்னோர்கள் எல்லாம் திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான். முரசொலி இன்று 75 ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது. அதனை ஆரம்பித்த ஆசிரியரும் இருக்கிறார் என்பது உலகத்திலேயே இங்குதான். பெரிய விசயம். வரலாறு. கலந்துகொள்ள விருப்பம் இருந்தாலும். எதிர்க்கட்சியில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாத சூழலில் இருப்பதை எடுத்து சொல்லிவிட்டோம். முரசொலிக்கான பெருமைகளை சொல்லி கடிதம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம்.

கேள்வி: முக்குலத்தோர் புலிப்படையில் பிரிவு வந்ததே? பாண்டித்துரை, சந்தனத்தேவன் உங்களை நீக்கியதாக அறிக்கையில் வெளியிட்டார்களே?

பதில்: இந்த அமைப்பு ஒரு அறக்கட்டளை. இது நான் தனிப்பட்ட முறையில் ஆரம்பித்தது. 2009ல் ஆரம்பிக்கும்போது நீங்கள் சொல்லும் யாரும் கிடையாது. நீங்க சொல்ற அந்த இரண்டு பேருக்கே எந்த பொறுப்பையும் என் கைப்பட எழுத்துப்பூர்வமாக கொடுத்தது கிடையாது. சமுதாய ரீதியாக வரும்போது ஒரு ஆர்வத்தில் வருகிறார்கள். எதிர்பார்ப்புகளோடு வருகிறார்கள். அப்படி வரும்போது அவர்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதபோது அடுத்த நிமிடம் வெளியே போகிறார்கள். என்னுடைய நோக்கம் என்னவோ அதை நோக்கித்தான் பயணம் செய்ய முடியும். கூட வருபவர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது. நான் ஒரு ரூபாய் உங்களிடம் எதிர்பார்க்க மாட்டேன். அதேபோல நீங்களும் ஒரு ரூபாய் எதிர்பார்க்காதீர்கள். அவ்வளவுதான். ஒரு எம்எல்ஏவுக்கு இரண்டு கார் பாஸ் கொடுக்கிறார்கள். அந்த இரண்டு கார் பாஸையும் இவர்களிடம் கொடுத்துவிட்டு, எம்எல்ஏ கார் பாஸ் இல்லாமல் நான் கார் ஓட்டீக்கிட்டு இருக்கிறேன். எத்தனைப் பேருக்கு இந்த மனசு வரும்.

கேள்வி : நடிகர் சங்கத்தில் துணைத் தலைவரான நீங்கள், சமீப காலமாக சங்கத்தில் இருப்பதுபோலவே தெரியவில்லையே? தமிழக அரசு விருதுகள் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த திரைத்துறை நிர்வாகிகளில் நீங்கள் இருந்ததுபோல் தெரியவில்லையே?

 பதில் : நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது ஊர் ஊரா போவதற்கு வழி தெரியாது. எங்க எப்படி போவதென்று தெரியாது. நாடக நடிகர்களை எப்படி சந்திப்பது என்று தெரியாது. அந்த மாதிரி நேரத்தில் கருணாஸ் தேவைப்பட்டார். ராதாரவியை ஜெயிச்சிருக்கோம். எவ்வளவு பெரிய விஷயம். ராதாரவியை எதிர்த்து ஜெயித்தது விஷால் மட்டுமே என நினைக்கிறார். நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் ஓட்டு வாங்கிட்டா அடுத்து முதல் அமைச்சரா ஆகிடலாம்முன்னு நினைச்சா என்ன பண்றது?

கேள்வி : அரசியலில் ஈடுபட்ட பின்னர் நடிகர் சங்கத்திற்கு போக நேரமில்லையா?
 பதில் : போன வாரம் நடந்த செயற்குழுக் கூட்டத்திற்கு சென்று வந்தேன். நடிகர் சங்கத்தில் சிஸ்டம் இல்லாமல் இருந்தது. இன்னைக்கு அந்த சிஸ்டத்தை உருவாக்கியாச்சு. சிஸ்டம் உருவானத்துக்கு அப்புறம் இன்னைக்கு அங்க யாருக்குமே வேலை இல்லை. அலுவலகத்தில் உள்ளவர்களுக்குத்தான் வேலை. கேள்வி : எம்எல்ஏவான பிறகு நடிக்க வாய்ப்பு வருகிறதா? பதில் : எம்எல்ஏவா ஆயிட்டாரு... எப்படி கூப்பிடுறது... கூப்பிட்டா வருவாரா வரமாட்டாரா? வந்தாலும் அவரை எப்படி ஹேண்டில் பண்றது? அவரு நடிக்க மாட்டாரு... என இப்படியொரு ரூமரை பரப்பி விடுறாங்க.

 கேள்வி : அரசியலுக்கு வந்தவுடன் சினிமாவை மிஸ் பண்றீங்களா?
பதில் : சினிமா மிஸ் ஆயிடுச்சி. ஆனாலும், நம்ம சினிமாவ மிஸ் பண்ண மாட்டோம். சினிமாதான் எனக்கு தொழில். நடிகர் என்பதால்தான் இந்த அங்கீகாரமே கிடைத்தது. தொகுதி பிரச்சனையை பார்க்க ஒரு சிஸ்டம் உருவாக்கியாச்சி. தொகுதியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் நம்பர்கள் இருக்கிறது. மனுக்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வேன். ஆகையால் படத்தில் நடிக்க உள்ளேன். இன்னும் ஒரு மாதத்தில் பெரிய இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க போகிறேன்.

கேள்வி : தமிழகத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்துவிட்டது என்று கமல் குற்றம் சாட்டியிருக்கிறாரே.
பதில் : அது சரியில்லை. இது சரியில்லை என்று வீட்டில் உட்கார்ந்து கொண்டு சொன்னால் போதுமா? கீழே இறங்கி வரணும். போராட வேண்டும். வேறு வழியில்லை. களத்தில் இறங்க வேண்டும். வந்து சரி செய்தார் என்றால், கூட இருந்து உழைக்க தயார். நல்ல விசயம் நடக்கணும். யார் மூலமாக நடந்தால் என்ன. நல்லது நடக்கிறதா அவ்வளவுதான். -வே.ராஜவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக