வியாழன், 20 ஜூலை, 2017

ஐஐடி-யை வெறுக்கும் மாணவர்கள்!


மின்னம்பலம்   2016 - 2017ஆம் கல்வியாண்டில் 889 ஐஐடி மாணவர்கள் தங்களின் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர்’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.இதில் 71 சதவிகிதம் (630) பேர் பட்டமேற்படிப்பு மாணவர்கள் (பிஜி), 196 பேர் ஆராய்ச்சி மாணவர்கள் (பிஹெச்டி), 63 பேர் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் (யூஜி) படிப்பவர்கள் ஆவர். நாடு முழுவதிலும் உள்ள 9,885 ஐஐடி இடங்களில் 73 இடங்கள் காலியாகவே உள்ளன. 2015 - 16ஆம் கல்வியாண்டில் 23 ஐஐடி-களைச் சேர்ந்த 656 மாணவர்கள் தங்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளது.மனிதவளத்துறை அளித்த தகவலின்படி, ஆராய்ச்சி மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவதற்கு காரணம், பொதுத்துறை நிறுவனங்களில் தங்களின் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்காததாலும், வேறு இடங்களில் நல்ல வாய்ப்புகளைத் தேடி, தவறாக ஐஐடி படிப்பை தேர்வு செய்து அதில் சரியாக படிக்க முடியாமல் போவதும்தான்.

திருப்பதி, பிலாய், கோவா, தார்வாட், ஜம்மு மற்றும் தன்பாத் ஆகிய இடங்களில் சமீபத்தில் நிறுவப்பட்ட நிறுவனங்களில் படிப்பை பாதியில் விட்டுச்செல்லும் நிலை இல்லை. மாணவர்கள் அதிகளவில் வெளியேறும் ஐஐடி-க்களில் ரூர்கி (27%) முதல் இடத்திலும், டெல்லி (20.6%) இரண்டாவது இடத்திலும், கான்பூர் (17.4%) மூன்றாவது இடத்திலும், காரக்பூர் (10.6%). நான்காவது இடத்திலும் உள்ளன.
பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஒரு பிரச்னையாக உள்ளது. இந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி வரை ஐஐடி-களில் 35% ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. 13,012 அனுமதிக்கப்பட்ட பணிகளில் 4,500-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. 2016ஆம் ஆண்டில் 38% பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள, ஐஐடி-களில் மத்திய அரசு அல்லது மத்திய தன்னாட்சி அமைப்புகளின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்களை அனுமதிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது ஐஐடி-களில் அவ்வப்போது கற்றுக்கொடுக்க முன்னாள் மாணவர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களை வரவேற்கிறது.
ஆறு ஐஐடி-களில் எட்டு மரணங்கள் நடந்துள்ளன. அதில், நான்கு மரணங்கள் இயற்கைக்கு மாறாகவும், மற்ற நான்கு மரணங்கள் தற்செயலாகவும் நடந்துள்ளன. ஐஐடி - காரக்பூரில் இருந்து மூன்று இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகியுள்ளன, அதேநேரத்தில் ஐஐடி - வாரணாசியில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக