சனி, 22 ஜூலை, 2017

நீட் தேர்வுக்கு எதிராக கமல் ஏன் பேசவில்லை? நீங்கள் ஏன் பேசவில்லை?

jagadheesan.lr :   : "நீட்டுக்கு எதிராக குரல்கொடுக்காமல் கமல் பம்முறாரு பார்த்தியா? ஜாதிபுத்தி தெரியுதா" என எகத்தாளம் பேசும் பெரியாரிய, அம்பேட்காரிய, திராவிட, தலித், இடதுசாரி, தமிழ்தேசிய, மற்றுமுள்ள முற்போக்காளர்களுக்கு ஒரு எதிர்கேள்வி.
திக,திமுக, அதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, பாமக, தேமுதிக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்நாட்டு கட்சிகள் இருக்கின்றன. இந்த எல்லா கட்சிகளிலும் மாணவர் அணிகள் இருக்கின்றன. இளைஞர் அணிகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டு மாணவர் எதிர்கால மருத்துவர் கனவை காலில் போட்டு மிதிக்கும் நீட் குழப்படிக்கு எதிராக இந்த மாணவர் அணிகள் புடுங்கிய ஆணிகள் என்னென்ன? அந்த மாணவர் அணிகளை தலைமை தாங்கும் இந்த கட்சிகளின் தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? தமிழகத்தை ஸ்தம்பிக்கச்செய்யும் போராட்டங்கள் என்னென்ன? மண்டல் கமிஷனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்றதும் ஒட்டுமொத்த இந்தியாவையும் கலவர பூமியாக்கிய "உயர்ஜாதி மாணவர்கள்" எய்ம்ஸ் விஷயத்தில் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக அதே ஜாதித்திமிரோடு ஒன்றுகூடி தங்கள் வேலைவாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறார்கள். அவர்களே இன்று நீட் ஆதரவாளர்களாகவும் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு பெரியாரின் பேரன்கள் அந்த கிழவன் போராடி வாங்கிக்கொடுத்த ஒவ்வொரு உரிமையும் திட்டம்போட்டு பறிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மண்ணாந்தைகளாக இருக்கிறார்கள்.
அந்த மண்ணாந்தை மாணவர்களின் அணிகளை உருவாக்கி வைத்திருக்கும் நீங்கள் நீட்டுக்கு கமல் குரல் கொடுக்க வேண்டும் என்று கொந்தளிக்கிறீர்கள். நீட்டை எதிர்க்க துப்பில்லாத ஒரு ஜன்மம் தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறதே அதை எதிர்த்தாவது உங்கள் மாணவர் அணிகள் போராடினவா? இருப்பதிலேயே ஒரு தத்தியான முதல்வரைக்கூட எதிர்க்கத்துப்பில்லாத அரசியல் கட்சிகள், அதன் மண்ணாந்தை மாணவர் அணிகள், அவர்களை வழிநடத்தும் அறிவுஜீவி ஆசான்கள் தான் கமல் ஏன் நீட் மீட்பர் வேடம் ஏற்கவில்லை என்று கேட்கிறீர்கள். கமல், ரஜினி, குஷ்பு உள்ளிட்ட எந்த சினிமா அரசியல்வாதியையும் மீட்பராக எந்நாளும் பார்த்ததில்லை. பார்க்கப்போவதும் இல்லை. காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று மூன்று சினிமா அரசியல்வாதிகள் ஏழுகோடி தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் செய்துவிட்டுப்போயிருக்கும் பாதகங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பதால். எல்லாத்துறை சீரழிவுக்கும் இவர்கள் மூவரின் பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்த தெளிவு உங்களுக்கும் இருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சனைக்கு, சிக்கலுக்கான தீர்வை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடம், அதன் தலைமைகளிடம் தேடுங்கள். அரிதாரிகளிடம் தேடாதீர்கள். அது உங்களின் அடிப்படை கோளாறை திசை திருப்பவும் அடுத்தவர் மேல் பழிபோட்டு தப்பவும் உங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்களின் இயலாமையை பூசி மெழுகவும் மட்டுமே உதவுமே தவிர அதனால் எந்த உருப்படியான பலனும் ஏற்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக