செவ்வாய், 18 ஜூலை, 2017

அரசு டெண்டர்... பங்கு பிரிக்கப்படுகிறதா பணம்? - ஜூ.வி லென்ஸ்

vikatan : அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் நான்கு திசைகளில் சிதறிக்கிடக்கின்றனர். தமிழகத்தில் நடக்கும் அந்தக் கட்சியின் ஆட்சியை, எட்டுக் கோணங்களில் பலர் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால், ஊழல் செய்வதில் மட்டும் இவர்கள் கூட்டணி ஒற்றுமையோடு இருக்கிறது. ரகசிய டெண்டர்கள், பேக்கேஜ் கான்ட்ராக்ட், ஒப்பந்ததாரர்களின் வசதிக்காக போஸ்டிங் மற்றும் டிரான்ஸ்பர், 45 சதவிகித கமிஷன், பேரம் பேசும் உறவுகள் என வியாபார அரசாங்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கோட்டை வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் கிளம்பி வருகின்றன.
;ரகசிய டெண்டர் என்பதே டெண்டரின் ரகசியம்! கடந்த  சில ஆண்டுகளாகவே    வெளிப்படையான டெண்டர்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டன. நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, மின்வாரியம், இலவசத் திட்டங்கள் என அனைத்துத் துறைகளிலும் மிக ரகசியமாக ரகசிய டெண்டர்கள் புகுத்தப்பட்டுவிட்டன.

அந்த லாபகரமான முறை, அப்படியே  இப்போதும் பின்பற்றப்படுகிறது. டெண்டர் எடுப்பதற்கு முன்பே, கமிஷன் கைமாறிவிடுகிறது. அதைக் கொடுப்பவர்களுக்கே, ‘ஷெட்யூல்’ எனப்படும் வேலைத் திட்டம்
கொடுக்கப்படும். மற்றவர்களுக்கு ‘ஷெட்யூல்’ எப்படி இருக்கிறது என்றுகூட தெரியாது. கொடுக்கப்படும் ‘ஷெட்யூல்’ அடிப்படையில், டம்மியாக டெண்டர் அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கான்ட்ராக்டரின் பினாமி பெயரில் இருக்கும். கவனமாகப் பார்த்துத் தயாரிக்கப்பட்ட இந்த டம்மி அப்ளிகேஷன்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். யாருக்கு வேலையைக் கொடுக்க கமிஷன் கைமாறியதோ, அவரிடம் வேலை ஒப்படைக்கப்படும். இந்த பிராசஸ் முடியும்போது மற்றொரு தொகை கைமாறும். இதுதான் இன்று டெண்டர் விடப்படும் முறை என்று இந்த ஏரியாக்களில் புகுந்து புறப்படும் மனிதர்கள் சொல்லி மலைக்க வைக்கிறார்கள்.
‘பேக்கேஜ்’ கான்ட்ராக்ட்!
முன்பெல்லாம் அரசுத் திட்டங்கள் தனித்தனி டெண்டர்கள் மூலம் செய்யப்படும். உதாரணமாக, 10 கிலோமீட்டர் சாலை போடும் பணி என்றால், கிலோமீட்டருக்கு ஒருவர் என்று 19 பேருக்குப் பிரித்துக்கொடுப்பார்கள். இதில் 10 சிறுசிறு கான்ட்ராக்டர்களுக்குப் பணி கிடைக்கும். அவர்கள் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுப்பார்கள். உள்ளூர் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பயனடைவார்கள். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாகச் செலவு பிடிக்காது. சென்னையில் ரோடு போட ஆகும் செலவைவிட, தர்மபுரியில் குறைவாகச் செலவாகும். இப்படி மாவட்டத்துக்கு மாவட்டம் செலவு மாறுபடும். இப்படி, ஒரு பகுதியின் விலை நிலவரம், அங்குள்ள தொழிலாளர்களின் இருப்பு ஆகியவற்றை எல்லாம் கணக்குப்போட்டு கான்ட்ராக்ட் விடப்படும். சாலைகள் போடுவது, கிராமங்களில் அரசு கட்டடங்கள் கட்டுவது, தரைப்பாலங்கள் அமைப்பது, தண்ணீர்த் தொட்டி அமைப்பது போன்றவை எல்லாம் இந்த வகைக்குள் அடக்கம். இந்த முறையை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். ஒரு மாவட்டத்தில் போட வேண்டிய பல சாலைகளை ஒன்றாகப் பட்டியல் போட்டு ‘பேக்கேஜ் சிஸ்டம்’ என்ற பெயரில் ஒரே நபரிடமே கான்ட்ராக்ட் கொடுக்கின்றனர்.
‘‘இதில் பல வசதிகள். கோடிகளைக் கொட்டும் செல்வாக்கு படைத்தவர்கள் மட்டுமே போட்டியில் இருப்பார்கள். அதனால் கான்ட்ராக்ட் விவகாரத்தில் தகராறுகள் தவிர்க்கப்படுகின்றன. எல்லோரிடமும் கமிஷனுக்காகப் பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டிய தேவை இல்லாமல், ரகசியமாக ஓரிருவரிடம் மேட்டரை முடித்துக்கொள்ளலாம். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் கமிஷனை அள்ளிக் கொடுப்பார்கள். பள்ளிகளில் கொடுக்கப்படும் இலவச முட்டைத் திட்டம், தமிழகத்தில் அமைக்கப்படும் சாலைகளுக்கான கான்ட்ராக்ட் போன்றவை இதற்கு மிகச் சிறந்த உதாரணம். இந்த வசதிக்காக, இப்போதும் அதே நடைமுறை தொடர்கிறது. நெடுஞ்சாலைத் துறையில்தான் இந்த பேக்கேஜ் கான்ட்ராக்ட் கொடிகட்டிப் பறக்கிறது. அதனால், ஒரு நபர் ஆதிக்கம் உருவாகி, ‘அவர் நிர்ணயிப்பதுதான் ரேட்’ என்றாகி உள்ளது’’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
பேரம் பேசும் உறவுகள்!
2001-க்கு முன்பு, வேலை வாங்கவும், டிரான்ஸ்பர் பெறவும் கட்சிக்காரர்களின் சிபாரிசைத் தேடிப்போவார்கள். அவரிடம் பணம் கொடுப்பார்கள். அவர் அமைச்சரைப் பிடித்துக் காரியத்தை முடித்துக் கொடுப்பார். சமீப காலமாக இதிலும் மாற்றம். அமைச்சரின் ஆபீஸில் இருக்கும் அதிகாரிகளே இந்த வேலையைச் செய்யத் தொடங்கினர். புதிதாகப் பணி நியமனம் செய்வது, டிரான்ஸ்பர் என்று அனைத்தையும் இவர்களே பார்த்துக்கொண்டனர். இந்த வேலைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மிரட்டப்பட்டு, டிரான்ஸ்பரில் துரத்தப்பட்டனர்.
ஆனால், இப்போது இந்த நிலைமையும் மாறிவிட்டது. போஸ்டிங், டிரான்ஸ்பர் என எல்லா டீலிங்குகளையும் அமைச்சர்களின் வாரிசுகளே பார்த்துக் கொள்கின்றனர். இல்லையென்றால், மாமன், மச்சான் உறவுகள் பார்த்துக்கொள்கின்றன. 
வியாபார அரசாங்கம்!
மாநிலத்தின் உற்பத்தியைப் பெருக்க அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை. அதற்கு நேரம் செலவழிக்க அரசாங்கமும் தயாராக இல்லை. என்ன வேண்டும் என்றாலும் ‘தனியாரிடம் கொள்முதல்... மக்களிடம் விற்பனை’ என்ற கொள்கையோடு செயல்படும் வியாபார அரசாங்கமாகச் செயல்படுகிறது. மின்சாரம், இலவசங்கள், டாஸ்மாக், டோல்கேட் போன்றவை இதற்கு உதாரணங்கள். அரசாங்கமே உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்தால், அதில் கமிஷனுக்கு வழி இல்லை. அதைத் தவிர்க்கவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அரசுத் துறை முன்முயற்சி எடுக்காமல், எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைக்கும் நிலையையே அரசாங்கம் தொடர்கிறது.
‘‘தலைவன் எவ்வழியோ... படைகள் அவ்வழி! முதல்வர் தன் துறையில் என்ன செய்கிறாரோ, அதையே பல அமைச்சர்கள் தங்களின் துறைகளில் செய்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறையில் இப்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு ஊற்றுக்கண் தோண்டப்பட்டுள்ளது’’ என்று கொதிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெறும் 60 கிலோமீட்டர் மட்டுமே பராமரிக்கும் கான்ட்ராக்டைப் பெற்றுள்ள தனியார் நிறுவனம் வசூலித்துள்ள டோல்கேட் கட்டணம் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய். இந்த நிறுவனத்துக்கு இன்னும் 9 ஆண்டுகள் ஒப்பந்த காலம் உள்ளது. இது ஓர் உதாரணம் மட்டும்தான். இதுபோல, தமிழகத்தில் 4 ஆயிரத்து 974 கி.மீ தூரமுள்ள சாலைப் பராமரிப்புப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் வசம் உள்ள 10 ஆயிரத்து 764 கி.மீ நெடுஞ்சாலைகளில், 10 ஆயிரம் கிலோ மீட்டரை ‘மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைத்து அதனிடம் ஒப்படைக்க திட்டம் தயாராகி உள்ளது. அப்படி அமைக்கப்பட்டால் தற்போது பணியில் இருக்கும், 2 ஆயிரத்து 690 சாலைப்பணியாளர்கள் வேலை இழப்பார்கள். அதோடு, 10 ஆயிரம் கி.மீ சாலையும் தனியார் கம்பெனிகளின் சுங்கச்சாவடிக் கொள்ளையில் சிக்கும். மக்களுக்கு வீண் செலவு எகிறும்.
 
இரண்டு மடங்கு செலவு!
‘‘பொள்ளாச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தில் 378 கிலோமீட்டர் சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் வேலையை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு 233 கோடியே 93 லட்சம் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. பராமரிப்பு               வேலைகளுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள சாலைகள் ஒன்றும் குண்டும் குழியுமானவை அல்ல. ஏற்கெனவே நல்ல தரத்தோடு இருப்பவைதான். அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்தச் சாலைகளைப் பராமரிக்க பெரிய செலவு பிடிக்காது.
அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தால், பராமரிப்புப் பணியைச் செய்ய எட்டு கிலோமீட்டருக்கு இரண்டு பேர் வீதம் 94 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாதச் சம்பளம் கொடுத்தால், வெறும் 6 கோடியே 5 லட்சத்து 73 ஆயிரத்து 600 ரூபாய்தான் செலவாகும். இதோடு இதர செலவுகளையும் சேர்த்தால் மொத்தமாக ஊழியர்களின் சம்பளத்துக்காக வெறும் 7 கோடி ரூபாய்தான் செலவாகும். சாலைகளுக்குத் தேவையான இடுபொருள்களை நல்ல தரத்துடன் வாங்கினால்கூட அதன் செலவு 90 கோடி ரூபாய்க்கு மேல் போகாது. எப்படிக் கணக்குப் போட்டாலும் மொத்தமாக 100 கோடி ரூபாயில் இந்தச் சாலைகளைத் தரமாகப் பராமரிக்க முடியும். ஆனால், அரசு வம்படியாகத் தனியார் நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து, கூடுதலாக 133 கோடி ரூபாயையும் கொடுத்துள்ளது. இதன் பின்னணி, கமிஷன் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

இதே அடிப்படையில் கிருஷ்ணகிரி கோட்டச் சாலைப் பராமரிப்புக்குக் கூடுதலாகக் கொடுக்கப்பட்ட தொகை 310 கோடி ரூபாய். திருவள்ளூருக்கு 450 கோடி ரூபாயும், ராமநாதபுரத்துக்கு 200 கோடி ரூபாயும் கூடுதலாகக் கொடுத்துள்ளனர்’’ என்று வேதனையோடு நம்மிடம் சொன்னார், நெடுஞ்சாலைத் துறையின் அனுபவம் வாய்ந்த அதிகாரி ஒருவர். அதாவது, மொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய்க்குள் முடிக்க வேண்டிய வேலைக்கு, கூடுதலாக ஆயிரம் கோடியைக் கொடுத்து இரண்டாயிரம் கோடி ரூபாயைச் செலவழிக்கிறது தமிழக அரசு. ‘‘இதில் பொள்ளாச்சி ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்குப் பங்கு இருக்கிறது’’ எனக் கோட்டை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

பகடைக்காயாகும் அதிகாரிகள்! 

தனியார் நிறுவனங்கள் செய்யும் வேலைகளை உதவிப் பொறியாளர், உதவிக் கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் என மூன்று அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள். தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் இருந்தால்தான் வசதி என்று, கான்ட்ராக்ட் எடுக்கும் தனியார் நிறுவனமே டிரான்ஸ்பரில் அதிகாரிகளைக் கொண்டு வந்துவிடுகிறது. அதற்கு ஆகும் செலவையும் அந்தத் தனியார் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. இப்படி வரும் அதிகாரிகள், அந்தத் தனியார் நிறுவனம் தயாரிக்கும் திட்ட மதிப்பீடுகளுக்கு அப்படியே ஒப்புதல் அளிக்கும் வேலையைச் செய்கின்றனர்.

‘‘பொள்ளாச்சி பணியை எடுத்த அதே நிறுவனம்தான், ஜூலை 1-ம் தேதியிலிருந்து விருதுநகர் கோட்டத்தில் உள்ள சாலையைப் பராமரிக்கும் வேலையையும் எடுத்துள்ளது. அதற்காக தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைப் பணி மாறுதல் செய்து விருதுநகர் மாவட்டத்துக்குள் அந்த நிறுவனம் கொண்டுவந்துள்ளது. சாலைகளின் திட்ட மதிப்பீட்டைத் தயாரிக்கும் பணியைக்கூட அரசு அதிகாரிகள் செய்யவில்லை. மாறாக, தங்களது ஆட்களை வைத்து அந்த நிறுவனம் செய்துள்ளது’’ என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள்.

சாலை மேம்பாட்டுப் பொருள்களிலும் ஊழல்!

‘‘தமிழகம் முழுவதும் சாலைகளுக்குத் தேவையான பெயர்ப் பலகை, பெயின்ட், சாலை ஓரங்களில் போடப்படும் தடுப்பு வேலி போன்ற பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவரின் நிறுவனத்தில்தான் இந்தப் பொருள்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிகாரத்தில்  இருப்பவருக்கு  வேண்டியவர் என்பதால், அவர் வைத்ததுதான் விலை. ஆய்வு செய்து எந்தப் பொருளையும் வாங்குவது இல்லை சம்பந்தப்பட்ட சாலை ஆய்வாளர்களின் ஆலோசனை கேட்கப் படுவதில்லை. இதனால், ஆண்டுதோறும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அரசுப் பணம் அந்த நிறுவனத்துக்குப் போகிறது’’ என்று நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார்.

எல்லாருக்கும் பங்கு!

‘‘கமிஷன் இல்லாமல் கான்ட்ராக்ட் இல்லை என்பது பழைய விதிதான். ஆனால், அதன் சதவிகிதம் மட்டும் ஆட்சிக்கு ஆட்சி உயர்ந்துகொண்டே போகும். கடந்த ஜெயலலிதா அரசில் 35 சதவிகிதமாக இருந்தது, இப்போது 45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. காரணம், கூவத்தூரில் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். அதோடு, வலுவான எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க-வில் சிலருக்கும், காங்கிரஸ் தரப்பில் சிலருக்கும் இந்தத் தொகையில் பங்கு கொடுக்கப்படுகிறது. நிலையற்ற ஆட்சியைக் காப்பாற்ற இது ஆளும்கட்சிக்குத் தேவைப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாமல் அரசியல் நடத்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் இது தேவைப்படுகிறது. டெண்டருக்கு விண்ணப்பிக்கும்போதே கமிஷனைக் கொடுக்க வேண்டும். இப்படி 45 சதவிகிதம் கமிஷனாகக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 55 சதவிகிதத் தொகையில் வேலைகளையும் முடித்து, லாபமும் பார்க்க வேண்டுமானால்... தரமற்ற முறையில் கான்ட்ராக்ட் பணியைச் செய்தால் மட்டுமே சாத்தியம். அதுதான் தமிழகம் முழுக்கத் தற்போது நடந்துகொண்டிருக்கிறது’’ என வேதனையோடு குறிப்பிட்டார் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்.

‘‘முன்பெல்லாம் டெண்டர்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். 2 சதவிகித அளவுக்கே கவனிப்பு இருக்கும். ஆனால், கூவத்தூர் பேரத்துக்குப் பிறகு நிலைமை மாறியுள்ளது. அது 7 சதவிகிதமாக ஆகிவிட்டது. ஏற்கெனவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கப்பட்ட 2 சதவிகிதம், இப்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சில குறிப்பிட்ட எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கப்படுகிறது. முன்பு கட்சி நிதி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது அது இல்லை. அதனால், அமைச்சர்களின் காட்டில்தான் இப்போது மழை’’ என்று முன்னாள் அமைச்சர் ஒருவரே நம்மிடம் சொன்னார்.

அரசாங்கத்தில் கமிஷன் இருக்கும். ஆனால், கமிஷனே அரசாங்கமாக மாறி வருகிறது.

- ஜோ.ஸ்டாலின்
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்

டெண்டர் யாருக்கு?

‘‘க
ட்சியையும் ஆட்சியையும் நடத்துவதில் அடித்துக் கொள்பவர்கள், எதிரும் புதிருமாக இருப்பவர்கள், கமிஷனைப் பங்கு பிரிப்பதில் ஏகோபித்த ஒற்றுமையுடன் இருக்கின்றனர். அ.தி.மு.க-வில் இருந்து தனி அணியாகப் போன ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள்தான் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் பகுதிகளில் பெரும்பாலான அரசு டெண்டர்களை எடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் விடப்படும் டெண்டர்கள் திவாகரன் கை காட்டும் ஆட்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன. கொங்கு மண்டலத்தில் விடப்படும் டெண்டர்கள் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியின் ஆசி பெற்றவர்களுக்கு விடப்படுகின்றன’’ என்கிறார்கள் நேர்மையான சில கான்ட்ராக்டர்கள்.

பிரிக்கும் கணக்கு!

அமைச்சர் - 23 சதவிகிதம்.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் -  13 முதல் 15 சதவிகிதம்.
அதிகாரிகள் - 5 முதல் 7 சதவிகிதம்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ – 2 சதவிகிதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக