புதன், 12 ஜூலை, 2017

நெல்லை சரவணா செல்வரத்தினம் அங்காடி மூட நீதிமன்றம் உத்தரவு!

பி.ஆண்டனிராஜ் சே.சின்னதுரை :விதிமுறைகளை மீறி கட்டடம்
கட்டப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு சீல் வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, திட்டக்குழும அதிகாரிகள் அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தனர். நெல்லை தெற்குப் புறவழிச் சாலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் திறக்கப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டப்பட்டதில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருப்பதாகத் தொடக்கத்திலிருந்தே புகார்கள் வந்தன. கட்டடத்தின் முகப்பை மறைப்பதாகக் கூறி, சாலையில் இருந்த பெரிய மரத்தை வெட்டியதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் எழுந்தன. அத்துடன், இந்தக் கடைக்காக திடீரென அந்த இடத்தில் பஸ் நிறுத்தம் ஏற்பாடுசெய்ததாக காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர், போக்குவரத்துத் துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.


 இந்த நிலையில், இந்தக் கட்டடம் கட்டப்பட்டதில் விதிமுறை மீறல்கள் இருப்பதாக, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத் இனிகோ என்பவர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார்செய்தார். ஆனால், அவரது மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ’’நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் செயல்பட்டுவருகிறது. அந்தக் கட்டடம் எந்தவித பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அதில், நிரந்தர மின் இணைப்பு பெறப்படவில்லை. கழிவுநீர் செல்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழுமையாக கட்டடப் பணிகள் முடிவடையாத நிலையில், டிசம்பர் 23-ம் தேதி அவசர கதியில் இந்த வணிக வளாகம் திறக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தால் தெற்குப் புறவழிச் சாலையில் உள்ள குடியிருப்புகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

வாகனங்களை பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் நிறுத்துவதால் சிரமம் ஏற்படுகிறது. சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தக் கட்டடத்தில், விபத்துக் காலத்தில் வெளியேற அவசர வாயில் வசதி செய்யப்படவில்லை. தரைத் தளத்தில் கார் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டதாகச் சொல்லிவிட்டு,அங்கு நகைக்கடை நடத்துகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார் பார்க்கிங் செய்யவேண்டிய தரைத் தளத்தில் நடத்தப்படும் நகைகடையை உடனடியாக மூடி சீல் வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கட்டடத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, மதியம் 2.30 மணிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்

 இதையடுத்து, கட்டடத்துக்கு சீல் வைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன்படி, உள்ளூர் திட்டக் குழும கண்காணிப்பாளரான நாராயணன் தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் குழுவினர், தரைத் தளத்தில் செயல்பட்டுவந்த நகைக் கடையில் இருந்த ஊழியர்களை வெளியேற உத்தரவிட்டனர். அதன்படி அவர்கள் வெளியேறியதும், கடையை மூடி சீல் வைத்தனர் அதிகாரிகள்.  vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக