புதன், 12 ஜூலை, 2017

அக்ரஹார behaviour' என்பது வெறும் பார்ப்பன வெறுப்பா? வரலாறு என்ன சொல்கிறது!

Ganesh Babu '  அக்ரஹார behaviour'! வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.
சென்னை மாகாணத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கி, அதன் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்து பல சமூகநீதி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அன்றைய சென்னை மாகாணப் பிரதமராக இருந்த ஓமாந்தூர் இராமசாமியாரால் தொடர்ந்து இட-ஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு, 1947-48ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்புவாரி உரிமையை 14 சதவீதமாக அவரால் உயர்த்தப்பட்டதும், அதனாலேயே அவர் 'தாடியில்லாத ராமசாமி' (பெரியார்) என்று போற்றப்பட்டதையும் நாம் அறிவோம்.
இட-ஒதுக்கீட்டை இன்றே இத்தனை கடுமையாக வெறுக்கும் பார்ப்பனர்கள், அன்று இன்னும் பலமடங்கு அதிகமாகக் கொந்தளித்திருப்பார்கள் என்பது இயல்பானது. அரசியலில் எதையும் யார் வேண்டுமானாலும் எதிர்த்துப்போராடலாம் என்பதுதானே மக்களாட்சியின் மாண்பு?
அப்படி பார்ப்பனர்கள் வீதிக்கு வந்து வகுப்புவாரி உரிமையை எதிர்த்துப் போராடியிருந்தால் நம்மால் புரிந்துக்கொண்டிருக்கமுடியும்.
ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது.

1930களின் இறுதியிலேயே அமலுக்கு வந்திவிட்ட இட-ஒதுக்கீடு விடயத்தில் நாடு சுதந்திரம் அடைந்து, 1950ல் இந்திய அரசியலைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும்வரை மௌனம் காத்தனர்.
1950ல் பார்ப்பன மாணவியான செண்பகம் என்பவர் நீதிக்கட்சி ஆட்சியினால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி உரிமையினால் தனக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதேப்போலவே சி.ஆர்.சீனி வாசன் என்ற பார்ப்பன மாணவரும் தனக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று மனுப் போட்டார்.
அதாவது, வகுப்புவாரி உரிமை உத்திரவு இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் 15வது விதி மற்றும் 29(2)வது ஆகியவற்றுக்கு முரணானது என்றும், தங்களது அடிப்படை உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உரிமையை ரத்து செய்யவேண்டும் என்றும் இவர்கள் வாதிட்டனர்.
இந்தப் பார்ப்பன மாணவர்களின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் திரு.அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இவர் வேறுயாருமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் உறுப்பினர். நம் மக்களுக்கான வகுப்புவாரி உரிமைகளை வெள்ளைக்காரனிடம் போராடி பெறமுடிந்த நம்மால், உயர்நீதிமன்றத்தில் அதைக் காப்பாற்றமுடியவில்லை. அல்லாடி அய்யரும், அவர் உருவாக்கிய அரசியலமைப்பும் நம்மைத் தோற்கடித்தன.
வகுப்புவாரி உரிமையை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நிற்க.
அப்போது மனுதாரரான மாணவி செண்பகம் துரைராஜன் மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பிக்காமலேயே இப்படியொரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் என்பது நீதிமன்றத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டது. எனினும், வகுப்புவாரி உரிமை செல்லாது என்கிற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே, உச்சநீதிமன்றமும் உறுதிசெய்து நமக்கு ஆப்படித்தது!
அதற்குப் பிறகு இந்திய அரசியலமைப்பைத் திருத்தக்கோரி திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் வழக்கம்போல பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று மக்களுக்காக களத்தில் நின்று டெல்லிக்கு ரிவீட் அடித்தன.
இவர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், 'திராவிட நாடு' கோசம் மென்மேலும் வலுப்பொற இதுவே தூண்டுதலாக அமையும் என்று அஞ்சிய மத்திய அரசு, திராவிட இயக்கங்களிடம் அடிப்பணிந்ததன் காரணமாக, 18.6.1951 அன்று இந்திய அரசியலைப்பின் முதல் சட்டத்திருத்தம்(The first Amendment of the Constitution, 1951) நடைமுறைப்படுத்தப்பட்டது.
இப்படி எத்தனையோ பார்ப்பன சதிகளை எல்லாம் திராவிட இயக்கம் முறியடித்ததன் பயனாகத்தான், இன்றும் வகுப்புவாரி உரிமைகளால் நம் பிள்ளைகள் பயன்பெறுகிறார்கள் என்பது தனிக்கதை.
'அக்ரஹார behaviour'க்கு இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. இனி, அந்த behaviour குறித்த முடிவுகளை உங்களிடமே விடுகிறேன். மேலும், 'சேரி behaviour' என்றெல்லாம் பேசி தன் பார்ப்பன திமிரை வெளிப்படுத்தி, நாங்கள் இந்த நல்ல செய்திகளை எல்லாம் பதிவு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தமைக்காக 'பிக்பாஸ்' காயூ மாஸ்டருக்கு என் நமஸ்காரங்கள்! 😛
-GANESH BABU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக