சனி, 15 ஜூலை, 2017

BBC :மருத்துவ படிப்பில் 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசாணை நீக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையின்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மாநில அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.<>இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வை நடத்தி, அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்கவேண்டுமென மத்திய அரசு கூறியது.
மத்திய அரசின் இந்த விதியை எதிர்த்தும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நடத்தவும் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் "தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி சேர்க்கை மசோதா" ஒன்றை நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில், நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யும் வகையில் ஒரு அரசாணையை மாநில அரசு வெளியிட்டது. மீதமிருக்கும் 15 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ பாடத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 6877 மேல்நிலைப் பள்ளிகளில் 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்களத் தேர்வு செய்து படித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 268 பள்ளிகளில் வெறும் 4675 மாணவர்கள் மட்டுமே அறிவியல் படித்துள்ளனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களில் 88,431 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் சிபிஎஸ்இயின் கீழ் படித்தவர்கள் 4675 மாணவர்கள்தான். இது தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் சுமார் ஐந்து சதவீதம் மட்டுமே. மேலும் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன.
ஆகவே, எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசால் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படும் இடங்களில் 85 சதவீதம் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும் மீதமுள்ள 15 சதவீதம் மற்ற பிரிவுகளின் கீழ் படித்தவர்களுக்கும் ஒதுக்கப்படும் என தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
மாநிலத்தில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களை 15 சதவீதம் அளவுக்கு அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள இடங்களில் இந்த முறை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
இந்நிலையில், இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த சசி சச்சின் உள்ளிட்ட சில மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணை மருத்துவக் கவுன்சிலின் விதிகளுக்கு எதிரானது மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையை கட்டுப்படுத்தும் அதிகாரம் மருத்துவக் கவுன்சிலுக்கு மட்டுமே உண்டு என்றும் மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வின் அடிப்படையில் பட்டியலைத் தயாரித்து அதனடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டுமென்றுதான் உத்தரவிட்டிருக்கிறது; ஆகவே தமிழக அரசின் அரசாணை செல்லாது என அறிவிக்க வேண்டுமெனக் கோரினர்.
மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில அரசு கடைசி நேரத்தில் இந்த ஆணையை பிறப்பித்திருப்பதால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், தமிழக அரசு அனைத்து அம்சங்களையும் பரிசீலித்தே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் இந்த விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க தங்களுக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு இப்போதும் நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, தமிழக அரசின் அரசாணை மருத்துவக் கவுன்சிலின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்வதாக அறிவித்தார். புதிதாக தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும்படியும் உத்தரவிட்டார்.
தீர்வு என்ன?
"இம்மாதிரியான இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லாது என்று தெரிந்தே, இந்த அரசு இப்படி ஒரு இடஒதுக்கீட்டை செய்தது. குஜராத் மாநிலத்தில் இதுபோல இடஒதுக்கீட்டைச் செய்தபோது, நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இந்தப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு, தமிழக அரசின் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதுதான். மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைப் போல, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் தமிழக மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலையைப் பெற வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்" என பிபிசியிடம் தெரிவித்தார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவீந்திரநாத்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்யுமா என்பது இதுவரை தெளிவாகவில்லை. அப்படி மேல் முறையீடு செய்யும்பட்சத்தில் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மேலும் தாமதமாகக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக