திங்கள், 10 ஜூலை, 2017

புதுச்சேரி .. கிரண் பேடியின் 3 எம்எல்ஏக்கள் நியமன கோரிக்கை ... சபாநாயகர் வைத்திலிங்கம் திருப்பி அனுப்பினார்!

பாஜகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பான கோப்பை
ஏற்காமல் சபாநாயகர் வைத்திலிங்கம் நிராகரித்து திருப்பி அனுப்பினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுடன், அரசுக்கு ஆலோசனை வழங்க 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் நியமித்துக் கொள்ளலாம். இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்று தலைமை செயலருக்கு அனுப்பி வைக்கும். தலைமைச் செயலர் அதை மாநில அரசிதழில் வெளியிடச் செய்வார். அதன்பிறகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
ஆனால் தற்போது மாநில அரசின் பரிந்துரையில்லாததுடன், குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறாமலேயே மத்திய உள்துறை அமைச்சகமே நேரடியாக பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளது.

இந்நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அவர்கள் நேரில் சென்று தங்கள் நியமனம் தொடர்பாக தெரிவித்து பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் எனக் கேட்டனர். அப்போது, அரசிதழில் வெளியாகட்டும் என சபாநாயகர் வைத்திலிங்கம் பதில் கூறியிருந்தார்.
இதற்கிடையே நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்ததால் கிரண்பேடி, ஆளுநர் மாளிகையில் இரவோடு இரவாக 8 மணியளவில் ரகசியமாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு சட்டப்பேரவையில் அலுவலக அறை, சட்டப்பேரவையில் இருக்கை வசதி, எம்எல்ஏ அடையாள அட்டையும் வழங்க வேண்டும் எனக் கோரி பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதற்கிடையே ஆளுநர் செயலகத்தில் இருந்து 3 நியமன எம்.எல்.ஏக்கள் பதவிப் பிரமாணம் தொடர்பான கோப்பு பேரவைத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்காமல் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அக்கோப்பை திருப்பி அனுப்பி விட்டார்.
இந்நிலையில் சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் ஆளுநர் செயலர் தேவநீதிதாஸுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் "நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக முறையான தகவல் ஏதும் வரவில்லை. அதனால் ஆளுநர் அலுவலகத்திலிருந்து வந்த கோப்பு திருப்பி அனுப்பப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக