வியாழன், 6 ஜூலை, 2017

“2ஜி வழக்கில் வரும் தீர்ப்பு தமிழகத்துக்கே நல்ல செய்தியாக இருக்கும்.... எச்ச .ராஜா

மின்னம்பலம் :இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி
அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக திமுக-வைச் சேர்ந்த ஆ.ராசா பதவி வகித்தார். அப்போது தொலைத் தொடர்பு உரிமமான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்குத் தணிக்கை குழுவின் அறிக்கையில் சொல்லப்பட, அது பூதாகரமாக வெடித்தது.
2009இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., ராசாவின் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தாலியா, தொலைத் தொடர்புத்துறையின் முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹூரா ஆகியோரின் இறுதி வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
அப்போது நீதிபதி சைனி, “வழக்கின் ஆவணங்கள், வாதப்பதிவுகள் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் படிக்கக் கால அவகாசம் வேண்டும். எனவே, வழக்கை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன். அதற்குள் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய விரும்பினால் செய்யலாம்” என்று அறிவித்து ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் நேற்று ஜூலை 5ஆம் தேதி வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, “ஆவணங்களைப் படித்துப் பார்க்க மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் பதிவு செய்ய விரும்பினால் செய்யலாம். ஆகஸ்ட் 25இல் இருந்து பத்து நாள்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
எனவே வரும் ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளிவரக்கூடும்.
இதற்கிடையில் பாஜக-வின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா, “2ஜி வழக்கில் வரும் தீர்ப்பு தமிழகத்துக்கே நல்ல செய்தியாக இருக்கும். பெரிய விடிவு காலம் கிடைக்கும். திமுக ஊழலின் ஊற்றுக்கண்” என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுக-வை பிஜேபி துண்டாடிக் கலகலக்க வைத்திருக்கிறது. ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்காது என்றும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றும் அவை நடப்பதற்கு முன்னரே தொடர்ந்து சொல்லிவந்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. அதன்படியே நடந்தது. அதிமுக-வின் வானிலை அறிக்கையை தமிழிசை வாசித்தது போல… இப்போது திமுக-வின் வானிலை அறிக்கையை ஹெச்.ராஜா வாசித்துக் கொண்டிருக்கிறார். எனவே, “2ஜி வழக்கின் தீர்ப்பு பற்றி பாஜக-வுக்கு ஏதும் தகவல் கிடைத்திருக்கிறதா? அதை வைத்து அதிமுக-வைப் போன்று தமிழகத்தில் திமுக-வையும் சிதைக்க பாஜக முயற்சி செய்கிறதா?” என்ற விவாதங்கள் தமிழ்நாட்டு அரசியல்களத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக