திங்கள், 31 ஜூலை, 2017

கடத்தப்பட்டாரா ஆதினம்! 1000 கோடி சொத்துக்கள் கொண்ட காஞ்சி தொண்டை மண்டல ஆதீன சாமியாரை காணவில்லை.

மின்னம்பலம் :ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் கொண்ட காஞ்சிபுர தொண்டை மண்டல ஆதின மடாதிபதியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதின மடத்தின் 232வது மடாதிபதியாகத் திருவம்பல தேசிய ஞானப் பிரகாச பரமாசியார் இருந்து வருகிறார். இந்த ஆதின மடத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞானப் பிரகாச பரமாசியார் காணாமல் போய்விட்டதாகவும், அவரைக் கண்டுபிடித்து தரும்படியும் தொண்டை மண்டல ஆதின முதலியார் சங்கத்தின் மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆதின மடாதிபதி காணாமல் போய் உள்ள நிலையில், அங்கு நித்யானந்தாவின் படத்தை வைத்து அவரது சீடர்கள் பூஜை செய்வதாக தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

எனவே மடாதிபதி நித்யானந்தாவின் ஆதரவாளராக மாறினாரா அல்லது நித்யானந்தாவின் சீடர்களால் கடத்தப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுரை ஆதினத்தை நித்யானந்தா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இதன் பின்னர் மதுரை ஆதினம் அருணகிரி, இளைய ஆதினம் பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக