வெள்ளி, 23 ஜூன், 2017

ஷாலின் :திமுக ஒரு கட்சியாக upgrade /update செய்துகொள்ள வேண்டி உள்ளதை தோழர் ஸ்டாலின் ..

Shalin Maria Lawrence எனக்கு 5 எனக்கு வயாதாகும்போதிருந்தே நான் திமுகவை
பற்றி அறிந்திருக்கிறேன் .என்னை மடியில் போட்டுகொண்டு என் தாய் திமுகவை பற்றி பேசியதெல்லாம் எனக்கு இப்பொழுதும் காதில் கேட்டுக்கொண்டிருந்தது .1991 இல் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டபோது என் குடும்பத்தினரோடு சேர்ந்து என்னவென்று தெரியாமல் கூடவே நானும் அழுது இருக்கிறேன் . திமுகவின் வரலாறு என்ன ,திமுகவின் எண்ணிலடங்கா சாதனைகள் என்ன அனைத்தும் அறிந்திருக்கிறேன் .நான் ஒரு திமுக விசுவாசி .எனக்கு கலைஞர் என்றால் மிகவும் ...மிகவும்...பிடிக்கும் .
திமுக தலைவர்கள் மீது தனி நபர் தாக்குதல்கள் நடக்கும்போது நான் நிறைய சண்டை போட்டு இருக்கிறேன் .அதே போல் திமுக மீது பொய் பழிகளை போடும்போதும் நான் கருத்தியல் ரீதியாக மோதி இருக்கிறேன் .எனக்கு தெரிந்து தமிழகத்தின் விடிவுகாலம் திமுகவின் கையில்தான் உள்ளது .
கடந்த ஆறு வருடங்கள் அதிமுக வசம் இருந்த தமிழகம் திமுகவிடம் இருந்திருத்தல் தமிழகம் இப்பொழுது இருபதை விட பல மடங்கு வளர்ச்சியின் பாதையில் சென்றிருக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து .
ஆனால் ...
இங்கே ஒரு விஷயம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.திமுக ஆட்சி என்பது வேறு ,திமுக என்கிற கட்சி வேறு .ஆண்டாண்டுகாலமாக திமுக சிறந்த ஒரு ஆட்சியை மட்டுமே கொடுத்து ,ஒரு அரசாக முன்னேறிக்கொண்டே தான் இருக்கிறது .ஆனால் கட்சி முன்னேறி இருக்கிறதா ? has it been upgraded ? updated ? இங்கே முன்னேற்றம் என்பது மாவட்ட செயலாளர் இன்னோவாவில் இருந்து பெனஸுக்கு மாறினார் இல்லை எம் எல் ஏ மகன் பாரின் சென்று படித்தார் என்பது இல்லை .மாறாக திமுகவின் கடைநிலை தொண்டனின் அரசியல் அறிவு எப்படி இருக்கிறது ,அவன் தெளிவாக இருக்கிறானா ,சமூக நீதி கொள்கைகள் வலு பெற்றிருக்கிறதா ,மேலிருந்து கீழாக எல்லோரிடமும் காணப்படுகிறதா என்பதாகும் .
சில மாதங்களுக்குமுன் ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி அடித்த போஸ்டர் ஒன்று அதிக கேலிக்குள்ளானது "சீன பெருஞ்சுவர் " என்று இருக்க வேண்டிய இடத்தில் "ஈன பெருஞ்சுவர் " என்று எழுத்துப்பிழையான போஸ்டர் அது .அந்த போஸ்ட்டரை பார்த்தலிருந்தே என் மனதில் ஒரு நெருடல் .திமுகவின் கடைநிலை தொண்டன் எப்படி இருக்கிறான் ?
திமுகவின் கடைநிலை தொண்டனின் கல்வி அறிவு எப்படி இருக்கிறது ? ஒரு எழுத்துப்பிழையை கூட சரி பார்க்கும் அளவிற்கு அவனிடம் பொறுமை இல்லையா ? இல்லை தமிழ் அறிவே இல்லையா ? ஒரு வேளை அவன் கல்வி கற்க வில்லையா ? திமுக கடைநிலை தொண்டனின் தனி மனித வளர்ச்சியில் எவ்வாறு பங்களிக்கிறது ?
சரி இந்த நிகழ்வை விடுவோம் .பொதுவாக திமுகவின் கடை ,இடை நிலை செயல்பாட்டாளர்கள் எப்படி இருக்கிறார்கள் ? கலைஞர் என்றால் கண்ணீர் வழிய கதறும் பெருபான்மையானவர்களுக்கு கலைஞர் மற்றும் அவரின் ஆட்சியின் மீது எதிர்தரப்பினர் விமர்சனம் வைத்தால் அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளும் அறிவு இருக்கிறதா ? கலைஞர் சாதனைகளை பட்டியலிட சொன்னால் ஓ......ங்கோ......மா ..... என்று பட்டியலிடுகிறார்கள் .இது கலைஞருக்கு அழகா ?
இவர்களில் 70 சதவிகித்தினருக்கு பகுத்தறிவு என்றால் என்ன என்பது கூட தெரியாது .இன்னும் கூட விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை படைத்துக்கொண்டு தன் சொந்த ஜாதியிலேயே பெண்ணுக்கு வரன் தேடி கொண்டிருக்கிறார்கள் ..இவர்கள் மேல் திராவிடத்தின் தாக்கம் என்ன ? திராவிட கொள்கைகளை இவர்கள் மனதில் வேரூன்ற செய்ய திமுக தவறிவிட்டதா ?
அண்ணா ,கலைஞர் வழி வந்தவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் துணிச்சலும் அதிகப்படியாக குறைந்து விட்டது என்பது மேலும் ஒரு சிறப்பு செய்தி . திமுக என்பது ஒரு ஜனநாயக கட்சி அந்த கட்சி தனிமனித விமர்சனம் தவிர மற்ற எல்லா விமர்சனத்திற்கும் உட்பட்டதே .விமர்சனமே வைக்க கூடாதென்றால் அதற்கு பெயர் கட்சி அல்ல .ஒவ்வொரு முறையும் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை ஆராய்ந்து பொய் என்றால் அதை உடைத்தெறிவதும் ,உண்மை என்றால் அதை பரிசீலனை செய்து விமர்சனத்திற்காளான விஷயங்களை சரி செய்வதும் அரசியல் கட்சிகளின் கடமையாகும் . Its mandatory for every political party to scrutinize itself .
உன் தகப்பன் மிகவும் நல்லவராக இருக்கலாம் ,அவர் தினமும் வேலைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று வரலாம் ,ஆனால் உன்னை வழியில் பார்ப்பவர் உன் தந்தையின் கண்கள் மற்றும் நகங்கள் மஞ்சளாகவும் இருக்கிறது என்று சொல்லும்பொழுது நீ அதை காதில் ஏற்றுக்கொள்ளாமல் என் தந்தை நன்றாக தான் இருக்கிறார் என்று சண்டை போட்டு கொண்டிருந்தால் சிறுது காலத்திலேயே உன் தந்தை மரணிக்கும் வாய்பிருக்கிறது .
ஆக கட்சியின் மீது விமர்சனம் வைத்தால் அதை ஆராய்வதே முறை .எந்த கட்சிக்கும் மறுசீரமைப்பு முக்கியமானதாகிறது .அதை விட்டுவிட்டு விமர்சனமே வேண்டாம் என்பவர் ,திமுக என்கிற கட்சியில் பிரச்சனையே இல்லை என்பவர் மூடர் .திரும்பவும் சொல்லுகிறேன் இவர்கள் எல்லாம் கலைஞரின் பேரை சொல்லுவதற்கு கூட அருகதை அற்றவர்கள் .
நமது கட்சி என்று சொல்லி மார் தட்டுவதோடு தொண்டனின் கடமை முடிந்து விடாது .கட்சியிலுள்ள பிரச்சனைகளை analyze செய்து விமர்சனம் வைப்பதும் ,கட்சியினை மறுசீரமைப்பு செய்வதும் கூட தொண்டனின் முக்கிய கடமைகளாகும் .கலைஞர் ஒரு சிறந்த தொண்டராய் இருந்ததினால்தான் அண்ணாவின் இறப்பிருக்கு பின்னர்கூட திமுகவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றார் .
இங்கு ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் .
திமுக என்பது ஒரு அரசியல் கட்சி ,அது மதம் அல்ல.கட்சியை மதமாய் பாவித்து தொண்டர்கள் செயல்பட்டால் உள்ளிருக்கும் குற்றம் குறைகள் கண்ணுக்கு தெரியாது ,அதுவும் கட்சியின் அழிவு பாதைதான் .
இன்றைய காலகட்டத்தில் திமுக ஒரு கட்சியாக upgrade /update செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை தோழர் ஸ்டாலின் உணர வேண்டும் .ஏனென்றால் அவர் ஒரு சிறந்த நிர்வாகி .ஒன்றை அழித்து திரும்ப கட்டமைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு சிறந்த நிர்வாகி அறிந்திருப்பார் .கூடவே இணையதள திமுகவினர் எத்தகைய அறிவோடும் ,தெளிவோடு இருக்கிறார்கள் என்பதனை தோழர் ஆராய்ந்து முடிவெடுத்தல் கட்சிக்கு நல்லது .
"எப்படி தனிப்பட்ட ஆளைவிட கட்சி பெரிது என்பது உண்மையோ, அதேபோல அதைவிட அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த வேறோர் உண்மையும் உண்டு. அது என்னவெனில் கட்சியை விடக் கொள்கையே முக்கியம், கட்சி கொள்கையை மறந்தோ, அல்லது நடைமுறைக்கு அதனைக் கொண்டு வராமலோ, கொண்டுவருவதற்கு விதமாக இராமல் குன்றியோ கிடக்குமானால், அந்தக் குறையை நீக்க முயற்சி எடுக்கும் வழிவகையும் இல்லையானால் அப்போது கட்சியைவிடக் கொள்கைதான் மேல்! கட்சியை விட்டுவிட்டாகிலும் கொள்கையைக் கைப்பிடிக்கவேண்டும். கொள்கை முக்கியமே ஒழிய கட்சியல்ல, என்று கூறும் நெஞ்சுரம் ஏற்படவேண்டும். அது வளர்ச்சிக்கு வழி! பிற முறைகள், வழிபாடு முறை! பலனளிக்காது!"
(கட்டுரை - லேபிள் வேண்டாம் - 30.03.1947)
மேலே உள்ளதை சொன்னவர் அறிஞர் அண்ணா -திமுகவை உருவாக்கியவர் .
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக