திங்கள், 26 ஜூன், 2017

அதிமுக வைகைசெல்வன் : சினிமா போஸ்டருக்கு பசைவாளி தூக்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னும் அதே தரத்தில் .. இன்னும் வளரல ..

தகுதியை வளர்த்துக் கொள்ளாத அமைச்சர் : வைகைச்செல்வன்
மின்னம்பலம் :முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திங்கள்கிழமை(இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை கூலிக்குப் பேசுகிற பேச்சாளர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் திராவிட இயக்கத்தையே கொச்சைப்படுத்தியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி . திராவிட இயக்கம் எழுத்தாலும், பேச்சாலும் வளர்ந்த இயக்கம். அந்த வரலாற்றுப் புரிதல் கூட இல்லாத ஒருவர் அமைச்சராக இருப்பதுதான் காலத்தின் கோலம்.
தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் தெருத் தெருவாக சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டு திரிந்த ராஜேந்திரபாலாஜியை சினிமா துறைக்கே அமைச்சராக்கியதுதான் திராவிட இயக்கத்தின் மாயாஜாலம்.அண்ணாவின் பேச்சு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முக வசீகரம், அம்மாவின் ஓயாத உழைப்பும்தான் இந்த நிலைக்கு தன்னை உயர்த்தியுள்ளது என்பதை மறந்து விட்டு இன்னும் போஸ்டர் ஒட்டியாகவே இருக்க நினைக்கும் அவர் தன்னை சற்றேனும் பண்புள்ளவராக வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் சேற்றை சந்தனம் என்று வாரி பூச நினைக்கும் அவர் அதைத் தன் மீதே பூசிக் கொள்வதுதான் விசித்திரம். சேற்றிடமிருந்து சந்தனத்தை எதிர்பார்த்தால் எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.
அதிமுக-வின் எக்கு கோட்டையாக இருந்த விருதுநகர் மாவட்டத்தை திமுக-விற்கு தாரை வார்த்து கழகத்தை புதை குழிக்குள் தள்ளிய அதிமுக-வின் சிறந்த மாவட்டச் செயலாளர் அவர்.
மாவட்டத்தின் ஒவ்வொரு ஒன்றிய நகரங்களுக்கு கட்சிக்கு, தலைமைக்கு விசுவாசமானவர்களை நியமிக்காமல் தனக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொண்டு கம்பெனி போல் நடத்துகிற பண்பாளர் அவர். அமைச்சராகி விட்ட பின்னும் கூட தன்னுடைய அடிப்படை குணங்களை, கீழ்மைத் தனங்களை மறக்காத மாமனிதர். அப்படிப்பட்ட அருமைக்கும், பெருமைக்கும் சொந்தக்காரரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னுடைய தகுதியை வளர்த்துக் கொள்ளாததை நினைத்து ஊரும், உலகமும் பரிதாபப்படுகிறது.
சண்டை போடுவதற்குக் கூட ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி எதுவும் இல்லாத ஒருவரோடு சண்டை போடுவது என்பது நம்முடைய தரத்தை குறைத்துக் கொள்கிற வேலை என்று கருதுகிறேன்.‘வசவாளர்கள் வாழ்க’ என்பதுதான் திராவிட இயக்கத்தின் பெருந்தன்மை. அந்தப் பெருந்தன்மையோடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மன்னிக்க எனக்கு திராவிட இயக்கம் கற்றுத் தந்திருக்கிறது. ஆகவே அவரை நான் மன்னிக்கிறேன் என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக